இறைவன் இந்தப் பிரமாண்டமான பேருலகைப் படைத்து, தன்னை வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையும், நாம் செய்கின்ற பாவங்களும், அல்லாஹ்விற்கு நன்றி கெட்டவர்களாக வாழ்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம்.
விடைபெற்று மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதன் உலக வாழ்க்கையில் பெருமளவில் மூழ்கித் திளைக்கின்றான். உச்சக்கட்டப் பெரும் தவறுகளைக் கூட மிகச் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருக்கின்றான்.
ஆனால், நம்மைப் படைத்த இறைவனைப் பொறுத்த வரை மனிதர்களாகிய நாம் சிறிய அளவிலான நன்மைகளை இறைவனுக்காகச் செய்தாலும், இறைவன் பெரிய அளவிலான கூலியை வழங்குவதும், அதற்காக அடியார்களைப் புகழ்ந்து பேசுவதும் என நன்மைகளால் நம்மை அலங்கரிக்கின்றான்.
மனிதர்கள் தன்னுடைய வாழ்க்கையில் அதிகமான பாவங்களில் ஈடுபட்ட பின், இறைவனுக்குப் பயந்து வருந்தி, திருந்திய பிறகு, தன்னுடைய அலட்சியத்தினால் மனிதன் எத்தகைய பாவங்களைச் செய்திருந்தாலும் அவனுக்கான மன்னிப்பை வழங்குவதன் மூலம் அவன் செய்த பாவங்களை இறைவன் அலட்சியப்படுத்துகின்றான்.
மனிதர்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு செய்யும் நற்காரியங்களுக்காக விலைமதிப்பற்ற சொர்க்கத்தைத் தயார் செய்து வைத்து, தான் நாடியோருக்கு அவற்றைப் பரிசாக வழங்கி மனிதர்களை இறைவன் மகிழ்விக்கின்றான்.
மனிதர்கள் செய்கின்ற சிறிய அமல்களுக்குக் கூட இறைவன் பெரிய அளவில் கூலியை வழங்கி மனிதர்களுக்குப் பேரருள் புரிகின்றான்.
இன்னும் சொல்வதாக இருந்தால், மனிதர்களாகிய நாம் அல்லாஹ்விற்குச் செய்யும் துரோகங்கள், நன்றி கெட்ட காரியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம். மனிதர்கள் தாங்கள் செய்து வரும் பாவங்கள் போன்றவற்றுக்கு அல்லாஹ் உடனுக்குடன் தண்டனையைக் கொடுப்பதாக இருந்தால், இந்த உலகத்தில் சிறிதளவு கூட நாம் எஞ்சியிருக்காத அளவிற்கு அழிந்து போயிருப்போம்.
ஆனால், மனிதர்கள் செய்கின்ற பாவங்களிலிருந்து திருந்துவதற்காக இறைவன் பல்வேறு விதமான பாக்கியங்களையும், பிரகாசமான வாய்ப்புகளையும் வழங்குகின்றான். அப்படிப்பட்ட வாய்ப்புகளை கவனமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால் மனிதர்களாகிய நாம் புனிதர்களாக மாறி விடுவதற்கான வாய்ப்புகளை இறைவன் தருவான்.
மகத்தான பாக்கியங்களில் மிகப்பெரும் பாக்கியம் தான் நாம் அடைந்திருக்கும் இந்த ரமழான் மாதம்! இந்த ரமழான் மாதத்தை மிகச் சரியாய் பயன்படுத்திக் கொள்கின்ற மனிதர்கள் தங்களுடைய வாழ்வில் உன்னதமான பல்வேறு அந்தஸ்த்துகளைப் பெறுவார்கள். மனிதர்களைப் புனிதர்களாக மாற்றுகின்ற அற்புத மாதம் தான் ரமழான்.
இப்படிப்பட்ட, நன்மைகளை வாரி வழங்கக்கூடிய ரமலான் இந்த வருடமும் நம்மை ஆரத்தழுவி இருக்கின்றது. நம்மை அடைந்து ஆரத்தழுவி இருக்கின்ற ரமலானை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமோ அவ்வாறு பயன்படுத்துவதற்குத் தவறிக் கொண்டிருக்கின்றோம்.
