கேள்வி :
தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா?
பதில் :
திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.
அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம்.
இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இந்த நன்மை மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது கிடைக்காது.
அல்லாஹ் திருக்குர்ஆனை வழங்கியது பொருள் தெரியாமல் வாசிப்பதற்காக மட்டும் அல்ல. மாறாக அதை விளங்குவதற்கும், சிந்திப்பதற்கும் தான் அல்லாஹ் அருளினான். விளங்குவதற்கும், சிந்திப்பதற்கும் அரபுமொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குப் பிரச்சனை இல்லை. அரபுமொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்ப்புகளை வாசிப்பதன் மூலம் தான் இது சாத்தியமாகும்.
மொழி பெயர்ப்பை வாசித்து அதைப் புரிந்து கொண்டு சிந்தித்தால் குர்ஆனை விளங்கிய நன்மையும் சிந்தித்ததற்கான நன்மையும் கிடைக்கும்.
குர்ஆனைச் சிந்திப்பது மட்டுமின்றி அதன்படி அமல் செய்தால் அதற்கான நன்மையைப் பெற முடியும்.
ஒருவர் மூலத்தை வாசித்து மொழி பெயர்ப்பைப் பார்த்து புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அவர் எல்லா விதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்வார்.
ஒருவர் அர்த்தத்தை விளங்காமல் வெறுமனே ஓதிக் கொண்டு வந்தால் அந்த நன்மை மட்டும் தான் அவருக்குக் கிடைக்கும். மற்றொருவர் மூலத்தை ஓதத் தெரியாமல் புரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்தால் அதற்கான நன்மை அவருக்குக் கிடைக்கும்.