பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

கேள்வி :

பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் விளக்கம் தேவை.

ரஃபீக், நாகர்கோவில்

பதில்:

பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் சில சட்டங்கள் பொருந்தாது என்பது உண்மை தான். அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அதை இஸ்லாமிய அரசு தடுக்காது. அவர்கள் சிலை வழிபாடு செய்தால் அவர்களின் வழிபாட்டு உரிமை என்று அதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்களை அவர்கள் செய்யும் போது அந்தச் சபையில் நாம் இருப்பதற்கு இது எப்படி ஆதாரமாக அமையும்?

முஸ்லிமல்லாதவர்கள் நடித்துள்ள ஆபாசக் காட்சியை நாம் பார்ப்பது கூடுமா? அவர்கள் பன்றியைச் சாப்பிடுவதால் அதை அவர்கள் நமக்குத் தரும் போது நாம் சாப்பிட முடியுமா?

இறைவனின் கட்டளைகளும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும் பிறமதத்தினருக்குப் பொருந்துமா? பொருந்தாதா? என்ற அடிப்படையில் இப்பிரச்சனையை நாம் அனுகக் கூடாது.

மார்க்கம் தடை செய்த காரியங்களில் நாம் பங்கெடுப்பது கூடுமா? கூடாதா? என்ற அடிப்படையில் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை நாம் செய்யக் கூடாது என்று முஸ்லிம்களாகிய நமக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் அக்காரியங்கள் நடைபெறும் சபையில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான்.

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், வைபவங்களிலும் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

பொதுவாக அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்யும் வகையிலும், அதை மறுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்களுடன் நாம் அமரக் கூடாது என்று இவ்வசனம் கூறுகின்றது.

இத்தடையை மீறி அமர்ந்தால் நாமும் அவர்களைப் போன்றவர்களே என்று எச்சரிக்கின்றது.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவ்வாறு செய்தால் அமரக் கூடாது மற்றவர்கள் செய்தால் அமரலாம் என்று அல்லாஹ் வேறுபடுத்தி சட்டத்தைக் கூறவில்லை. மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தை யார் செய்தாலும் அந்தச் சபையில் இருக்கக்கூடாது என்று பொதுவாகவே கூறுகிறான்.

தீமை நடக்கக் கண்டால் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

صحيح مسلم

186 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ

“உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம்

தீமைகளைக் காணும் போது முடிந்தால் கையால் தடுக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் வெறுத்து ஒதுங்க வேண்டும்.

மூன்றாவதாகக் கூறப்பட்ட வெறுத்து ஒதுங்குவது என்ற நிலை பலவீனமான நிலை என்று கூறப்படுகின்றது. மார்க்கத்திற்குப் புறம்பான சபைகளை வெறுப்பதென்றால் அதில் நாம் பங்கெடுக்காமல் இருப்பதாகும். அந்தச் சபைகளில் கலந்து அவற்றுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு நான் மனதால் வெறுத்து விட்டேன் என்று கூற முடியாது.

பிறமதத்தவர்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சிகளில் இணைவைப்பு, மூடநம்பிக்கைகள், இசை போன்ற அனாச்சாரங்கள் நிறைந்திருக்கும். இந்நிகழ்ச்சிகளில் நாம் பங்கெடுத்துவிட்டு வந்தால் இத்தீமைகளை நாம் ஆதாரித்ததாக ஆகிவிடும். நாமே இவற்றைச் செய்த குற்றமும் ஏற்படும்.

மேலும் ஒருவர் தவறு செய்வதைக் கண்டால் ஏதோ ஒரு வகையில் அத்தவறை அவருக்கு உணர்த்துவது நமது கடமை. மார்க்கத்திற்கு மாற்றமான நிகழ்ச்சிகளை நாம் புறக்கணித்தால் தான் அவற்றை நடத்துபவர்கள் தாங்கள் செய்வது தவறு என்பதை உணருவார்கள். இந்நிகழ்ச்சிகளில் நமது பங்களிப்பை அளித்தால் தங்களது தவறுகளை அவர்களால் உணர முடியாமல் போகின்றது.

அழகிய முறையில் திருமணத்தை நடத்தி நாம் தான் அவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்காக பிறமதத்தினர்களை நமது திருமணங்களுக்கு அழைக்கலாம். ஆனால் நாம் அவர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனத்துக்கும், நபிமொழிக்கும் மாற்றமாக நடக்கும் நிலை உருவாகிறது.

மேலும் முஸ்லிமல்லதவர்களுக்கு இஸ்லாத்தின் சட்ட்திட்டங்கள் பொருந்தாது என்று கூறி அதில் கலந்து கொள்வதை நாம் கூடும் என்று சொன்னால் அவர்கள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம் என்றே கூற வேண்டும். அவர்கள் நடத்தும் கும்பாபிஷேகம், கோவில் திருவிழாக்கள், சிலை திறப்பு விழா, கிரகப் பிரவேசம், பூப்புனித நீராட்டு விழா, காது குத்தும் விழா என்று இன்னும் மார்க்கத்திற்கு மாற்றமான ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம் என்று கூற வேண்டி வரும்.

முடிவில் தீமையைக் கண்டால் அதை வெறுக்கும் குணம் காலப்போக்கில் அத்தீமைகளை ஆதரிக்கும் குணமாக மாறிவிடும். மேலும் அவர்களின் கலாச்சாரம் நமது சமுதாயத்திலும் தொற்றிக்கொள்ளும். எனவே தான் மார்க்கம் இதைத் தடைசெய்கின்றது.

மாற்றார்களின் திருமணத்தில் நமது மார்க்கம் தடுத்துள்ளவை நடக்குமானால் பங்கெடுக்கக் கூடாது என்றாலும் திருமணத்துக்கு முன்போ, அல்லது பின்போ தீமைகள் அரங்கேறாத போது மணமக்களைப் பார்த்துவிட்டு வந்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.

அவர்கள் வருத்தப்படாத வகையில் பக்குவமாக இப்ராஹீம் நபி காட்டிய வழியை நாம் பின்பற்றினால் நாமும் நமது கடமையைச் செய்தவர்களாக ஆவோம். அவர்களும் மனவருத்தப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இப்ராஹீம் நபியவர்கள் தம்மை நோயாளி என்று பொய் சொல்லி தீமையில் பஙெடுக்காமல் தவிர்த்துக் கொண்டனர். (பார்க்க திருக்குர்ஆன் 37:2)

இது முஸ்லிமல்லாதவர் என்ற இன வேறுபாட்டினால் அல்ல. மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளை ஒரு முஸ்லிம் செய்தாலும் நாம் புறக்கணிப்போம் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். செயலின் அடிப்படையில் தமது முடிவுகளை அமைத்துக் கொள்பவர்களுக்கு இது பிரச்சனை இல்லை.

முஸ்லிம்கள் நடத்தும் அனாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறு நிலை எடுப்பவர்களுக்குத் தான் இது கடினமானது.