எத்தனையோ வருட ரமலான் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கின்றது. ஆனால் ரமலான் மாதம் நம்மிடத்தில் எப்படிப்பட்ட மாற்றத்தை எதிர்பார்க்கின்றதோ அப்படிப்பட்ட மாற்றங்கள் நம்மில் பெரும்பான்மையோரின் வாழ்க்கையில் இல்லாமலேயே எத்தனையோ ரமலான் நம்மை விட்டுக் கடந்து சென்றிருப்பதைப் பார்க்கின்றோம்.
அளப்பரிய நன்மைகளை வாரி வழங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கும் ரமலானை நம்மில் பெரும்பாலானோர் வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். அலட்சியமாகக் கருதிக் கொண்டிருக்கின்றோம்.
முஸ்லிம் சமூகத்திற்கு ஏன் இந்த அலட்சியம்? ஏனைய மற்ற மாதங்களைப் போல பொழுது போக்கிற்காக ரமலானைக் கழித்து விட்டும், கடந்து விட்டும் போனால் நஷ்டம் யாருக்கு என்பதையெல்லாம் முஸ்லிம் சமூகம் உணராமலேயே தங்களின் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
உலகத்தில் இலாபம் தருகின்ற ஒரு காரியத்தில் ஈடுபடச் சொன்னாலோ அல்லது இந்தச் செயலில் ஈடுபட்டால் கோடிகளில், இலட்சங்களில் தங்களின் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று சொல்லப்பட்டு விட்டாலோ அதற்காக இரவு பகலாகக் கண் விழித்திருந்து, பொருளாதாரத்தை இழந்து, உடல் உழைப்புகளைச் செலுத்தி அந்த இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறித்தனத்தில் களம் இறங்குகின்றோம்.
அதே வேளையில் இந்த உலகத்தில் கிடைக்கப்பெறாத, வாங்கவும் இயலாத அளப்பெரிய நன்மைகளையும், கூலியையும் இறைவன் தருவான் என்று சொன்னால் அலட்சியம் மேலோங்குகின்றது. அப்படிப்பட்ட அலட்சியப் போக்கைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ரமலானை நன்மைகளால் அறுவடை செய்வோம்.
அற்ப உலகமும், வேகமாக ஓடும் காலமும்
நாம் தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன கால கட்டம் என்பது மிக வேகமாக நம்மை விட்டுக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. கியாமத் நாளின் அடையாளங்களாக மனித வாழ்வின் ஏராளமான நிகழ்வுகள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்து மனித குலத்தை எச்சரிக்கை செய்தார்கள்.
அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்று தான் காலங்கள் சுருங்குதல். காலங்களின் அளவுகளில் இருந்து நீக்கப்படுகின்ற பரக்கத் கியாமத் நாளின் அடையாளங்களின் மிக முக்கியமான அடையாளங்களில் உள்ள ஒன்றாகும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
காலம் சுருங்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. ஓர் ஆண்டு ஒரு மாதத்தைப் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரத்தைப் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி நேரத்தைப் போன்றும், ஒரு மணி நேரம் தீ பற்றவைக்கும் (ஒரு நொடி) நேரத்தைப் போன்றும் மாறிவிடும்.
ஆதாரம்: முஸ்னது அஹ்மத் 10943
கடந்த காலங்களில் ரமழான் மாதம் முடிந்து அடுத்த ரமழான் வருவதற்கு நீண்ட நெடிய நாட்கள் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.
ஆனால் தற்போதைய காலகட்டங்களில் நாம் எதிர்கொள்ளும் ரமழான் நம்மிடத்தில் வருவதும் – நம்மை விட்டுப் பிரிந்து செல்வதும் நாம் உணர முடியாத அளவிற்கு அவ்வளவு வேகமாய் நம்மை விட்டுக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
காலங்கள் சுருங்கிக் கொண்டு வேகமாக விடைபெற்றுச் செல்வதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் மிகத் தெளிவாக உணர்கின்றோம். என்றாலும் கூட, இறைவன் நமக்கு வழங்குகின்ற பாக்கியங்கள் குறித்து பாராமுகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
மறுமை நாளின் நெருக்கத்தில் ஒருநாள் என்பது ஒருமணி நேரத்தைப் போன்றும், ஒருமணி நேரம் என்பது தீ பற்ற வைக்கின்ற ஒரு நொடி நேரத்தைப் போன்றும் மாறி விடும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
வாழ்வில் கிடைக்கின்ற பாக்கியங்களை வீணடித்து விடாமல் அதிகப்படியான அமல்களின் மூலமாக நம்முடைய வாழ்நாளை அதிகரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
வாய்ப்புக்களை பலமாக பற்றிப் பிடிப்போம்
இறைவன் மனிதர்களுக்கு அவர்களின் வாழ்வில் பல்வேறு விதமான வாய்ப்புகளை வழங்கி வாழ்க்கையை அனுபவிக்க செய்கின்றான். அப்படிப்பட்ட சிறப்பிற்குறிய வாய்ப்புகளை கன கச்சிதமாகப் பயன்படுத்தும் மனிதன் இறைவனிடத்தில் சிறப்பிற்குறிய அந்தஸ்துகளையும், விலைமதிப்பற்ற வெகுமதிகளையும் பெறுகின்றான்.
ஒருவேளை தனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளைத் தட்டிக் கழித்து விட்டு, உலக மோகத்தில் மூழ்கி விட்டாலோ, புனிதமான பாக்கியங்களை அலட்சியப்படுத்தி விட்டு தன்னுடைய வாழ்க்கையைக் கழித்து விட்டாலோ கைசேதப்பட்டவனாக மறுமையில் இறைவனைச் சந்திப்பான்.
ஒரு மனிதன் மரணித்து இறைவனை சந்திக்கும் வேளையில், தன்னுடைய வாழ்க்கையில் இறைவனுக்கு நன்றி செலுத்தாமல் வாழ்வைக் கழித்ததற்கு எந்தக் காரணத்தையும் சொல்லி தப்பிக்க இயலாது. அவ்வாறு காரணம் கூறினாலும் அத்தகைய காரணங்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் கூறும் சாக்குப் போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 6419
ஒரு மனிதனுக்கு அறுபது ஆண்டுகள் எட்டுகின்ற வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு, அவன் கூறுகின்ற சாக்குப் போக்குகள் சொல்லி தப்பித்து விடுவதற்கான வழிகளை அல்லாஹ் வழங்குவதில்லை.
வாழ்வில் வழங்கப்பட்ட பாக்கியங்களை மிகச் சரியாய் பயன்படுத்திக் கொண்டு இறைவனின் திருப்தியை பெறுவதற்குப் பாடுபட வேண்டும். அத்தகைய அற்புத வாய்ப்பு தான் ரமழான் மாதம்.
மேலும், மனிதர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
நாம் அவர்களுக்குப் பல்லாண்டுகளாகப் போதிய வசதி வாய்ப்புகளை வழங்கிய பின்னர், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது அவர்களிடம் வந்துவிட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்டவை அவர்களைக் காப்பாற்றாது என்பதைச் சிந்தித்தீரா?
அல்குர்ஆன் 26:205-207
வேதனையை அவன் காணும்போது, “(உலகிற்கு) மீளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமானால், நான் நன்மை செய்வோரில் ஆகிவிடுவேன்” என்று கூறாதிருக்கவும் (உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதைப் பின்பற்றுங்கள்.)
அல்குர்ஆன் 39:58
வாக்களிக்கப்பட்டது மனிதனுக்கு நிகழ்ந்த பிறகு, ‘பல்லாண்டுகளாகப் போதிய வசதி வாய்ப்புகளை வழங்கவில்லையா?’ என்று இறைவன் கேட்பான். மேலும், வேதனைகளைக் காணும்போது உலகிற்கு மீளும் வாய்ப்பு கிடைத்தால் நான் நன்மை செய்வோரில் ஆகிவிடுவேனே! என்றும் மனிதன் கதறுவதாக இறைவன் எச்சரிக்கின்றான்.
ரமழான் எனும் பாக்கியம்
இறைவன் இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் ரமழான் பேரருட்கொடையாகத் திகழ்கின்றது. இந்த பாக்கியம் பொருந்திய ரமழான் மாதத்தை அடைந்திருக்கும் முஸ்லிம்கள் நம்முடைய பாவங்களைப் பரிசுத்தப்படுத்தி புனிதர்களாக மாறுகின்ற வாய்ப்புகளைப் பெற வேண்டும்.
