வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

கேள்வி :

வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்கள் நோன்பு வைப்பது நபிவழி. வியாழக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தான் நோன்பு நோற்க வேண்டுமா?

ராஜா முஹம்மத்

பதில்:

வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும்.

سنن الترمذي

745 – حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ الفَلَّاسُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ رَبِيعَةَ الجُرَشِيِّ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு வைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : திர்மிதீ

இப்படி இரண்டு நாட்கள் நோன்பு நோற்றால் சுன்னத்தான நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். ஆனால் நாமாக விரும்பும் நாளில் நஃபிலாக நோன்பு நோற்க நமக்கு அனுமதி உண்டு. அந்த அடிப்படையில் ஒரு நாள் நோன்பு நோற்கலாம்.

இந்த இரண்டு நாட்களில் ஒன்றில் நோன்பு நோற்றால் கண்டிப்பாக மற்ற நாளிலும் நோன்பு நோற்க வேண்டும் என மார்க்கம் கூறவில்லை. திங்களன்று நோன்பு நோற்காமல் வியாழக்கிழமை மட்டும் நோன்பு நோற்றால் அதில் தவறேதுமில்லை. அல்லாஹ் ஒரு நாள் நோன்பு நோற்ற கூலியை வழங்குவான்.