பிறந்த நாள் கொண்டாடலாமா?

கேள்வி :

எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா?

இர்பான்

பதில் :

பிறந்த நாள் கொண்டாட்டம் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்றாகும். ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாட அதிகத் தகுதி உள்ளது என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். ஆனால் அவர்கள் தமது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை.

மார்க்க வழிபாடு என்ற அடிப்படையில் இல்லாமல் மகிழ்ச்சிக்காக கொண்டாடினால் என்ன தவறு என்ற காரணம் கூறி சிலர் இதை நியாயப்படுத்துகிறார்கள்.

இது வணக்க வழிபாடு இல்லை என்பது உண்மை தான். தர்க்கரீதியாக இப்படிக் காரணம் கூறினாலும் அதில் அறிவுப்பூர்வமான அம்சம் இருக்க வேண்டும். அப்படி எதுவும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இல்லை.

ஒருவன் தான் செய்த சதனைகளைக் கொண்டாடினால் அதில் பொருளிருக்கும். ஒருவன் பிறப்பதில் அவனது உழைப்போ தேர்வோ இல்லை.

மேலும் பிறந்த நாள் என்பது நமது வாழ்நாளில் ஒரு ஆண்டு குறைகிறது என்ற செய்தியைத் தான் சொல்கிறது. இது கொண்டாட்டத்துக்கு உரியது அல்ல.

ஒருவன் எந்த நாளில் பிறந்தானோ அந்த நாள் மீண்டும் வராது. அது எப்போதோ போய்விட்டது. இவன் கொண்டாடுவது பிறந்த நாள் அல்ல.

இப்படி பல காரணங்களால் இது அறிவற்ற கொண்டாட்டமாக உள்ளது.

எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் அதற்காக வழக்கத்தை விட பெருமளவு பொருளாதாரம் செலவிட வேண்டிய நிலை இருக்கும். முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது ஓர் அங்கமாகி விட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களையும் அது பாதிக்கும்.

பிறந்த நாள் கொண்டாடாவிட்டால் நம்மை இழிவாகக் கருதுவார்களோ என்று எண்ணி கடன் வாங்கி கொண்டாடும் நிலை ஏற்படும். வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகளுக்கு பிறந்த நாள் என்ற பெயரில் சக மாணவர்களுக்கு இனிப்புகள் அல்லது பரிசுகள் வழங்கினால் ஏழை மாணவனின் மனம் என்ன பாடுபடும்? நீ எப்போ இனிப்பு தருவாய் என்று சக மாணவர்கள் கேட்டால் வசதியற்ற மாணவனின் பெற்றோருக்கு இது சிரமமாகி விடும் என்று சமூகப் பொறுப்புடன் சிந்திக்க வெண்டும்.

பிறந்த நாள் கொண்டாட்டம் பிற்காலத்தில் கிறித்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும்.

3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முந்தையவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிததவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 3456

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்.