ரமழான் மாதத்தை அடைந்தவருக்கும், ரமழான் மாதத்தை அடையாதவருக்கும் இடையே இருக்கின்ற மகத்தான நன்மைகள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒற்றை சம்பவத்தின் மூலமாக மிகத் தெளிவாக விளக்குகின்றார்கள்.
உபைத் பின் காலித் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நபர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் (போர்க்களத்தில்) வீர மரணம் அடைந்தார். மற்றொருவர் ஒரு வாரமோ அல்லது சில நாட்களோ கழித்து (இயற்கையாக) மரணமடைந்தார். நாங்கள் (இரண்டாவதாக) இறந்தவரை அடக்கம் செய்த பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள்.
நாங்கள், “அவருக்காக துஆ செய்தோம். ‘இறைவா! அவரை மன்னித்து அவரது தோழருடன் சேர்ப்பாயாக!’ என்று கூறினோம்” என்றோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரது தொழுகைக்கும் இவரது தொழுகைக்கும், அவரது நோன்புக்கும் இவரது நோன்புக்கும், அவரது செயலுக்கும் இவரது செயலுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? நிச்சயமாக, அவர்களுக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் போன்ற வேறுபாடு இருக்கிறது” என்று கூறினார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் 2524
மேற்கண்ட சம்பவம் குறித்த செய்தி சற்று விரிவாக மற்றொரு இடத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளது.
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பலீ எனும் இடத்திலிருந்து இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர்.
அவர்களில் ஒருவர் மற்றவரை விட கடினமாக உழைத்துப் பாடுபடுபவராக இருந்தார். அந்தக் கடின உழைப்பாளி அறப்போர் புரிந்து வீரமரணம் அடைந்தார். இன்னொருவர் அவருக்குப் பின் ஓராண்டு வாழ்ந்தார். பின்னர் மரணமடைந்தார்.
மேலும் தல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் கனவு ஒன்று கண்டேன். (அதில்) நான் சொர்க்கத்து வாசல் அருகே இருந்தேன். அந்நேரத்தில் அவ்விருவரையும் கண்டேன். அப்போது சொர்க்கத்திலிருந்து ஒருவர் வந்தார். அவ்விருவரில் இறுதியாக இறந்தவருக்கு (சொர்க்கம் செல்ல) அனுமதியளித்தார். பின்னர் அவர் (வானவர்) மீண்டும் வெளியே வந்து, அறப்போரில் வீரமரணம் அடைந்தவருக்கு (சொர்க்கம் செல்ல) அனுமதியளித்தார். பின்னர் அவர் என்னிடம் வந்து, திரும்பிச் செல்வீராக! உமக்குரிய நேரம் இன்னும் வரவில்லை என்று கூறினார்.
காலையில் எழுந்ததும் தல்ஹா (ரலி) அவர்கள் அக்கனவை மக்களிடம் கூறலானார். அதைக் கேட்ட மக்கள் வியப்புற்றனர். இச்செய்தி தூதர் அவர்களுக்குக் கிடைத்தது. மக்கள் அது குறித்து நபிகளாரிடம் தகவல் அளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “மக்களே! எது குறித்து வியப்புற்று இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்குத் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இ(ந்த முதலாம)வர் அவ்விருவரில் கடின உழைப்பாளியாக இருந்தார். பிறகு அறப்போரிட்டு வீரமரணமடைந்தார். (எனினும்) கடைசியாக இறந்த (இரண்டாம)வர் அவருக்கு முன்பாக சொர்க்கம் சென்று விட்டாரே! (எனவே தான் வியப்புறுகிறோம்)” என்றனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “இவர் அவருக்குப் பிறகு ஓர் ஆண்டு வாழ்ந்தார் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “ஆம்! (உண்மைதான்)” என்றனர். அதற்கு நபி அவர்கள், “இந்த ஓராண்டில் இரண்டாமவர் ரமளான் மாதத்தை அடைந்து அந்த மாதத்தில் நோன்பு நோற்றிருப்பார் அல்லவா? மேலும் அந்த ஆண்டில் எத்தனையோ தொழுகைகளை ஸஜ்தா செய்து சிரம்பணிந்து நிறைவேற்றி இருக்கிறாரே!” என்று கூறினார்கள்.
அதற்கு தோழர்கள், ஆமாம் என்று கூறி ஆமோதித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனவே அவ்விருவரிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைவிட அதிகமாக (தர வரிசையில்) இடைவெளி உள்ளது” என்று கூறினார்கள்.
ஆதாரம்: இப்னுமாஜா 3915
கடந்த ரமலான் மாதத்தில் நம்மோடு வாழ்ந்த நம்முடைய உறவினர்கள், நண்பர்கள், நம்மோடு பழகியவர்கள் என்று நம்மோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த எத்தனையோ நபர்கள் இந்த ரமலானில் நம்மோடு இல்லை. மரணத்தைத் தழுவி விட்டார்கள். உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமக்கு இறைவன் இன்னும் திருந்துவதற்கான அவகாசத்தையும், வாய்ப்புகளையும் வழங்கி வாழச் செய்து கொண்டிருக்கின்றான்.
மரணித்து விட்ட அடியார்களுக்குக் கிடைக்காத அளப்பரிய பாக்கியங்கள், உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு ரமளான் மாதம் மூலம் பிரகாசமான மகத்துவம் நிறைந்த வாய்ப்புகள் மூலம் இறைவன் வழங்குகின்றான்.
இறைவனின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு நாள் வாழ்க்கையும், ஒவ்வொரு மணித்துளிகளும் எவ்வளவு விலை மதிப்பற்றது என்பதை மேற்கண்ட செய்தி மிகத் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
ஒரு மனிதர் இறைவனின் பாதையில் வணக்கவழிபாடுகள் செய்வதில் கடின உழைப்பாளியாகத் திகழ்கின்றார். பிறகு அவருக்கு மரணம் ஏற்பட்டு இறைவனிடத்தில் சேர்கின்றார்.
அவர் மரணித்த பிறகு அவருடன் வாழ்ந்த இன்னொரு நல்ல மனிதர் ஒருவருட காலம் இந்த உலகத்தில் வாழ்ந்து, இறைவனின் நெருக்கத்தைப் பெறுவதற்காக வணக்க வழிபாடுகள் செய்து, ரமளான் மாதம் எனும் அற்புதமான பாக்கியத்தை பயன்படுத்தி மிகச் சிறப்பாக வாழ்கின்றார்.
ஒருவருட காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை மிகக் கவனமாய் பயன்படுத்திய காரணத்தினால், பிரமாண்டமான பாக்கியம் பொருந்திய நன்மைகளை அல்லாஹ் அவருக்கு வழங்கி சிறப்பிக்கின்றான்.
நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ வருட ரமளான் மாதம் நம்மை ஆரத்தழுவி கடந்து சென்றிருக்கின்றது. அத்தகைய பாக்கியம் பொருந்திய ரமளான் மாதத்தை நாம் மிகச் சரியாகப் பயன்படுத்தி இருந்தால் நிச்சயமாக இறைவனின் நேசத்தையும் – நெருக்கத்தையும் பெற்று மகத்தான மனிதர்களின் பட்டியலில் பெயர் பெற்றிருக்க முடியும்.
புனிதனாக மாற்றும் ரமழான்
ரமழான் மாதம் மனிதர்களின் பாவங்களைக் கழுவி மனிதனைப் புனிதனாக மாற்றுகின்ற பாக்கியத்தைப் பெற்றுத் தருகின்றது. அத்தகைய கண்ணியம் நிறைந்த ரமழான் மாதத்தை சிறப்பாய் பயன்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானுடைய) ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்; மேலும் ஒவ்வொரு அடியாருக்கும் (அதில்) ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது.
ஆதாரம்: முஸ்னது அஹ்மத் 7450
ரமழான் மாதத்தின் இரவும், பகலும் புனிதம் நிறைந்தவை. ரமழான் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அடியார்களுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க பிரத்தியேகமான பிரார்த்தனை இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறுகின்றார்கள். இப்படிப்பட்ட ஏற்றுக் கொள்ளத்தக்க பிரார்த்தனையை பயன்படுத்திக் கொண்டு மனிதனைப் புனிதனாக மாற்றுகின்றது ரமழான்.
