கோடிகளைத் தாண்டும் கல்யாணச் செலவு கடன் வாங்கத் தூண்டும் சமூக நிர்ப்பந்தம்!

“வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப்பார்!” என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியில் ‘வீட்டைக் கட்டிப்பார்’ என்று சொல்வதில் ஓர் அர்த்தம் இருக்கின்றது. காரணம் வீடு கட்டிய எவரும் போட்ட மதிப்பீட்டில் கட்டி முடித்ததில்லை. கடன் வாங்கி போட்டுக் கட்டித்தான் முடித்திருப்பார்கள். யானை கட்டுக்கட்டாய் கரும்பை வளைத்துத் தின்பது போல் கட்டுகின்ற வீடும் கட்டுக் கட்டாய் காசு பணத்தை வளைத்துத் தின்று விடும். அந்த அளவுக்கு அது காசு பணத்தை விழுங்கி ஏப்பம் விடும்.
அதனால் தான் “யானை அசைந்து தின்னும்! வீடு அசையாமல் தின்னும்” என்பார்கள். இந்த அடிப்படையில் வீட்டைக்கட்டிப் பார் என்று சொல்கின்ற பழமொழியில் ஓர் அர்த்தம் இருக்கின்றது.
ஆனால் கல்யாணம் பண்ணிப்பார் என்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது? கட்டி முடித்த வீடாவது காலாகாலம் தலை தலைமுறைக்கும் குடியிருக்கும் ஒரு வீடாய் அமைந்து விடும். ஆனால், கல்யாணம் அப்படியல்ல!
கல்யாண அழைப்பிதழ்களில், கல்யாணப் பந்தலில், களறி வீட்டுப் பந்தியில், கறி கத்தரிக்காயில், அத்தாணிக் கல்யாண மண்டபத்தில், கொட்டு மேளம் தாளம் முழங்கும் கல்யாண இன்னிசைக் கச்சேரியில், ஊர்வலத்தில், வாணவேடிக்கைகளில், பத்திரிகை விளம்பரங்களில், ஃபிளக்ஸ் பேனர்களில், கட் அவுட்களில், ஊரை வளைத்து ஒட்டப்பட்டிரும் வண்ண வண்ண சுவரொட்டிகளில் காசு பணம் கரியாகி, காலியாகிப் போய் விடுகின்றது. அது தான் வேதனைக்குரிய விஷயம். கடன் வாங்கி கல்யாணம் பண்ணினேன் என்று சொல்லும் அளவுக்குக் கடன் இல்லாத கல்யாணங்களே இல்லை.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் நாளேடுகளில் “சராசரி திருமண செலவு ரூ.36.5 லட்சமாக உயர்வு: ‘வெட்மிகுட்’ நிறுவனம் ஆய்வு அறிக்கையில் தகவல்’’ என்ற தலைப்பில் வெளியான பின்வரும் செய்தி தெரிவிக்கின்றது. அது வருமாறு:
ஒரு கோடிக்கு மேல்…
திருமண வைபவம் ஆண்டு​தோறும் புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. இதனால் இதற்கான செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ‘வெட்​மிகுட்’ நிறு​வனம் 3,500 தம்ப​தி​களிடம் கருத்துகளைக் கேட்டு ஒரு ஆய்வு நடத்​தி​யது. இதில் 9% பேர் தங்கள் திரு​மணத்​துக்கு ரூ.1 கோடிக்கு மேல் செலவிட்டதாகத் தெரி​வித்​தனர். மேலும் 9% பேர் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவிட்​டதாகத் தெரி​வித்​தனர்.
50 லட்சம் வரை…
தங்கள் திரு​மணத்​துக்கு ரூ.15 லட்சத்​துக்கும் கீழ் செலவிட்​டதாக ஆய்வில் பங்கேற்​றவர்​களில் 40% பேர் தெரி​வித்​தனர். இதுபோல ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவிட்டதாக 23% போரும் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவிட்​டதாக 19% பேரும் தெரி​வித்​தனர்.
