பிராவிடண்ட் ஃபண்ட் கூடுமா?

கேள்வி :

பிராவிடண்ட் ஃபண்ட் கூடுமா?

பதில் :

அரசு அலுவலகங்களிலும், பெரிய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நமது நாட்டிலும் இன்னும் பல நாடுகளிலும் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்பட்ட தொகை ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதில் பிரச்சனை இல்லை.

ஆனால் இவ்வாறு பிடிக்கப்படும் தொகைக்கு அவ்வப்போது வட்டியைக் கணக்கிட்டு ஊழியர்கள் கணக்கில் சேர்ப்பார்கள். ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட தொகை பத்து லட்சம் என்றால் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும். இதில்தான் பிரச்சனை உள்ளது.

வட்டி மார்க்கத்தில் தடுக்கப்பட்டு இருந்தாலும் நம் விருப்பப்படி முடிவு செய்யும் காரியங்களில்தான் நாம் முடிவு எடுக்க முடியும். என்னுடைய ஊதியத்தில் பிராவிடண்ட் ஃபண்டுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்று கூறும் உரிமை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊழியர்கள் மீது இது கட்டாயமாகத் திணிக்கப்படுவதால் இது நிர்பந்தம் என்ற வகையில் சேரும். இதற்காக ஊழியர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்.

ஆனால் ஓய்வு பெறும்போது வட்டி இல்லாமல் ஊழியரிடமிருந்து பிடித்த பணத்தை மட்டும் பெற்றுக் கொள்ள வழி இருந்தால் அந்த வழியைத் தேர்வு செய்து வட்டியில் இருந்து விடுபட வேண்டும்.

அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளைக் கையாண்டு வட்டியை வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். வட்டியுடன் சேர்த்துத்தான் அந்தப்பணம் கிடைக்கும்; இல்லாவிட்டால் நம்முடைய ஊதியத்தில் இருந்து சேமிக்கப்பட்ட பணமே கிடைக்காது என்ற நிலை இருந்தால் அப்போது நிர்பந்தம் என்ற நிலைக்கு ஒருவர் தள்ளப்படுகிறார். அவர் மீது திணிக்கப்பட்ட வட்டியை வாங்கிக் கொண்டால் அதற்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

சக்திக்கு மீறி யாரையும் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286