அம்ர் இப்னு முர்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்:
“அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை என்றும், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள் என்றும் சாட்சியம் கூறி, தினமும் ஐந்து நேர தொழுகையை நிறைவேற்றி, கடமையான ஜகாத்தை நிறைவேற்றி, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று (இறைவனிடம்) பிரார்த்தனை செய்தால் நான் சொர்க்கத்தில் யாருடன் இருப்பேன்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீ நிச்சயமாக உண்மையாளர் (சித்திக்கீன்) மற்றும் உயிர் தியாகிகள் (அஷ்ஷுஹதா) அவர்களுள் ஒருவராக இருப்பீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 3492
இறைவனின் கடமைகளை மிகச்சரியாக நிறைவேற்றும் போது, மனிதனுக்கு மறுமையில் மிகப்பெரும் கண்ணியத்தை இறைவன் வழங்குகின்றான். உண்மையாளர்களோடும், உயிர்தியாகிகளுடன் இருப்பார் என்று கூறி ரமழான் மனிதனைப் புனிதனாக மாற்றுகின்றது.
பாவங்களிலிருந்து காக்கும் கேடயம் ரமழான்
ரமழான் மாதம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் பாவங்களில் ஈடுபடுவதிலிருந்து காத்து மனிதனைப் புனிதனாக மாற்றுகின்ற கேடயமாக விளங்குகின்றது.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் பக்கம் நெருக்கமாக்குகின்ற மற்றும் நரகத்திலிருந்து என்னை தூரமாக்குகின்ற ஒரு அமலை எனக்கு கற்றுத் தாருங்கள்” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ‘என்னிடத்தில் பிரம்மாண்டமான விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்டுள்ளீர்கள். ஆனால், அல்லாஹ் யாருக்கு அதை எளிதாக்குவானோ அப்படிப்பட்டவர்களுக்கு எளிதானதாகும்’ என்றார்கள். பிறகு கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் அவனை நீ வணங்குவதாகும். தொழுகையை நிலைநாட்டுவதும், ஜகாத்தைக் கொடுப்பதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும், ஹஜ்ஜை நிறைவேற்றுவதுமாகும். பிறகு, ‘நன்மையின் வாசல்களை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். ‘நோன்பு ஓர் கேடயம் ஆகும். தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று தர்மம் பாவத்தை போக்கி விடும்’ என்று கூறினார்கள். பிறகு, ‘அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டு விலகிவிடும். அவர்கள் அச்சத்துடனும், ஆவலுடனும் தமது இறைவனைப் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்’ (அல்குர்ஆன் 32:16) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
ஆதாரம்: இப்னுமாஜா 3973 (சுருக்கம்)
நோன்பு ஓர் கேடயமாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று தர்மம் பாவத்தைப் போக்கி பரிசுத்தமாக்கி விடும் என்று கூறி ரமழான் மனிதனைப் புனிதனாக மாற்றுகின்ற பாக்கியமாய் திகழ்வதை நற்செய்தி கூறினார்கள்.
நரகத்தில் இருந்து காக்கும் கேடயம் ரமழான்
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு இறைவனின் நாட்டத்தினால் அவர் நரகில் விழுந்து விட்டாலும் கூட, இறையருளால் சொர்க்கத்தில் நுழைவிக்கின்ற பாக்கியத்தை ரமழான் பெற்றுத் தருவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.
…பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெளிவாகி விட்ட உரிமைக்காகக்கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்க மாட்டீர்கள்.
அப்போது அவர்கள், “எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)” என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், “நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று கூறுவான்.
அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தமது பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள்.
உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். “எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்” என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூசயீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை) நீங்கள் நம்பாவிட்டால், “அல்லாஹ், அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதனைப் பல மடங்காக்குவான். தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் வழங்குவான்” எனும் (4:40வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தமது தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் “(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது” என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்துபோயிருப்பார்கள். ஆகவே, சொர்க்க வாயிலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள் அதற்கு ‘ஜீவ நீர்’ (‘மாஉல் ஹயாத்’) என்று பெயர்.
உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இருமருங்கிலும் முளைத்து (நிறம் மாறி)விடுவார்கள். பாறையின் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும்.
ஆக, அவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (நரகத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), “இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச்செய்தான்” என்று கூறுவர்.
பிறகு (அவர்களிடம்) “நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு” என்று (நற்செய்தி) சொல்லப்படும்.
ஆதாரம்: புகாரி 7439 (சுருக்கம்)
நரகில் கரிக்கட்டைகளாக மாறியதற்கு பிறகு, ‘எங்களுடன் சேர்ந்து நோன்பு நோற்றவர்கள் நரகில் இருக்கின்றார்கள், அவர்களைக் காப்பாற்று இறைவா!’ என்று சொர்க்கவாசிகள் இறைவனிடத்தில் இறைஞ்சுவார்கள்.
பிறகு, கரிக்கட்டைகளாக மாறி விட்டவர்களை தன்னுடைய பேரருளால் “ஹயாத்” ஆற்றுக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களைப் பொழிவடைய செய்து இறைவனின் தனிப்பெரும் கிருபையினால் சொர்க்கத்தில் இறைவன் நுழையச் செய்வான்.
நோன்பாளிகளும் – கஸ்தூரியும்
நோன்பு நோற்பதின் சிறப்புகள் குறித்து இறைத்தூதர் யஹ்யா (அலை) அவர்கள் தன்னுடைய சமுதாய மக்களுக்குச் செய்த உபதேசம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (தனது தூதர்) யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு, ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும் படியும் உத்தரவிட்டான். ஆனால் அவற்றை பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாரிடம் கூறாமல் யஹ்யா (அலை) அவர்கள் காலதாமதம் செய்ய முற்பட்டார்கள்.
இந்நிலையில் (இறைத்தூதர்) ஈஸா (அலை) அவர்கள், (யஹ்யா அவர்களிடம்), “அல்லாஹ் ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உமக்கு உத்தரவிட்டான். (அவற்றைச் செயல்படுத்தும்படி) அவர்களுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும். அல்லது நான் உத்தரவிடவேண்டும். (இதை நீங்கள் செய்கிறீர்களா? அல்லது நான் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு யஹ்யா (அலை) அவர்கள், ஈஸா (அலை) அவர்களிடம் “இவ்விஷயத்தில் என்னை நீங்கள் முந்திக் கொண்டால் (காலம் தாழ்த்திய குற்றத்துக்காக) நான் பூமியில் புதையுண்டு விடுவோனோ, அல்லது வேறு தண்டனைக்கு நான் உள்ளாவேனோ என நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.
பிறகு யஹ்யா (அலை) அவர்கள் ஜெரூஸலத்தில் உள்ள பைத்துல்மக்திஸ் பள்ளிவாசலில் இஸ்ரவேல் மக்களை ஒன்றுகூட்டினார்கள். பள்ளிவாசல் (மக்கள் திரளால்) நிரம்பி, மக்களுக்கு இடம் கிடைக்காமல் அவர்கள் பள்ளிவாசலின் மேல்தளத்தின் மீது ஏறிக் கொண்டனர்.
அப்போது யஹ்யா (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
ஐந்து கட்டளைகளை நான் நிறைவேற்ற வேண்டுமென்றும், அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி உங்களையும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட வேண்டும் என்றும் அல்லாஹ் எனக்கு உத்தரவிட்டுள்ளான்.
முதலாவது கட்டளை
அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வழிபடுங்கள். அவனுக்கு வேறு யாரையும் இணையாக்காதீர்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனின் நிலை ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தமக்கே உரிய செல்வத்தில் பொன் அல்லது வெள்ளியைக் கொடுத்து ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார். அவர் (தம் அடிமையிடம்) “இது எனது வீடு; இது எனக்கு நீர் செய்ய வேண்டிய வேலை; நீர் வேலை செய்து (இதில் கிடைக்கும் வருமானத்தை) என்னிடமே கொடுத்து விட வேண்டும்” என்று கூறினார். அவ்வாறே அந்த அடிமையும் வேலை செய்தார். ஆனால் அதில் கிடைத்த (வருமானத்)தை தன் உரிமையாளரிடம் அளிக்காமல் வேறு யரோ ஒருவரிடம் கொடுத்தான். தம்முடைய அடிமை இவ்வாறு இருப்பது கண்டு உங்களில் யார் மகிழ்ச்சி அடைவார்? (இறைவன் வழங்கியவற்றை அனுபவித்து விட்டு அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை பிறருக்குச் செய்வது நியாயமா?)