இதன்​படி, இந்த ஆண்டில் சராசரியாக ஒரு திரு​மணத்​துக்கு ரூ.36.5 லட்சம் செலவிடப்​பட்​டுள்​ளது. இது கடந்த ஆண்டின் சராசரி செலவை விட 7% அதிகம். அதேநேரம், தம்ப​தி​களின் சொந்த ஊரில் அல்லாமல் வெளியூரில் திரு​மணம் செய்​தவர்​களின் சராசரி செலவு ரூ.51 லட்சமாக உயர்ந்​துள்ளது.

கடன் வாங்கிக் கல்யாணம்

சொந்த சேமிப்பு மற்றும் குடும்பத்​தினரின் சேமிப்​பிலிருந்து திருமண செலவை எதிர்​கொண்டதாக 82% தம்ப​திகள் தெரி​வித்​தனர். திரு​மணத்​துக்காகக் கடன் பெற்​றதாக 12% பேரும் தங்கள் சொத்தை விற்று திருமணம் நடத்தியதாக 6% பேரும் தெரி​வித்​தனர்.
இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த திருமண ஏற்பாட்​டாளர் ஷஷாங்க் குப்தா கூறும்​போது, “ஒவ்​வொரு​வரும் தங்கள் திரு​மணத்தை சிறந்த முறை​யில் வித்​தி​யாசமாக நடத்த விரும்​பு​கின்றனர். திருமண செலவில் அதிகபட்​சமாக திருமண இடத்​துக்குச் செலவிடு​கின்​றனர். அடுத்​த​படியாக உணவு மற்றும் நல்ல திருமண ஏற்பாட்டாளர் நிறுவனத்துக்கு அதிகம் செலவிடுகின்​றனர். இந்தியா​வில் பெரும்​பாலானவர்கள் சொந்த வீடு வாங்​க​வும், திரு​மணத்​துக்​கும் குழந்தைகளின் கல்விக்​கும் அதிகம் செலவிடு​கின்​றனர்” என்றார்.
இந்தியா​வில் இந்த ஆண்டில் நவம்​பர், டிசம்பர் மாதங்​களில் மட்டும் 48 லட்​சம் ​திருமணம் நடைபெறும் என்​றும் இதன் மூலம் ரூ.6 லட்​சம் கோடி வர்த்​தகம் நடை​பெறும் என்​றும் அனைத்து இந்​திய வர்த்தக கூட்​டமைப்பு கணித்​துள்​ளது.
இது தான் நாளேடுகளில் வந்த செய்தியாகும். இது தெரிவிப்பது என்ன?
1) மிக குறைத்து, குறைத்துப் பார்த்தால் கூட 15 லட்சமில்லாமல் ஒரு கல்யாணம் பண்ண முடியாது. ஒரு இலட்ச ரூபாயில் கல்யாணம் நினைத்து கூட பார்க்க முடியாது என்பதையே இது தெரிவிக்கின்றது. கல்யாணம் என்பது அந்த அளவுக்குக் கடினமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. திருமணத்தின் வாசல் மிக கடுமையாகும் போது அது விபச்சாரத்தின் வாசலை எளிதாக்கி விடும். இஸ்லாம் விபச்சாரத்திற்குக் கடுமையான தண்டனையை விதிக்கின்றது. திருமணம் முடிக்காதவர்கள் விபச்சாரம் செய்தால் 100 கசையடிகள், ஓராண்டு நாடு கடத்தல், திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்ற கடுமையான சட்டத்தை விதியாக்கியிருக்கின்றது.

இறைத்தூதர் காட்டிய எளிய திருமணம்

விபச்சாரம் எனும் தீமைக்கெதிராக இவ்வளவு கடுமை காட்டியிருக்கும் இஸ்லாம் திருமணத்தில் மிக எளிமையையும் இலகுவையும் காட்டியிருக்கின்றது. இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகப் பின் வரும் ஹதீஸ் அமைந்திருக்கின்றது.
“ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்’’ என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு தம் தலையைத் தொங்கவிட்டார்கள்.
தம் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப்பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!’’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் (அவரிடம்), ‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, இறைத்தூதர் அவர்களே!’’ என்று பதில் கூறினார்.
