ஸலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா?

கேள்வி :

துஆ கேட்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளைக் கேட்க வேண்டும். துஆவை முடிக்கும் போதும் ஸலவாத் சொல்லித் தான் முடிக்க வேண்டும். இப்படி கேட்டால் தான் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்” என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கு திர்மிதியில் ஹதீஸ் உண்டு என்கிறார்கள். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? இப்படித் தான் கேட்க வேண்டுமா?

காதிர்

பதில் :

பொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள்.

இதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்துப் பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை பேணப்பட வேண்டும் என அந்த ஹதீஸ் கூறவில்லை.

மாறாக அந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.

1266حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدْ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ رواه أبو داود (3399 ترمذي(

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)

நூல் : திர்மிதீ

தொழுகையின் இறுதி அமர்வில் நாம் ஓத வேண்டியவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முதலில் அத்தஹிய்யாத் ஓதி இறைவனைப் புகழ வேண்டும். இதன் பிறகு ஸலவாத்துச் சொல்ல வேண்டும். ஆனால் மேற்கண்ட சம்பவத்தில் அந்த நபித்தோழர் இவற்றைச் செய்யாமல் எடுத்த எடுப்பில் பிரார்த்தனையைத் துவக்கி விடுகிறார். அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டியதை ஓதாமல் விட்டு விடுகின்றார். இச்செயலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியில் எத்தனையோ பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். நமக்கும் பல பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

உதாரணமாக கழிவறைக்குள் நுழையும் முன்பு இறைவா ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றும், கழிவறையிலிருந்து வெளியேறும் போது இறைவா உன் மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட பிரார்த்தனையை அல்லாஹ்வைப் போற்றி நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பிறகு தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை.

இது போன்று பிரார்த்தனை வாசகங்கள் மட்டும் அடங்கிய எண்ணற்ற துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்கும் ஹதீஸ்களில் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.

எனவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லிய பிறகு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மார்க்கம் நிபந்தனையிடவில்லை.

ஒவ்வொரு துஆவின் போதும் ஒருவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் ஸலவாத்து ஓதி அதன் பின்னர் கோரிக்கையைக் கேட்டால் அது தடுக்கப்பட்டதல்ல. ஆனால் துஆவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக அதை மார்க்கம் கூறவில்லை.