இரண்டாவது கட்டளை
அல்லாஹ் தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். ஆகவே, நீங்கள் தொழும்போது (இங்கும் அங்கும்) திரும்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ், தொழுது கொண்டிருக்கும் தன் அடியார் தமது முகத்தை திருப்பாத வரை அவருடைய முகத்துக்கு நேராகத் தனது முகத்தை வைக்கிறான்.
மூன்றாவது கட்டளை
நோன்பு நோற்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். நோன்பு நோற்பவரின் நிலையானது, ஒரு கூட்டத்தில் தமது கைப்பை நிரம்ப கஸ்தூரியை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அந்தக் கஸ்தூரியின் மணம் அவர்களில் ஒவ்வொருவரையும் வியப்படையச் செய்கிறது. நோன்பு நோற்றவரின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விட நறுமணமிக்கதாகும்.
நான்காவது கட்டளை
தான தர்மம் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். தர்மம் செய்பவரின் நிலையானது, ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவரை எதிரிகள் கைது செய்து அவருடைய கையை கழுத்தோடு சேர்த்துப் பிணைத்து, சிரச்சேதம் செய்வதற்காக அவரைக் கொண்டு சென்றனர். அப்போது அந்தக் கைதி “(என்னிடமுள்ள) குறைவான நிறைவான (எல்லாப்) பொருள்களையும் உங்களிடம் பிணைத் தொகையாகச் செலுத்துகிறேன்” என்று கூறி (அவற்றை செலுத்தி) அவர்களிடமிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.
ஐந்தாவது கட்டளை
அல்லாஹ்வை நினைவுகூர்ந்து துதிக்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். அவ்வாறு அல்லாஹ்வை நினைவுகூர்ந்து துதிப்பவரின் நிலையானது, எதிரிகள் மிக வேகமாகப் பின்தொடர்ந்து வருகின்ற ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் பாதுகாப்பான கோட்டை ஒன்றில் புகுந்து அவர்களிடமிருந்து தம்மை தற்காத்துக் கொண்டார். இவ்வாறுதான் ஓர் அடியார் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து துதிக்காமல் ஷைத்தானிடமிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது.
ஆதாரம்: திர்மிதீ 2863 (செய்தி சுருக்கம்)
இறைத்தூதர் யஹ்யா (அலை) அவர்கள் தன்னுடைய சமுதாய மக்களுக்குச் செய்த ஐந்து கட்டளைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறுகின்றார்கள்.
அவற்றில் மூன்றாவது கட்டளையாக, நோன்பு நோற்பவரின் நிலையானது, ஒரு கூட்டத்தில் தமது கைப்பை நிரம்ப கஸ்தூரியை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. நோன்பு நோற்றவரின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விட நறுமணமிக்கதாகும் என்று கூறி நோன்பாளிகளுக்கான பரிசுத்தமான சிறப்பை இந்த உதாரணத்தின் மூலம் எடுத்துரைத்தார்கள்.
ரமழான் மனிதனைப் புனிதனாக மாற்றும் பாக்கியம் நிறைந்தது. இத்தகைய புனிதனமான ரமழான் மாதத்தை மிகக் கவனமாய் இறையச்சத்துடன் பயன்படுத்தி, புனிதர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் பேருதவி செய்வானாக!
நபி (ஸல்) அவர்களிடம் அபூ உமாமா (ரலி) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்களில் மிகச் சிறந்தது எது?” எனக் கேட்ட போது, “நீ நோன்பை பற்றிப் பிடித்துக் கொள்! ஏனென்றால், அதற்கு நிகரான நல்லறம் வேறெதுவுமில்லை!” என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்: நஸாயீ 2220
