கேள்வி :
ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரசுரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அது சரியான செய்தியா?
பதில் :
ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை.
இப்பிரசுரத்தில் குறிப்பிடப்படும் மூன்று ஹதீஸ்களிலும் மாதத்தின் இறுதியில் என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக மாதத்தின் மத்தியில் என்று தவறாக மொழி பெயர்த்துள்ளனர்.
இந்த மூன்று ஹதீஸ்களின் அரபு மூலத்தையும், அதன் தமிழாக்கத்தையும் காண்போம். நாமாக தமிழாக்கம் செய்வதை விட மற்றவர்கள் செய்த தமிழாக்கத்தையே இங்கே பயன்படுத்தியுள்ளோம்.
மேற்கண்ட மூன்று ஹதீஸ்களுக்கும் ரஹ்மத் ட்ரஸ்ட் செய்துள்ள தமிழாக்கம் இது தான்.
صحيح مسلم
2808 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ مُطَرِّفٍ – وَلَمْ أَفْهَمْ مُطَرِّفًا مِنْ هَدَّابٍ – عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ – رضى الله عنهما – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ لَهُ أَوْ لآخَرَ « أَصُمْتَ مِنْ سَرَرِ شَعْبَانَ ». قَالَ لاَ. قَالَ « فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ ».
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என்னிடம்’ அல்லது “மற்றொரு மனிதரிடம்’, “நீர் ஷஅபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை’ என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் அறிவிக்கிறார்.
நூல் : முஸ்லிம்
صحيح مسلم
2802 – وَحَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِىُّ حَدَّثَنَا مَهْدِىٌّ – وَهُوَ ابْنُ مَيْمُونٍ – حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ عَنْ مُطَرِّفٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ – رضى الله عنهما – أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ لَهُ أَوْ قَالَ لِرَجُلٍ وَهُوَ يَسْمَعُ « يَا فُلاَنُ أَصُمْتَ مِنْ سُرَّةِ هَذَا الشَّهْرِ ». قَالَ لاَ. قَالَ « فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ »
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை’ என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் அறிவிக்கிறார்.
நூல் : முஸ்லிம்
صحيح مسلم
2810 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ ابْنِ أَخِى مُطَرِّفِ بْنِ الشِّخِّيرِ قَالَ سَمِعْتُ مُطَرِّفًا يُحَدِّثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ – رضى الله عنهما – أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ لِرَجُلٍ « هَلْ صُمْتَ مِنْ سِرَرِ هَذَا الشَّهْرِ شَيْئًا ». يَعْنِى شَعْبَانَ. قَالَ لاَ. قَالَ فَقَالَ لَهُ « إِذَا أَفْطَرْتَ رَمَضَانَ فَصُمْ يَوْمًا أَوْ يَوْمَيْنِ ». شُعْبَةُ الَّذِى شَكَّ فِيهِ قَالَ وَأَظُنُّهُ قَالَ يَوْمَيْنِ.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “இந்த மாதத்தின் – அதாவது ஷஅபான் – இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர் “இல்லை’ என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் “ஒரு நாள், அல்லது இரண்டு நாட்கள்’ நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். (இங்கே அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயம் தெரிவிக்கிறார்கள்.) “இரண்டு நாட்கள்’ என்று கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
நூல் : முஸ்லிம்
மேற்கண்ட மூன்று அறிவிப்புகளிலும் கடைசி என்று உள்ள இடத்தில் நடுப்பகுதி என்று இவர்கள் மாற்றிக் கொண்டு புது நோன்பை உருவாக்க முயன்றுள்ளனர்.
இதே ஹதீஸ் புகாரியிலும் உள்ளது. அதற்கு ரஹ்மத் ட்ரஸ்ட் செய்துள்ள தமிழாக்கம் இதோ:
صحيح البخاري
1983 – حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ غَيْلاَنَ، ح وحَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ سَأَلَهُ – أَوْ سَأَلَ رَجُلًا وَعِمْرَانُ يَسْمَعُ -، فَقَالَ: «يَا أَبَا فُلاَنٍ، أَمَا صُمْتَ سَرَرَ هَذَا الشَّهْرِ؟» قَالَ: – أَظُنُّهُ قَالَ: يَعْنِي رَمَضَانَ -، قَالَ الرَّجُلُ: لاَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ»، لَمْ يَقُلِ الصَّلْتُ: أَظُنُّهُ يَعْنِي رَمَضَانَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ ثَابِتٌ: عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ سَرَرِ شَعْبَانَ»
முதர்ரிஃப் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க மற்றொருவரிடமோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா? என்று கேட்டார்கள். அம்மனிதர் இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் நோன்பை விட்டு விட்டால் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே, இம்மாதம்’ என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ பின் மைமூன்) கூறியதாக நான் நினைக்கிறேன்! என்று அபுந்நுஃமான் கூறுகிறார்.
நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு இம்மாதம்’ என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்! என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸல்த்’ என்பார் கூறவில்லை. ஷஅபானின் கடைசி’ என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
நூல் : புகாரி 1983
புகாரியில் இடம் பெற்ற மேற்கண்ட அறிவிப்பிலும், முஸ்லிமில் உள்ள அறிவிப்பிலும் இறுதி என்று தமிழாக்கம் செய்த இடத்தில் சரர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல் பரவலாக மக்கள் பயன்படுத்தாமல் அரிதாகப் பயன்படுத்தி வந்த சொல்லாகும். இதனால் இதன் பொருள் என்ன என்பதில் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு உள்ளன.
மேற்கண்ட புகாரி அறிவிப்பின் விளக்க உரையான பத்ஹுல்பாரியில் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
وَالسَّرَر بِفَتْحِ السِّين الْمُهْمَلَة وَيَجُوزُ كَسْرُهَا وَضَمُّهَا جَمْعُ سُرَّةٍ وَيُقَال أَيْضًا سِرَار بِفَتْحِ أَوَّله وَكَسْرِهِ , وَرَجَّحَ الْفَرَّاء الْفَتْح , وَهُوَ مِنْ الِاسْتِسْرَار , قَالَ أَبُو عُبَيْد وَالْجُمْهُور : الْمُرَاد بِالسُّرَرِ هُنَا آخِر الشَّهْر , سُمِّيَتْ بِذَلِكَ لِاسْتِسْرَارِ الْقَمَر فِيهَا وَهِيَ لَيْلَة ثَمَانٍ وَعِشْرِينَ وَتِسْع وَعِشْرِينَ وَثَلَاثِينَ . وَنَقَلَ أَبُو دَاوُدَ عَنْ الْأَوْزَاعِيِّ وَسَعِيد بْن عَبْد الْعَزِيز أَنَّ سُرَره أَوَّله , وَنَقَلَ الْخَطَّابِيُّ عَنْ الْأَوْزَاعِيِّ كَالْجُمْهُورِ , وَقِيلَ السُّرَر وَسَطُ الشَّهْر حَكَاهُ أَبُو دَاوُدَ أَيْضًا وَرَجَّحَهُ بَعْضهمْ , وَوَجَّهَهُ بِأَنَّ السُّرَر جَمْع سُرَّة وَسُرَّة الشَّيْء وَسَطه , وَيُؤَيِّدُهُ النَّدْبُ إِلَى صِيَام الْبِيضِ وَهِيَ وَسَط الشَّهْر وَأَنَّهُ لَمْ يَرِد فِي صِيَام آخِر الشَّهْر نَدْب , بَلْ وَرَدَ فِيهِ نَهْيٌ خَاصٌّ وَهُوَ آخِر شَعْبَان لِمَنْ صَامَهُ لِأَجْلِ رَمَضَان , وَرَجَّحَهُ النَّوَوِيّ بِأَنَّ مُسْلِمًا أَفْرَدَ الرِّوَايَة الَّتِي فِيهَا سُرَّة هَذَا الشَّهْر عَنْ بَقِيَّة الرِّوَايَات وَأَرْدَفَ بِهَا الرِّوَايَات الَّتِي فِيهَا الْحَضّ عَلَى صِيَام الْبِيض وَهِيَ وَسَط الشَّهْر كَمَا تَقَدَّمَ , لَكِنْ لَمْ أَرَهُ فِي جَمِيع طُرُق الْحَدِيث بِاللَّفْظِ الَّذِي ذَكَرَهُ وَهُوَ ” سُرَّة ” بَلْ هُوَ عِنْد أَحْمَد مِنْ وَجْهَيْنِ بِلَفْظِ ” سِرَار ” وَأَخْرَجَهُ مِنْ طُرُق عَنْ سُلَيْمَان التَّيْمِيِّ فِي بَعْضهَا سُرَر وَفِي بَعْضهَا سِرَار , وَهَذَا يَدُلّ عَلَى أَنَّ الْمُرَاد آخِر الشَّهْر ,
அபூ உபைத் அவர்களும், பெரும்பாலான மொழி வல்லுனர்களும் சரர் என்பதன் பொருள் இறுதி எனக் கூறுகின்றனர். சரர் என்றால் மறைதல் எனப் பொருள். 28 ஆம் நாள் சந்திரன் மறைந்து விடுவதால் இறுதி நாளுக்கு சரர் எனக் கூறப்படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
அவ்சாயீ, ஸயீத் பின் அப்துல் அஸீஸ் ஆகியோர் மாதத்தின் ஆரம்பம் என்று பொருள் கொண்டதாக அபூதாவூத் கூறுகிறார். ஆனால் அவ்ஸாயீ மாதத்தின் இறுதி என்று பெரும்பாலோர் பொருள் கொண்டது போல் பொருள் கொண்டதாக கத்தாபி கூறுகிறார். மாதத்தில் நடுப்பகுதி என்று சிலர் பொருள் கொண்டதாக அபூதாவூத் கூறுகிறார்
இப்படி மூன்று அர்த்தம் சொல்லப்பட்டாலும் மூன்றாவது அர்த்தத்தைச் சொன்ன அறிஞர் கணக்கில் கொள்ளப்படத் தக்கவர் அல்ல என்பதால் தான் சிலர் என்று சொல்லப்படுகிறது. மொழிப் பிரச்சனையில் சர்ச்சை வந்தால் மற்றவர்களை விட அபூ உபைத் கருத்துக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அத்துடன் பெரும்பாலான அறிஞர்கள் அவரது கருத்தையே வழிமொழிந்துள்ளனர். நடுப்பகுதி என்று இப்பிரசுரத்தில் மொழி பெயர்த்திருப்பது அறியாமையாகும்.
