கேள்வி :
உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை?
அப்துல் கனி
பதில் :
உலக அளவில் பிரச்சாரம் செய்ய யாராலும் முடியாது. ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் அது உலக அளவில் பிரச்சாரம் செய்வதாக ஆகாது. ஆங்கிலம் அறியாத மக்கள் தான் உலகில் அதிகமாக உள்ளனர்.
அதே சமயத்தில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் எல்லா மொழி பேசும் மக்களிலும் ஆங்கிலம் அறிந்த சிலர் உள்ளதால் அவர்கள் மூலம் அந்தக் கருத்து பரவும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனாலும் நாம் அதற்காக முயற்சி எடுக்க விரும்பவில்லை. நாம் ஆங்கிலம் கற்று அதன் மூலம் உலகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தால் நமக்குப் புகழ் கிடைக்கும். ஆனால் நாம் உருவாக்க நினைக்கும் சீர்த்திருத்தம் நிலை பெறாது. ஏனெனில் நாம் பிரச்சாரம் செய்வதுடன் நின்று விடுவதில்லை.
மாறாக ஒரு ஊரில் பிரச்சாரம் செய்த பின் அந்த ஊரில் தொடர்ந்து பிரச்சாரங்கள் நடப்பதற்கு தொடர் முயற்சிகள் எடுக்கிறோம்.
அப்பிரச்சாரத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு எப்படி அதைச் சமாளிப்பது என்று வழிகாட்டுகிறோம்.
பிரச்சாரம் தொடர்ந்து நடக்க மர்கஸ்களை நாடெங்கும் உருவாக்குகிறோம்.
அவற்றில் பிரச்சாரம் செய்யக் கூடியவர்களை தயார்படுத்தும் பணிகளையும் செய்கிறோம்.
சமுதாயத்தின் நன்மைக்காக களம் இறங்கி போராடுகிறோம்.
இன்னும் என்னென்னவெல்லாம் நாங்கள் செய்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள்.
போனோம்; பேசினோம்; வந்தோம் என்ற நிலையில் நாம் இருந்தால் நீங்கள் கூறுவது போல் நடக்க முடியும். விதையைத் தூவி விட்டு அதற்குத் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணியையும் சேர்த்துச் செய்வதால் தமிழகத்தைத் தாண்டிச் சென்று பணி செய்ய நமக்குச் சக்தி இல்லை.
உலகளாவிய அளவில் பேசப்படும் எந்தப் பேச்சாளரும் தனது பிரச்சாரத்துக்குப் பின் அந்த ஊர் என்ன ஆனது என்று கவலைப்பட மாட்டார்கள். அது போல் நாம் இருந்தால் நாமும் உலகம் சுற்றி பேரும், புகழும், பணமும் அடையலாம். நம்முடைய இலட்சியம் வேறு. சர்வதேசப் புகழ் பெற்றவர்களின் இலக்கு வேறு.