வாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது?

கேள்வி:

எங்கள் குடும்பத்திற்கு பூர்வீக நிலம் எங்கள் தாத்தா சொத்து 42 சென்ட் உள்ளது. நான் ஒரு ஆண் மற்றும் எனக்கு மூன்று சகோதரிகள், எங்களுடைய அப்பா வபாத் ஆகி விட்டார்கள். அம்மா உள்ளார்கள். இந்தச் சொத்தை ஷரியத் படி எப்படி எத்தனை பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று விளக்கமாக அறியத்தரவும்.

சொத்தின் மதிப்பு சுமார் 60 இலட்சம் இருக்கும். நான் என் அப்பா இறந்த பிறகு என் இரு தங்கைகளையும் திருமணம் செய்து வைத்தேன்.

முஹம்மது இப்ராகிம், திருச்சி

பதில் :

பொதுவாக வாரிசுரிமைச் சட்டம் குறித்து மார்க்கத் தீர்ப்பு கேட்கும் போது தேவையான எல்லா விபரங்களையும் குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் விபரங்கள் அடிப்படையில் அளிக்கும் பத்வா தவறாக அமைந்து விட வாய்ப்பு உண்டு.

சொத்து உங்கள் தாத்தா பெயரில் உள்ளது என்றால் உங்கள் தாத்தா மரணித்த போது கீழ்க்காணும் உறவினர்களில் உயிருடன் இருந்த அத்தனை பேருடைய விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் தாத்தா மரணிக்கும் போது அவருக்கு மனைவி அல்லது மனைவியர் உயிருடன் இருந்தார்களா?

உங்கள் தாத்தா இறக்கும் போது அவருக்கு ஆண்மக்கள் இருந்தார்களா? அவர்கள் எத்தனை பேர்? அவருக்குப் பெண் மக்கள் இருந்தார்களா? எத்தனை பேர்?

உங்கள் தாத்தா இறக்கும் போது அவரது தந்தை உயிருடன் இருந்தாரா? தாய் உயிருடன் இருந்தாரா?

இந்த வகை உறவினர்களில் யாரெல்லாம் தாத்தா மரணிக்கும் போது உயிருடன் இருந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.

உங்கள் தந்தை இறந்து விட்டார்கள் என்றால் உங்கள் தாத்தாவுக்கு முன்னாள் இறந்து விட்டார்களா? உங்கள் தாத்தாவுக்குப் பின் இறந்தார்களா? என்ற விபரத்தைப் பொருத்து பதில் வேறுபடும்.

மேலும் உங்கள் தாத்தா மரணிக்கும் போது அவருக்கு உங்கள் தந்தை தவிர வேறு ஆண் மக்களோ பெண் மக்களோ இருந்தார்களா? என்ற விபரத்தைப் பொருத்தும் பங்கின் அளவு வேறுபடும்.

எனவே போதுமான விபரம் இல்லாமல் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க முடியாது.

வாரிசுரிமைச் சட்டம் குறித்த கேள்விகள் கேட்கும் போது

சொத்துக்கு உரிமையாளர் யாரோ அவரை மையமாக வைத்துத் தான் உறவுகளைக் குறிப்பிட வேண்டும். கேள்வி கேட்பவர் தனது நிலையில் வைத்து உறவினரைக் குறிப்பிட்டால் குழப்பம் ஏற்படும்.

என் தாத்தா இறந்து விட்டார். என் பாட்டி உயிரோடு இருந்தார் என்று கூறக்கூடாது. என் தாத்தா இறந்து விட்டார். அவர் இறக்கும் போது அவரது மனைவி அல்லது மனைவிகள் உயிருடன் இருந்தனர் என்று குறிப்பிட வேண்டும்.

இது போல் உங்கள் கேள்வி தெளிவாக இல்லாததால் இதற்கு அளிக்கும் பதில் பயன் தராது.