நபி(ஸல்) அவர்கள், ‘உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!’’ என்றார்கள்.
அவர் போய் பார்த்துவிட்டு பிறகு திரும்பி வந்து, “இல்லை. இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)’’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இரும்பாலான ஒரு மோதிராமாவது (கிடைக்குமா எனப்) பார்!’’ என்றார்கள்.
அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)’’ என்றார். நபி(ஸல்) அவர்கள், “இரும்பாலான ஒரு மோதிராமாவது (கிடைக்குமா எனப்) பார்!’’ என்றார்கள்.
அவர்(மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து,”அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை. இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது’’ என்றார்
(அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை; எனவேதான் தம் வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார் என அறிவிப்பாளர் ஸஹ்ல் (ரலி) கூறுகின்றார்கள்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “உம்முடைய (இந்த ஒரு) வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அந்த வேட்டியை நீர் உடுத்திக்கொண்டால், அவளின் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக் கொண்டால் உம் மீது அதில் ஏதும் இருக்காது. (உம்முடைய வேட்டியைக் கொடுத்து)விட்டு என்ன செய்யப்போகிறாய்?)’’ என்று கேட்டார்கள். அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டுப் பிறகு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடன் குர்ஆனில் என்ன (மனப்பாடமாக) உள்ளது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘(குர்ஆனில்) இன்னின்ன, இன்னின்னவை என்னுடன் உள்ளன’’ என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் (ஓதுவேன்)’ என்று அவர் பதிலளித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: புகாரி 5126
இந்த ஹதீஸ் திருமணம் என்பது இத்துணை எளிமையிலும் நடத்த முடியுமா? என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படி ஓர் எளிய திருமணத்தை நடத்தி வழிகாட்டியிருக்கும் போது கோடி, லட்சம் என்று திருமணச் செலவை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தி அதைக் கடுமையாக்க வேண்டுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆய்வறிக்கை காட்டும் அடுத்த கொடுமைகள்

ஆய்வறிக்கையின் 2வது அம்சம் சேமிப்பை அழிப்பதாகும். 82% பேர்கள் சேமிப்பை கல்யாணத்திற்காகக் கரியாக்குகின்றனர்.
குன்றின் மணி, குன்றின் மணியாய் குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்த, சேமித்து வைத்த பொருளாதாரத்தை கல்யாணத்திற்காகச் செலவழிப்பது என்பது மிகக் கொடுமையாகும். சேமித்த பொருளாத்தை நிலம், வீடுகள் அல்லது வருவாய் தரக்கூடிய கடைகளை வாங்கி தனது பிள்ளைகளுக்கு தானமாக, தர்மமாகக் கொடுத்தால் அது காலா காலத்திற்கு தலைமுறைகள் வாயார மனமார வாழ்த்தும். ஆனால் கல்யாணப் பந்தியில் கொட்டுவதால் வெறும் நுகர்வு கலாச்சாரத்தில் அது அழிந்து போய் விடும்.
3) ஆய்வறிக்கையின் 3வது அம்சம் 12% பேர்கள் கடன் வாங்கி கல்யாணச் செலவை சந்திப்பதாகச் சொல்கின்றது. இது கொடுமையிலும் மிகப் பெரிய கொடுமையாகும். காசு பணம் உள்ள பணக்காரன் கல்யாணச் செலவில் பன்னீரில் குளிக்கின்றான் என்றால் புலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்ட கதையாக ஏழை கல்யாணச் செலவுக்குக் கடன் வாங்கி கண்ணீரில் குளிக்கின்றான்.
ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாமல் தன் வீட்டை அல்லது தனக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வியாபாரக் கடையை அல்லது தனக்கும் தனது குடும்பத்திற்கும் உணவளிக்கின்ற விவசாய நிலத்தை விற்று விடுகின்றான். இப்படி கல்யாணத்திற்கு வாங்கிய செலவுக்காக நடுத்தெருவில் அமைந்த வீட்டை விற்று விட்டு வெளியே ஒதுக்கு புறத்தில் வாடகைக்கு வந்து அமர்ந்து விடுகின்றான். இப்படி கல்யாணத்திற்கு கடன் வாங்கி கல்யாணம் அடைக்க முடியாமல் வீதிக்கு வந்தவர்கள் ஒரு பட்டியலே இருக்கின்றார்கள்.
