ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா?
கேள்வி :
ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா? உறவினர்கள் தேவையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனல் சிலர் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறுகின்றார்கள். விளக்கவும்.
இஸ்மாயீல் ஷெரீப், பெரம்பூர்
பதில் :
இஸ்லாமிய அரசாக இருந்தால் அரசாங்கமே ஜகாத்தை வசூலித்து விநியோகிக்கும் என்பதால் அப்போது இந்தக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு இல்லாத பகுதிகளில் தனிப்பட்ட முறையில் ஜகாத் வழங்கும் போது, அதை யாருக்கு வழங்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும்
அல்குர்ஆன் 9:60
இந்த வசனத்தில் ஜகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்களின் பட்டியலை அல்லாஹ் கூறுகின்றான். இந்த அடிப்படையில் உள்ள ஒருவர் உறவினராக இருந்தாலும் அவரிடம் ஜகாத்தை வழங்குவதற்குத் தடையேதும் இல்லை.
நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ்(ரலி)க்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், “நான் உங்களுக்காகவும்,எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்” என்று கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் என்று கூறி விட்டார்.
எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது பிலால் (ரலி) வந்தார். அவரிடம், “நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்”எனக் கூறினேன். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், எந்த ஜைனப்? என்று கேட்டதும் பிலால் (ரலி), “அப்துல்லாஹ்வின் மனைவி” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “ஆம்! ஜைனபுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜைனப் (ரலி),
நூல் : புகாரி 1466
தர்மங்களை உறவினர்களுக்கு வழங்குவதில் இரண்டு கூலி உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இது பொதுவாக தர்மம் செய்வதைப் பற்றிக் குறிப்பிட்டாலும்,இஸ்லாமிய அரசு இல்லாத பகுதிகளில் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் ஜகாத்திற்கும் இந்த ஹதீஸ் பொருந்தக் கூடியது தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேள்வி – பதில் – ஏகத்துவம்,ஜனவரி 2005