தவணை முறையில் வியாபாரம் செய்யலாமா?

கேள்வி :

தவணை முறையில் வியாபாரம் செய்யலாமா?

பதில் :

தவணை வியாபாரம் பற்றி நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது.

ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது.

அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாகக் கொடுக்கலாம். அதுபோல் தனக்கு வேண்டியவர்களுக்கு லாபமே வைக்காமல் அசலுக்குக் கூட விற்கலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை.

ஆயிரம் ரூபாய்க்கு நாம் விற்கும் பொருளை நம்முடைய உறவினருக்கு 900 ரூபாய்க்குக் கொடுப்போம். அல்லது இலவசமாகக் கூட கொடுப்போம். இது தடுக்கப்பட்ட இரட்டை விலையில் சேராது. ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்ததால் எனக்கும் இலவசமாகக் கொடு என்று மற்றவர்கள் கேட்க முடியாது.

கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று இரட்டை விலை நிர்ணயிக்கும் போதுதான் அது வட்டியாக ஆகின்றது. அவ்வாறு இல்லாமல் வேறு காரணங்களுக்காக ஒரு பொருளுக்கு இரு விலைகள் நிர்ணயிப்பது குற்றமாகாது.

ஒரு பொருள் வாங்கினால் இன்ன விலை; பத்து பொருள் வாங்கினால் இன்ன விலை என்று சொல்லும்போது இங்கும் இரட்டை விலைதான் வருகிறது. ஆனால் இது குற்றமில்லை. ஏனெனில் கடனுக்காக நாம் விலையை அதிகரிக்கவில்லை.

ஆனால் ரொக்கமாக விற்கும்போது ஆயிரம் ரூபாய் எனவும், கடனாக விற்கும்போது 1200 ரூபாய் எனவும் விற்பனை செய்தால் கூடுதலான 200 ரூபாய் பொருளுக்கான விலை அல்ல. வியாபாரியின் பணம் வாடிக்கையாளரிடம் சில நாட்கள் இருக்கிறது என்பதற்காகத்தான் 200 ரூபாய் அதிகமாக்கப்படுகிறது.

ஒருவரின் பணம் இன்னொருவரிடம் இருப்பதற்காக பெறக்கூடிய ஆதாயம் தான் வட்டியாகும். எனவே கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று விற்பதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.