கேள்வி :
உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?
பல வருடங்களுக்கான பிறையை முன்கூட்டியே கணித்து விடலாம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்கூட்டியே தலைப்பிறையைத் தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும், அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள்.
அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.
நார்வே போன்ற நாட்டை உதாரணம் காட்டுகின்றனர். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைப் பார்த்து முடிவு செய்வார்கள்? என்றும் கேட்கின்றனர்.
ரஃபீக், நாகர்கோவில்.
பதில் :
மேற்கண்ட தவறான வாதங்களுக்கு ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பதில் அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் தங்களுடைய கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் எழுப்பிய கேள்விகளுக்கும் நாம் சுட்டிக்காட்டிய ஆதாரங்களுக்கும் தக்க பதிலை அளித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
இனி இவர்கள் கூறியதாக மேலே நீங்கள் சுட்டிக்காட்டிய வாதங்கள் சரியா என்று ஆராய்வோம்.
பிறையைக் கணிப்பது ஏன் கூடாது?
நோன்பு என்பது ஒரு வணக்கம் ஆகும். வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எந்த அடிப்படையில் காட்டித் தந்தார்களோ அந்த அடிப்டையிலேயே நாம் செயல்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மனோஇச்சையைப் பின்பற்றுதல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறை ஆகும். இந்த அடிப்படையை முதலில் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
நபியவர்கள் பிறையைக் கண்களால் பார்த்து நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளார்கள்.
صحيح البخاري
1900 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1900
صحيح البخاري
1909 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»
“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதைக் காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1909
صحيح مسلم
2566 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا رَأَيْتُمُ الْهِلاَلَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلاَثِينَ يَوْمًا »
“நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள்! பிறையைக் காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
மேற்கண்ட ஹதீஸ்கள் பிறையைக் கண்களால் கண்டே நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகின்றன.
பின்வரும் ஹதீஸ் பிறையைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்று கட்டளையிடுகிறது. எனவே கண்களால் பிறை பார்க்க வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது
صحيح البخاري
1906 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: «لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1906
பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்கக் கூடாது என்று இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகக் கட்டளையிடுகிறது. எனவே தான் நபியின் கட்டளைப்படி (நம் விருப்பப்படி அல்ல) பிறையைப் பார்த்துத் தான் நோன்பு வைக்க வேண்டும்; பெருநாள் கொண்டாட வேண்டும். பிறையைக் கணிக்கக் கூடாது என்று கூறுகிறோம்.
மேலும் விபரத்துக்கு பிறை ஒரு ஆய்வு எனும் நமது நூலை வாசிக்கவும்.
ஒற்றுமை கோஷம்
பிறையை முன்கூட்டியே கணித்தால் எல்லோரும் ஒன்றாகவும், அமைதியாகவும் பெருநாள் கொண்டாட முடியும் என்ற வாதம் தவறானது. பிறையைக் கணிப்பது கூடாது என்று நபிமொழி தடை செய்கின்றது. எனவே பாவமான ஒரு காரியத்தில் சமுதாயத்தை ஒன்றுபடச் சொல்வதை ஏற்க முடியாது.
நமது பகுதியில் வேறுபட்ட நாட்களில் பெருநாள் கொண்டாடப்படுவதற்கு அவரவர் மனோ இச்சையின் அடிப்படையில் செயல்படுவதே காரணமாகும். நமது பகுதியில் பிறையைக் கண்ணால் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற சரியான நிலைபாட்டிற்கு நாம் அனைவரும் வந்துவிட்டால் நமது பகுதியில் ஒரே நாளில் பெருநாள் நடைபெறும்.
இதற்கு மாற்றமாக சிலர் சவுதிப் பிறையையும் சிலர் சர்வதேச பிறையையும் சிலர் கணிப்பு அடிப்படையில் செயல்படுவாதாலே குழப்பமும் வேறுபாடும் ஏற்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாத காரணத்தால் பிறையைக் கண்ணால் பார்த்தார்கள் என்று கூறி கணிப்பு முறையைத் திணிக்கப்பார்க்கிறார்கள்.
பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ணால் பார்த்துத் தான் செயல்பட்டார்கள் என்ற வாதத்தை நாம் வைக்கவில்லை.
