ஷரியத் பைனான்ஸ் குறித்து விளக்கவும்

கேள்வி :

ஷரியத் பைனான்ஸ் குறித்து விளக்கவும்

பதில் :

வட்டி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதாலும், வட்டியை வெறுப்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளதாலும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

வட்டி இல்லாத வங்கி நடத்துகிறோம்; ஷரீஅத் ஃபைனான்ஸ் நடத்துகிறோம் எனக் கூறிக் கொண்டு மக்களைச் சுரண்டி வருகின்றனர். ஆனால் இவர்கள் நடத்துவது ஷரீஅத் ஃபைனான்ஸ் அல்ல. ஷரீஅத்துக்கு எதிரான ஃபைனான்ஸ் ஆகும்.

வட்டியில்லாமல் கடன் தருகிறோம் எனக் கூறிக் கொண்டு இவர்கள் நிதிநிறுவனம் உருவாக்குகிறார்கள். நாம் இவர்களை அணுகி கடன் கேட்டால் ரொக்கமாகக் கடன் தர மாட்டார்கள். எதற்காகக் கடன் என்று கேட்பார்கள். வீடு வாங்க அல்லது கார் வாங்க கடன் வேண்டுமென்று நாம் கூறினால் அந்தக் காரை அல்லது அந்த வீட்டை நாங்கள் வாங்கித் தருகிறோம் எனக் கூறி காரை அல்லது வீட்டை விலைக்கு வாங்கி அதைக் கடனாகத் தருவார்கள். கடன் அடையும் வரை அதைத் தங்கள் பெயரில் அடைமானமாக வைத்துக் கொள்வார்கள்.

அதாவது காரின் விலை பத்து லட்சம் என்றால் அந்தக்காரை இவர்கள் வாங்கி நமக்கு 12 லட்சத்துக்கு தருவார்கள். 12 லட்சம் தந்தால் போதும் வட்டி தர வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் இவர்கள் ரொக்கமாக பத்து லட்ச ரூபாய் கடனாகத் தந்தால் பத்து லட்சத்துக்கு அந்தக் காரை நாம் வாங்க முடியும். வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் மூலம் அந்தக் காரை வாங்குவதாக இருந்தால் பத்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும். ஆனால் இவர்கள் வட்டியை விட மேலும் மும்மடங்கு கொள்ளை அடிப்பதற்கு ஷரீஅத் போர்வை போர்த்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

சந்தையில் பத்து லட்சத்துக்குக் கிடைக்கும் காரை இவர்கள் கடனாக வாங்கித்தரும் காரணத்தால்தான் 12 லட்சத்தை நம்மிடம் கறந்து விடுகிறார்கள். இது அப்பட்டமான கொடும் வட்டி என்பதில் சந்தேகம் கிடையாது.

வீடு வாங்குவதற்காக பணமாகக் கடன் கொடுத்தால் பல இடங்களில் விசாரித்து எங்கே குறைவாக உள்ளதோ அங்கே வாங்கிக் கொள்ள முடியும். இதை விட்டுவிட்டு நாங்கள்தான் வீடு வாங்கித் தருவோம் என்று கூறி வட்டியைவிட அதிக விலைக்கு விற்பது என்ன நியாயம்? இதற்குத்தான் ஷரியத் பைனான்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

வட்டிக்கடைக்காரர்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக ஒரு கூட்டம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது. சில ஆலிம்கள் இது ஷரீஅத் அடிப்படையிலானது என்று பத்வா கொடுத்து பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வட்டியை வேறுவடிவத்தில் வாங்குவதுடன் இவர்கள் இன்னொரு பாவமும் செய்கிறார்கள்.

இடைத் தரகராக இருந்து விலையை ஏற்றிவிடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பத்து லட்சம் பெறுமானமுள்ள பொருளை இடையில் புகுந்து 12 லட்சமாக ஆக்கும் குற்றத்தையும் இவர்கள் செய்கிறார்கள்.

ஆபத்தான நிலையில் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு அதற்காக வட்டியில்லா கடன் கேட்டால் ஷரீஅத் ஃபைனான்சில் தருவார்களா என்றால் தர மாட்டார்கள். வீட்டையோ, வேறு சொத்தையோ அடைமானமாக வைத்துக் கொண்டு மருத்துவத்துக்குக் கடன் தாருங்கள் என்று கேட்டாலும் தர மாட்டார்கள். நாமே விலை பேசி முடித்த பொருளை அதே விலைக்கு வாங்கி அதைவிட இரண்டு மூன்று லட்சம் அதிக விலைக்கு நம்மிடம் விற்கும் இவர்கள் வட்டி வாங்குவோரை விட அயோக்கியத்தனம் செய்பவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.