இத்தகைய ஆடம்பரத் திருமணங்களுக்காகக் கடன் வாங்கும் விஷயத்தில் சமுதாய மக்கள் மறுமையின் அச்சமில்லாமலேயே இருக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் உயிரை அர்ப்பணித்த (ஷஹீது எனும்)உயிர்த் தியாகிக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. ஆனால் கடனைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ், நூல்: முஸ்லிம் 3832
கடன் வாங்கியவர் அல்லாஹ்வின் பாதையில் உயிரை அர்ப்பணித்தவராக இருந்தாலும் கடனைத் திரும்ப அடைக்கவில்லை என்றால் மறுமையில் கடன் கொடுத்தவர் மன்னிக்காத வரை அவர் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொல்கின்றார்கள். இத்தனைக்கும் ஷஹீதுக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில்
(அவர் கொல்லப்பட்டதும்) “சொர்க்கத்தில் நுழைவீராக!” என்று கூறப்பட்டது. “எனது இறைவன் என்னை மன்னித்து, கண்ணியத்திற்குரியோரில் என்னை ஆக்கியதை என் சமுதாயம் அறிய வேண்டுமே!” என அவர் கூறினார். (அல்குர்ஆன் 36:26, 27)
உயிர்த் தியாகி கொல்லப்பட்டவுடனே அவரை நோக்கி சொர்க்கத்தில் நுழைந்து விடுங்கள் என்று அல்லாஹ் கூறி விடுகின்றான் என்று இந்த வசனம் தெரிவிக்கின்றது. இருப்பினும், தீர்ப்பு நாளில் கடனுக்குப் பரிகாரம் காணாத வரை ஷஹீத் சொர்க்கம் செல்ல முடியாது என்பதை ஹதீஸ் விளக்குகின்றது.
ஆனால், சமுதாயம் மக்கள் இதைப் பற்றிக் கவலையில்லாமல் கடன் வாங்கி ஆடம்பரமாகக் கல்யாணத்தை நடத்துகின்றனர். இதில் இன்னொரு மிகப்பெரும் கொடுமை கல்யாணத்திற்காக வட்டிக்கு எடுத்துச் செலவு செய்வது தான்.
வட்டி (வாங்கிச்) சாப்பிடுவோர், ஷைத்தான் தீண்டியவன் பைத்தியமாக எழுவதுபோல் அன்றி (மறுமையில்) எழ மாட்டார்கள். “வியாபாரமே வட்டியைப் போன்றதுதான்” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துள்ளான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தபின் (வட்டியிலிருந்து) யார் விலகிக் கொள்கிறாரோ அவருக்கு முன்னர் வாங்கியது உரியது. அவருடைய முடிவோ அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டியின் பக்கம்) திரும்புவோரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:225
திருக்குர்ஆன் வட்டியெனும் பாவத்திற்கு நிரந்தர நரகத்தைத் தண்டனையாக வழங்குகின்றது. ஆனால் அந்தத் தண்டனையைப் பற்றிய அச்சமும் சமுதாய மக்களுக்கு இல்லை. இந்த அச்சத்தை ஊட்டவேண்டிய ஆலிம்களும் அச்சமின்றி இந்தக் கல்யாணங்களில் கலந்து கொண்டு, அல்ஃபாத்திஹா சொல்லி கைமடக்குகள், கவர்கள் வாங்கிக் கொண்டு கடந்து செல்வதைத் தான் காணமுடிகின்றது.
4) கல்யாணத்திற்காக 6% பேர்கள் தங்கள் சொத்துக்களையே விற்கின்றனர்.
