இந்த உலகத்தில் இறைவன் நமக்கு வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளில் மிகப்பெரும் அருட்கொடைதான் “நம் குழந்தைச் செல்வங்கள்”
ஒவ்வொரு சிறு குழந்தையும் நாளை இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் என்பதைத் தாண்டி, பெற்றோர்களாகிய நம்மை வழிநடத்தி, பாதுகாக்க இருப்பவர்களும் இந்தக் குழந்தைகள்தான். ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு தாய், தந்தையின் கனவுகள் என்பது எண்ணிலடங்காதவை ஆகும்.
“என் பிள்ளை என்னைவிடச் சிறந்தவனாக இருப்பான்”
“என் பிள்ளை நான் சாதிக்காததையெல்லாம் சாதித்துக் காட்டுவான்”
“என் பிள்ளை இந்த உலகத்தில் நான் பெற்ற அவமானங்களையும், கஷ்டங்களையும் நீக்கி என்னை நல்ல தகப்பனாக, நல்ல தாயாகப் பெயர் எடுக்கச் செய்வான்”
இப்படி எண்ணற்ற கனவுகளோடு பல வலிகளையும், வேதனைகளையும் தாங்கி, பிள்ளையைப் பெற்றெடுத்து வளர்க்க ஆரம்பித்தால், நம் கனவுகளைச் சிதைக்கும் வண்ணமும், நமக்குக் கெட்ட பெயரைப் பெற்றுத் தரும் வண்ணமும் அவனது வாழ்க்கையை அவனே சீரழித்துக் கொள்கின்ற சில செயல்பாடுகளைப் பிள்ளைகளிடம் காணும்போது வாழ்க்கையையே வெறுத்து விடுகின்ற பெற்றோர்கள் ஏராளம்.
சமீபமாக வெளிவரும் சில தகவல்களையும், செய்திகளையும் பார்க்கும்போது அவை ஒவ்வொரு பெற்றோர்களின் நெஞ்சுகளையும் பிளக்கச் செய்கிறது.
உதாரணமாக…
சென்னை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள 168 பள்ளிக்கூடங்களிலுள்ள மாணவர்கள் மத்தியில் “போதைப் பொருட்கள் பயன்பாடு” சம்பந்தமாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படுகிறது.
அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த 3021 மாணவர்கள் மத்தியில் ஆய்வு நடைபெற்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
அந்த மாணவர்களில் 9 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் போதைப் பழக்கத்திறக்கு அடிமையாக உள்ளார்கள்.
10% மாணவர்கள் கஞ்சா என்ற போதைப் பொருளுக்கும்
22% மாணவர்கள் புகையிலைப் பழக்கத்திற்கும்
26% மாணவர்கள் மதுவிற்கும் அடிமையாக உள்ளார்கள்.
23% மாணவர்கள் ஒயிட்னர் சொல்யூஷன் என்ற போதை தரக்கூடிய ஒரு வகை பசைக்கும் அடிமையாக உள்ளார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன
இவைகளுக்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டவை: போதைப் பொருட்களுக்கு அடிமையான அந்த மாணவர்களில் 11% மாணவர்கள் தனிமையில் அதிகம் இருக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டதும், 27% பேர் அடிக்கடி அவற்றை உபயோகப்படுத்தியதும் 32% பேர் நண்பர்களின் பழக்கவழக்கங்களின் மூலமும், 30% மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் இதற்கு அடிமையாகி உள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல! பெங்களூரில் பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற சோதனையின் போது, அவர்களது புத்தகப்பைகளில் போதைப் பொருட்கள், கருத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
‘செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் மது அருந்திய மாணவிகள்’ என்று இதுபோன்ற செய்திகள் நீண்டு கொண்டே போகிறது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனதருமைப் பெற்றோர்களே! நம்முடைய பிள்ளைகளும் இதே பள்ளிக்கூடங்களில் தான் படிக்கிறார்கள், இதே கட்டமைப்பில் தான் வாழ்கிறார்கள்.
நாளை நம்முடைய பிள்ளைகளிடமும் இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பார்க்க நேரிட்டால் என்னவாகும்? அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
ஏன்? எதனால்? இப்படிப்பட்ட ஒரு நிலைமை என்று நாம் சற்று யோசித்துப் பார்த்தால் இதற்குப் பெரிதும் காரணம் பெற்றோர்கள் தான் என்பதே மறுக்க முடியா உண்மை.
ஒவ்வொரு பெற்றோர்களும் “குழந்தை வளர்ப்பு” குறித்த மார்க்க வழிகாட்டுதல்களையும், மருத்துவ ஆலோசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
“சோறும், நீரும் கொடுப்பது மட்டுமே ஒரு பிள்ளையைச் சிறந்த பிள்ளையாக வளர்ப்பது அல்ல” என்ற நிதர்சன உண்மையைப் புரிந்தாலே போதுமானது.
எங்கு தவற விடுகிறோம்?
பிள்ளைகளைப் பெற்றெடுப்பதிலோ, பிள்ளைகளுக்கான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலோ அதிகமான பெற்றோர்கள் தவறிழைப்பது இல்லை.
ஒரு வேலை குழந்தைகளுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் தவறிழைத்தால் கூடப் பெரிய தவறொன்றும் இல்லை.
ஆனால் ஆரம்பத்திலேயே ஒரு பிள்ளைக்குத் தேவையான சரியான வாழ்க்கை வழிகாட்டுதல்களைக் கொடுப்பதிலும், அறிவுரைகளை வழங்கி அவர்களைப் பண்படுத்துவதிலும் கோட்டை விடுவதே பெரும் தவறாகும்.
ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கமோ குழந்தை பெற்றெடுப்பதற்கு முன்பாகவே குழந்தை வளர்ப்பு சம்பந்தப்பட்ட திட்டமிடல்களை வகுக்கச் சொல்கிறது. இதோ அதற்கோர் உதாரணம்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.)
திருக்குர்ஆன் 37:100
இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த இந்த பிரார்த்தனையின் விளைவு என்ன தெரியுமா? மிகச்சிறந்த இறை பயமிக்க இஸ்மாயீல் என்ற குழந்தையை அல்லாஹ் அவருக்குப் பரிசளித்தான்.
இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டுவீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
திருக்குர்ஆன் 19:54
அவர் தொழுகையையும், ஜகாத்தையும் தமது குடும்பத்தாருக்கு ஏவுபவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்
திருக்குர்ஆன் 19:55
அந்த இஸ்மாயீல் (அலை) அவர்கள் கூட வளர்ந்து தன் குடும்பத்திற்குத் தொழுகை, தர்மம் ஆகியவற்றை ஏவுகின்ற சாலச்சிறந்த நபராக இருந்தார் என்று குர்ஆன் எடுத்துரைக்கிறது.
குழந்தை பிறந்த பிறகு,
“என் பிள்ளை உலகிலேயே நல்லவனாக இருக்கணும். ஸாலிஹ்னு பேர் வைங்க”
“என் புள்ள வீரமானவனாக உமர்னு பேர் வைங்க, ஹாலித்னு பேர் வைங்க”
இப்படிச் சொல்கிற பெற்றோர்கள்தான் ஏராளம். ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன்பே என் குழந்தை ஸாலிஹ் ஆக இருக்க வேண்டும் உமரைப் போன்றும், ஹாலிதைப் போன்றும் ஆவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்து அதற்கான திட்டங்களை வகுக்கும் பெற்றோர்கள் குறைவுதான்!
குழந்தை வளர்ப்பின் வகைகள்
குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக ஏராளமான நபர்கள் தற்போது வகுப்புகள் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் பணத்தாசை பிடித்த பலரும் தவறான சில வழிகாட்டுதல்களையும் செய்து விடுகின்றனர். குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக பல தலைப்புகளின் கீழ் விவரிக்கப்பட்டாலும். பெரும்பாலும் அவர்கள் சொல்வது கீழக்கண்ட நான்கு வகைகளைத்தான்.
அவற்றில் சரியான முறை என்பது எது? தவறான முறைகள் எவை என்பதைப் பார்ப்போம்.
- கவனக்குறைவான குழந்தை வளர்ப்பு
இந்த வகை குழந்தை வளர்ப்பில், குழந்தைகள் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அதற்குத் தீர்வென நினைத்துப் பல தவறான முடிவுகளையும் அவர்கள் எடுக்கிறார்கள்.
ஏனென்றால், இந்த வகை குழந்தை வளர்ப்பில் பெற்றோரில் இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ இல்லாத சூழ்நிலைகளில் குழந்தைகள் வளர்க்கப்படுவார்கள். அல்லது இருவரும் இருந்தும் கூட குழந்தைகளுடன் உரையாடுவதற்கோ, குழந்தையின்மீது பாசம் காட்டுவதற்கோ பெற்றோர்களுக்கு நேரம் இருக்காது. உதாரணமாக, சில பெருநகரங்களில் மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளை மழலையர் பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டு, பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று விடுவார்கள். வேலை களைப்புடன் குழந்தைகளிடம் இவர்கள் செலவு செய்யும் நேரமென்பது இரண்டு, மூன்று மணி நேரம் கூட இருக்காது.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குழந்தைகள்மீது வைத்த பாசத்தையும் அவர்களையும் சக மனிதர்களாக மதித்து அவர்களுடன் உரையாடிய சில நிகழ்வுகளையும் பாருங்கள்.
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 5998
(நபியவர்களின் வளர்ப்புப் பேரரான) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, ‘இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!’ என்றார்கள்
நூல்: புகாரி 6003
தன் பிள்ளைகள் மீது மட்டுமல்ல! ஊரிலுள்ள மற்ற குழந்தைகள் மீதும்கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாசமழை பொழிந்தார்கள்.
அதுமட்டுமல்ல! பெரியவர்களிடம் பேசுவதைப் போன்று குழந்தைகளிடம் அதிகம் உரையாடினார்கள். உதாரணத்திற்கு ஒன்று.
“சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
“நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.
நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்குத் தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்து விட்டன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதி 2440
எந்த அளவிற்குக் குழந்தைகளுடன் நபி (ஸல்) அவர்கள் நேரம் செலவு செய்து இருக்கிறார்கள். அவர்களையும் சக மனிதர்களாக மதித்து அவர்களுடன் உரையாடினார்கள். அதனால்தான் பிற்காலத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) போன்றவர்கள் மிகப்பெரும் மார்க்க அறிஞர்களாக உருவானார்கள்.
உங்கள் பிள்ளைகளுடனும் அதிகமாக நேரம் செலவு செய்யுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுடன் நெருங்கி இருங்கள். பல நேரங்களில் குழந்தைகள்மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் வெளிக்கொண்டு வரப்படாமல் இருப்பதற்குப் பெரிதும் காரணம், பெற்றவர்கள் குழந்தைகளுடன் நட்புணர்வு கொள்ளாமல் இருப்பதே! தன்னோடு படிக்கும் சக தோழர்களுடன் தன்னைப் பற்றிய அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் குழந்தைகள், பெற்றோர்களிடத்திலும் அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் நீங்கள் நண்பர்களாக அவர்களிடத்தில் நெருங்கிச் செல்லாமல் இருப்பதுதான்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்…