பிறையைக் கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். அதைக் கண்ணால் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்ற உத்தரவை அவர்கள் கியாமத் நாள் வரைக்கும் வரும் உலக மக்களுக்கு இட்டுள்ளார்கள் என்பதே நமது வாதம்.
கண்ணால் பார்க்க வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட்ட பிறகு இங்கே கணிப்பைக் கொண்டு வந்தால் இறைத்தூதரின் உத்தரவு புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
நபியவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்கள் என்று இவர்கள் கூறப் போகின்றார்களா? அப்படி இவர்கள் கூறினால் நிச்சயமாக இவர்கள் இறைவனையும் இறைத்தூதரையும் இழிவுபடுத்தியவர்களே.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் எந்த ஒரு கட்டளையை இட்டாலும் அது அவர்களின் சுயக்கருத்தல்ல. மாறாக அதுவும் இறைவனிடமிருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதே. நபியவர்களுக்கு அறிவியல் அறிவு இன்றி இவ்வாறு கூறிவிட்டார்கள் என்றால் அதன் பொருள் அல்லாஹ் அறிவியல் அறிவின்றி இவ்வாறு கூறிவிட்டான் என்பதாகும்.
நாம் வணங்குவதற்கு அல்லாஹ் ஒரு வழியைக் காட்டுகிறான். அவன் காட்டிய வழியில் தான் அவனை வணங்க வேண்டுமே தவிர நமது மனோ இச்சைப்படி வேறு வழிகளைத் தேர்வு செய்வது வழிகேடாகும். அப்படி இறைவன் காட்டிய வழியைப் புறக்கணித்து வேறு வழியைத் தேடினால் அந்த வணக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.
மொத்தத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை விட்டுவிட்டு அவனுடைய அறிவில் குறைகண்டு அல்லாஹ்வுக்கே அறிவியலை கற்றுக் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக,
நார்வே பிரச்சனை
பிறையைக் கணிக்கலாம் என்பதற்கு நார்வே போன்ற நாட்டை இவர்கள் குறிப்பிடுவதாகக் கூறினீர்கள். அந்நாட்டில் ஆறு மாத காலம் இரவு இன்றி பகலாக மட்டும் இருப்பதால் இங்கு இவர்களால் பிறையைக் கண்ணால் பார்க்க முடியாதே. கணிக்கத் தான் வேண்டும். எனவே நமது நாட்டிலும் பிறையைக் கணித்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் வாதம்.
அடிப்படையான அறிவு இல்லாத காரணத்தால் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.
மார்க்க சட்டதிட்டங்கள் யாவும் அதைச் செயல்படுத்துவதற்குரிய சூழல் இருந்தால் மட்டுமே கடமையாகும். செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது அதற்கேற்றவாறு வேறோரு வழிகாட்டலை மார்க்கம் கூறும். இந்த அடிப்படையை இவர்கள் விளங்கியிருந்தால் தங்களது தவறான கொள்கைக்கு நார்வேவை ஆதாரமாகக் காட்டியிருக்கமாட்டார்கள்.
உதாரணமாக பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது. பன்றி இறைச்சியைத் தவிர வேறு எந்த உணவும் ஒருவருக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ண அவருக்கு மார்க்கம் அனுமதிக்கின்றது. இப்போது அறிவிலியான இந்தக் கூட்டத்தினர் உணவு கிடைக்காதவர்கள் பன்றி இறைச்சியைத் தானே உண்ண முடியும். எனவே எல்லோரும் பன்றி இறைச்சியை உண்ணலாம் என்று கூறினால் அது எவ்வளவு பெரிய மடமைத்தனமோ அது போன்றே இவர்களின் இவ்வாதம் அமைந்திருக்கின்றது.
நம் நாடு உட்பட பெரும்பாலான நாடுகளில் பிறையைக் கண்ணால் பார்க்கும் சூழல் இருக்கின்றது. நார்வே மட்டும் ஆறுமாத காலம் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது.
பிறை கண்ணுக்குத் தென்படும் சூழல் இருந்தாலே பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற சட்டம் வரும். பிறை கண்ணுக்குத் தெரியாவிட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நமக்கு கூறிவிட்டார்கள்.
صحيح البخاري رقم فتح الباري (3/ 27)
1906 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: «لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1906
பிறையைக் கண்ணால் பார்ப்பதற்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்று இந்தச் செய்தியில் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.