ஆய்வறிக்கையின் இந்த இறுதி அம்சம் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகும். காரணம் மனித வாழ்க்கையில் சோதனைகள் எந்த வடிவிலும் வரலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு சோதனைகள் நோய், சுனாமி, புயல், வெள்ளம் என்று எந்த வடிவத்திலும் வந்து தாக்கலாம்.சொத்து என்று இருந்து விட்டால் அது போன்ற கட்டத்தில் யாரிடத்திலும் கையேந்தாமல், கண்ணியமிழக்காமல் அவசியம், நிர்ப்பந்தம் என்று வருகின்ற பட்சத்தில் விற்று தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் இது போன்று கல்யாண வகைக்கு விற்றுத் தீர்ப்பது என்பது ஏற்றுக் கொள்ளமுடியாததாகும். பெற்றோர்களுக்கு வாரிசுகள் கூடக் கூட சொத்துக்கள் பாகப்பிரிவினைக்குள்ளாகும். சொத்துக்கள் பாகப்பிரிவினைக்குள்ளாக உள்ளாக அவை சுருங்கி விடும். அதனால் பெற்றோர்கள் தங்கள் சொத்துக்களை ஆடம்பரக் கல்யாணங்கள் நடத்துவதற்காக விற்றுத் தீர்த்து விடக்கூடாது. தேவையற்ற ஒரு நுகர்வுக் கலாச்சாராத்தில் தங்களது சொத்துக்களை நீர்த்து போகச் செய்துவிடக்கூடாது.
“நபி(ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜத்துல் வதா’வின் சமயம் (நான் மக்காவிலிருந்தபோது எனக்கேற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர் நோக்கியிருந்தேன். நான், ‘இறைத்தூதர் அவர்களே! செல்வந்தனாகிய எனக்கு என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் இந்த நோய் என்னைப் பீடித்துள்ளது. எனவே, நான் என் செல்வத்தில் இரண்டிலொரு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள்.
நான் ‘அப்படியானால் என் சொத்தில் பாதியை தர்மம் செய்யட்டுமா?’ என்று கேட்க அதற்கும், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘மூன்றிலொரு பங்கை தர்மம் செய்யட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாகவிட்டுச் செல்வதை வட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை விருமபிச் செய்கிற செலவு எதுவாயினும் அதற்குப் பகரமாக உங்களுக்குப் பிரதிபலன் தரப்படும். எந்த அளவிற்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகிற ஒரு கவளம் உணவுக்கும் கூட (உங்களுக்குப் பிரதி பலன் அளிக்கப்படும்.)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 4409.
இந்த ஹதீஸில் ஒருவர் தனது சந்ததிகளைக் கையறு நிலையில் அடுத்தவர்களிம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்லக்கூடாது என்று குறிப்பிடுகின்றார்கள். அதிலும் சொத்துக்களை தான, தர்மங்களைச் செய்வதில் காலி பண்ணி அதில் அவர்களைக் கையேந்தும் நிலையில் விடக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்று எச்சரிக்கை செய்கின்றார்கள் என்றால் திருமணத்தில் நடைபெறும் ஆடம்பரங்களில் இப்படி செலவு செய்வதை அனுமதித்திருப்பார்களா? என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இதில் வேடிக்கை என்னவெனில், நெருங்கிய உறவினர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது செலவழிக்க முன்வராதவர்கள் கல்யாணத்தில் காசு, பணத்தைத் தண்ணீராக வாரியிறைப்பதை நாம் காண முடிகின்றது. கேட்டால் வலீமா சுன்னத் அல்லவா? என்கிறார்கள்.
ஓர் ஆட்டையேனும் மண விருந்தாக கொடுங்கள் என்று (என்னிடம்) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின்அவ்ஃப்(ரலி)
நூல்: புகாரி  2048
இந்த அடிப்படையில், நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தின் மீதுள்ள தனியாத அவாவையும் (?) ஆர்வத்தையும் (?) வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் பெற்ற தாய், தந்தையர்கள், உற்ற உறவினர்களை ஆதரிக்க, அரவணைக்கச் சொல்லும் ஹதீஸ்களைப் புறந்தள்ளி விடுகின்றார்கள்.
