தாலி அல்லது கருகமணி அணியலாமா?

கேள்வி :

திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி அல்லது கருகமணி போடுகின்றார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? திருமணத்தில் பெண்கள் கழுத்தில் என்ன அணிய வேண்டும். திருமணத்தின் போது பெண்கள் என்ன ஓத வேண்டும்?

பதில் :

திருமணத்தின் போது தாலி அணிவதும், கருகமணி கட்டுவதும் முழுக்க முழுக்க பிற மதக் கலாச்சாரமாகும்.

حدثنا عثمان بن أبي شيبة حدثنا أبو النضر حدثنا عبد الرحمن بن ثابت حدثنا حسان بن عطية عن أبي منيب الجرشي عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே!

(நூல்: அபூதாவூத் 3512)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மதத்தின் கலாச்சாரத்தை, சடங்குகளைப் பின்பற்றுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார். எனவே எக்காரணம் கொண்டும் இந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது.

திருமணத்தின் போதும், திருமணத்திற்குப் பிறகும் பெண் கழுத்தில் ஏதாவது அணிந்து தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. இதுவும் பிற மதத்தினரின் நம்பிக்கை தான். மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் தடுக்கப்பட்ட செயல் தான். இஸ்லாத்தைப் பொறுத்த வரை திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே ஆகும். இதற்கென எந்தவித அடையாளத்தையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை.