கேள்வி:
சாட்சிகள் இல்லாத நிலையில் விபச்சாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால் என்ன செய்வது?
பைசல், நெல்லை
பதில் :
ஆண், பெண் ஆகிய இருவரில் விபச்சாரம் செய்ததாக ஒருவர் மட்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொண்டு, ஷரீஅத் சட்டம் வழங்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.
விபச்சாரக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்றொருவர் விபச்சாரம் செய்யவில்லை என்று மறுத்துவிட்டால் சாட்சிகள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்கப்படாது.
இதனைக் கீழ்க்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். அல்லாஹ்வின் சட்டப்படியே எனக்குத் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்று சொன்னார். அப்போது அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி, “ஆம்! எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். பின்னர் அந்தக் கிராமவாசி “என்னைப் பேச அனுமதியுங்கள்” என்று கூற, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பேசு” என்றார்கள்.
அவர், “என் மகன் இவரிடம் பணியாளனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபச்சாரம் செய்து விட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் கல்வியாளர்களிடம் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் நூறு ஆடுகளும் (உம்மிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்“ என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி), “உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபச்சாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று சொன்னார்கள்.
அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாள். ஆகவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நூல்: முஸ்லிம் 3502
அந்தப் பெண் ஒப்புக் கொண்டால் தண்டனை வழங்குங்கள் என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாசகம், ஒருவேளை அந்தப் பெண் ஒப்புக்கொள்ள மறுத்தால் தண்டனை இல்லை என்பதைக் காட்டுகிறது. அதே சமயம், மறுத்து விட்ட அந்தப் பெண்ணுக்கு மட்டுமே தண்டனை இல்லையே தவிர, ஒப்புக் கொண்ட ஆணுக்கு வழங்கப்பட்ட தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த ஹதீஸ் மட்டுமல்ல! விபச்சாரக் குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட எல்லா ஹதீஸ்களிலும் இதேபோன்ற ஒரு நடைமுறையையே அல்லாஹ்வின் தூதர் கையாண்டுள்ளார்கள்.
புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபச்சாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக” என்று கூறினார்கள்.
அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராக” என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள்.
நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர், “விபச்சாரக் குற்றத்திலிருந்து” என்று விடையளித்தார். அப்போது அவர்கள், “இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?” என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், “இவர் மது அருந்தியுள்ளாரா?” என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் விபச்சாரம் செய்தீரா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், “அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டது” என்று கூறினர். வேறு சிலர், “மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, “என்னைக் கல்லால் அடித்துக்கொல்லுங்கள்” என்று கூறினார்” என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!” என்று வேண்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்’’ என்று கூறினார்கள்.
பிறகு “அஸ்த்” குலத்தின் ஒரு கிளையான “ஃகாமித்” கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக” என்று கூறினார்கள். அதற்கு அப்பெண், “மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் “என்ன அது?” என்று கேட்டார்கள். அப்பெண், “நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீயா?” என்று கேட்டார்கள். அப்பெண் “ஆம்’’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும்வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)” என்றார்கள். பிரசவிக்கும்வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக்கொண்டார்.
பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப் போவதில்லை. பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டுவிடவும் நாம் விரும்பவில்லை” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, “அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 3499
அதாவது, ஆணும் பெண்ணும் தொடர்புடைய விபச்சாரக் குற்றத்தில், ஒரு பெண் மட்டும் வந்து குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போது நபி (ஸல்) அவர்கள் நான்கு சாட்சியத்தைக் கொண்டு வருமாறு கோரவில்லை. அவர்கள் ஒப்புக் கொள்வதையே தண்டனை நிறைவேற்றுவதற்குப் போதுமான சாட்சியாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அதேபோன்று மாஇஸ் (ரலி) அவர்கள் வந்து விபச்சாரம் செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த போது, யாருடன் விபச்சாரம் செய்தாய்? அந்தப் பெண்ணை அழைத்து வா! அவளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் ஆராயவில்லை.
எனவே விபச்சாரக் குற்றத்தைப் பொறுத்தவரை ஒருவர் ஒப்புக் கொள்வதே அவரைத் தண்டிப்பதற்குப் போதுமான சாட்சியாகும்.