‘ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2067
பெற்ற தாய் குலைப் பட்டினி; ஆனால் மகன் கோதானம் கொடுத்தாராம் என்ற கதையாக இவர்கள் கதை அமைந்திருக்கின்றது. உறவுகள் உதவிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் அவர்களை அரவணைக்கின்ற ஹதீஸ்களை உதாசீனப்படுத்தி உதறி தள்ளி விட்டு ஊதாரித்தனமாக ஆடம்பரத் திருமணங்களில் செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இவர்கள் ஹதீஸை மதிக்கும் இலட்சணமாகும். திருமணத்தில் நடத்தப்படும் இந்த கண் மூடித்தனமாக செய்யப்படும் செலவைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388

வலியவனுக்குக் கைக்காசு,
எளியவனுக்கு கடன் காசு

காசுள்ளவன் கையில் உள்ள காசை அள்ளி வீசி அலப்பறை பண்ணி ஆடம்பரக் கல்யாணங்களை நடத்தி விடுகின்றான். நடுத்தர வர்க்கத்தினன் சேமிப்பிலிருந்து செலவழித்து விடுகின்றான் அல்லது சிரமப்பட்டு சேர்த்த நில புலன்களை விற்று செலவு செய்து விடுகின்றான். ஆனால் அடித்தட்டு மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், ஏழை பாட்டாளிகள், மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளிகள் ஆகியோர் தங்கள் திருமணங்களைக் கடன் வாங்கி நடத்துகின்றனர். பிறகு வாழ்நாள் முழுவதும் கடனை அடைக்கமுடியாமல் அல்லல் படுகின்றனர், அவதியுறுகின்றனர். இது நடைமுறையில் நாம் கண்டு வருகின்ற அனுபவமாகும்.
வசதியுள்ளவன் செய்வதை பார்த்து ஏழை அனுபவிக்கும் சோதனையாகும். புள்ளி விவரங்கள் சொல்வது போல் இன்றைய திருமணங்களின் செலவுகள் இலட்சங்களைத் தாண்டி கோடிகளில் கொடி கட்டி பறக்கின்றது. இந்த வகையில் இன்றைய திருமணங்களின் செலவீனங்கள் எளியவனை கடன் வாங்கத் தூண்டி அவனை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. இது ஒரு சமூக நிர்ப்பந்தமாகும்.

முன்னத்தி ஏராக, முன் மாதிரியாக…

இத்தகைய சமூக நிர்ப்பந்தங்களை உடைத்தெறிந்து தமிழகத்தில் ஒரு நாற்பதாண்டு காலமாக தமிழகத்தில் எளிய முறையில் திருமணங்களை நடத்தி தவ்ஹீது ஜமாஅத் மட்டும் மற்ற எல்லா ஜமாஅத்துகள், எல்லா இயக்கங்களை விடவும் முன்னத்தி ஏராக, முன்மாதிரியாகத் திகழ்கின்றது. இதற்குக் காரணம் எளிமை திருமணம் என்ற ஹதீஸ் அதன் முதன்மை இலக்காக இருப்பது தான்.
இரண்டாவதாக தவ்ஹீது ஜமாஅத் கொண்டிருக்கும் சமுதாய, சமூக உணர்வாகும். சமுதாயத்தில் கல்வி, மருத்துவம், முதியோர்கள் நலன் என்று பல்வேறு வகையில் மக்கள் நிதியாதாரமின்றி தவித்துக் கொண்டிருப்பதையும் தத்தளித்துக் கொண்டிருப்பதையும் இந்த ஜமாஅத் கண்கூடாகக் காண்கின்றது. அதனால் சமுதாயத்தின் பொருளாதாரம் பள்ளத்தில், அதளபாதாளத்தில் கிடக்கும் மக்களுக்குப் போய் சேராமல் கல்யாணம் எனும் கிடங்கில் போய் விழுகின்றது. அதை உரிய வகையில் திருப்பி விடுவதற்காக அல்லும் பகலும் பாடுபடுகின்றது. அதில் வெற்றியும் கண்டு வருகின்றது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!