ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா?

கேள்வி:

திருமணத்தின் போது ஆண்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் மார்க்கம் தடை செய்கிறது. ஆனால், திருமணத்தின் போது பெண்கள் ஆண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை அனுமதிக்கிறது. இது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா? என்று என் நண்பர் ஒருவர் கேட்கிறார்.

அப்துல் முனாப், அல்-அய்ன்.

பதில் :

பொதுவாக வாங்குவதை விட கொடுப்பது எப்போதுமே கஷ்டமானது தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனைவிக்குச் சோறு போடுவதும், உடைகள் மற்றும் அணிகலன்கள் எடுத்துக் கொடுப்பதும் கூட ஆண்களுக்குக் கஷ்டமானது தான்.

அதற்காக ஆண்கள் மீது அந்தச் சுமையைச் சுமத்தக் கூடாது என்று அந்த நண்பர் கூற மாட்டார்.

இதில் கஷ்டத்தைக் கவனத்தில் கொள்வதை விட நியாயத்தைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். சைக்கிள் வாங்குவதை விட கார் வாங்குவது கஷ்டமானது என்பதால் நாம் கார் வாங்காமல் இருப்பதில்லை. கார் மூலம் கிடைக்கும் கூடுதல் வசதி மற்றும் சொகுசுக்காகக் கஷ்டத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறோம்.

அதுபோல் தான் திருமண வாழ்க்கையின் மூலம் ஆண்கள் அதிக வசதியையும், சொகுசையும், இன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.

சிறிது நேரம் இருவரும் இன்பத்தை அனுபவிப்பதில் மட்டும் சமமாக உள்ளனர்.

பின்விளைவுகளைச் சுமப்பதில் சமமாக இல்லை.

இவனது கருவைச் சுமப்பதால் அவள் படும் சிரமங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரசவிக்கும் சிரமம், குடும்பத்தாருக்கு சேவை செய்யும் சிரமம் என ஏராளமான துன்பங்களைப் பெண்கள் தான் சுமக்கிறார்கள். ஆணுக்குச் சுகம் மட்டுமே கிடைக்கிறது. எனவே மஹர் கொடுப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தாலும் அவன் கொடுக்க வேண்டும் என்ற நியாயத்தைப் புறக்கணிக்க முடியாது.

இது முதலாவது காரணம்.

பெண் மீது வரதட்சணை சுமை சுமத்தப்பட்டால் அதை அவளது தந்தை தான் தனியாகச் சுமக்க வேண்டும். ஆனால் ஆண் மீது அந்தச் சுமையைச் சுமத்தினால் அவனது தந்தையுடன் அவனும் சேர்ந்து உழைக்க முடியும். இந்த விஷயத்தில் கஷ்டத்தைத் தாங்கும் வலிமை ஆண்களுக்குத் தான் அதிகமாகவுள்ளது என்பது இரண்டாவது காரணம்.

பொதுவாக உலகில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் பிறக்கிறார்கள். ஆண்களை விட பத்து வருடத்திற்கு முன்பே திருமணத்துக்கு தயாராகவும் ஆகிவிடுகிறார்கள்.

திருமணத்துக்குத் தகுதியான பெண்கள் என்று கணக்கிட்டால் அவர்கள் அத்தனை பேருக்கும் கணவர்கள் கிடைக்க வேண்டுமானால் பத்து வருடங்களுக்கு ஆண்களாக மட்டுமே பிறக்க வேண்டும்.

பிறப்பில் பெண்கள் அதிகமாகவுள்ளதாலும், திருமணத்துக்குத் தயாராவதில் ஆண்கள் பத்து வருடம் பின்தங்கியுள்ளதாலும் ஆண்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே தான் பெண்கள் மிக மிக கணிசமான அளவுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.

வரதட்சணை பத்து லட்சம், இருபது லட்சம் என்ற அளவுக்குப் போனாலும் மஹர் கொடுத்து மணம் முடிப்பவர்கள் சில ஆயிரங்களில் தான் இன்றளவும் நிற்கிறார்கள். இது ஆண்களுக்கு தாங்கக்கூடிய கஷ்டமே. பெண்கள் கொடுக்க வேண்டும் என்றால் இதை விடப் பல மடங்கு அதிகமாக அவர்களிடம் கேட்பார்கள். கேட்டு வருகிறார்கள்.

இந்த வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால் ஆண்கள் தான் மஹர் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை அந்த நண்பர் ஒப்புக் கொள்வார்.