முஸ்லிம் விளக்க உரை நூலான ஷரஹ் முஸ்லிமிலும் நவவி அவர்கள் இவ்வாறே கூறுகிறார்.
(ضَبَطُوا ( سَرَر ) بِفَتْحِ السِّين وَكَسْرهَا , وَحَكَى الْقَاضِي ضَمَّهَا , قَالَ : وَهُوَ جَمْع ( سُرَّة ) وَيُقَال : أَيْضًا سَرَار وَسِرَار بِفَتْحِ السِّين وَكَسْرهَا وَكُلّه مِنْ الِاسْتِسْرَار , قَالَ الْأَوْزَاعِيُّ وَأَبُو عُبَيْد وَجُمْهُور الْعُلَمَاء مِنْ أَهْل اللُّغَة وَالْحَدِيث وَالْغَرِيب : الْمُرَاد بِالسُّرَرِ آخِر الشَّهْر , سُمِّيَتْ بِذَلِكَ لِاسْتِسْرَارِ الْقَمَر فِيهَا , قَالَ الْقَاضِي : قَالَ أَبُو عُبَيْد وَأَهْل اللُّغَة : السُّرَر آخِر الشَّهْر , قَالَ :وَأَنْكَرَ بَعْضهمْ هَذَا , وَقَالَ : الْمُرَاد وَسَط الشَّهْر , قَالَ : وَسِرَار كُلّ شَيْء وَسَطه , قَالَ هَذَا الْقَائِل : لَمْ يَأْتِ فِي صِيَام آخِر الشَّهْر نَدْب فَلَا يُحْمَل الْحَدِيث عَلَيْهِ , بِخِلَافِ وَسَطه فَإِنَّهَا أَيَّام الْبِيض , وَرَوَى أَبُو دَاوُدَ عَنْ الْأَوْزَاعِيِّ سُرَره : أَوَّله , وَنَقَلَ الْخَطَّابِيُّ عَنْ الْأَوْزَاعِيِّ سُرَره : آخِره , قَالَ الْبَيْهَقِيُّ فِي السُّنَن الْكَبِير بَعْد أَنْ رَوَى الرِّوَايَتَيْنِ عَنْ الْأَوْزَاعِيِّ : الصَّحِيح آخِره , وَلَمْ يَعْرِف الْأَزْهَرِيّ أَنَّ سُرَره أَوَّله , قَالَ الْهَرَوِيُّ : وَاَلَّذِي يَعْرِفهُ النَّاس أَنَّ سُرَره آخِره , وَيُعْضَد مِنْ فَسِرّه بِوَسَطِهِ الرِّوَايَة السَّابِقَة فِي الْبَاب قَبْله : ” سُرَّة هَذَا الشَّهْر ” , وَسَرَارَة الْوَادِي وَسَطُه وَخِيَاره , وَقَالَ اِبْن السِّكِّيت : سِرَار الْأَرْض : أَكْرَمهَا وَوَسَطهَا , وَسِرَار كُلّ شَيْء : وَسَطه وَأَفْضَله , فَقَدْ يَكُون سِرَار الشَّهْر مِنْ هَذَا , قَالَ الْقَاضِي : وَالْأَشْهَر أَنَّ الْمُرَاد آخِر الشَّهْر كَمَا قَالَهُ أَبُو عُبَيْد وَالْأَكْثَرُونَ
நவவி அவர்கள் மூன்று கருத்துக்களையும் எடுத்துக் காட்டி விட்டு காரண காரியத்துடன் அபூ உபைத் கூறும் பொருளே சரியானது என்று நிறுவுகிறார்.
இந்த நோன்பை நோற்காவிட்டால் ரமளான் கழித்து நோற்குமாறு இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. நடுப்பகுதி என்று பொருளிருக்குமானால் ரமளான் கழித்து நோற்கத் தேவையில்லை. ரமளானுக்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ளதால் ஷஅபான் மாதத்திலேயே அதை நோற்க முடியும்.
அந்த மாதத்தின் கடைசியில் நோன்பு வைக்காவிட்டால் தான் ரமலான் மாதம் முடிந்து அதை நோற்குமாறு கூற முடியும்.
இதைச் சிந்தித்தாலும் இவர்கள் செய்துள்ள அர்த்தம் தவறானது என்பதும், அதன் அடிப்படையில் இவர்கள் நிறுவிய வாதமும் தவறானது என்பதும் உறுதியாகிறது.