கேள்வி :
பெண்கள் பொதுவாக எந்த அளவுக்கு ஆடை அணிய வேண்டும்? தொழுகையின் போது எந்த அளவுக்குத் தமது உடலை மறைக்க வேண்டும்?
பதில் :
பெண்களின் ஆடை குறித்து அறிஞர்கள் மத்தியில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது தான் நமக்குத் தெளிவு ஏற்படுத்தும்.
- பெண்கள் தமது முகத்தையும் முன் கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
- முகத்தையும், முன் கைகளையும் கூட மறைத்தாக வேண்டும் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.
- தொழுகையின் போது பாதங்கள் அறவே தெரியாத அளவுக்கு மறைக்க வேண்டும் என்று வேறு சிலர் கூறுகின்றனர். காலுறை அணியாமல் தொழக் கூடாது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.
பெண்கள் உடலை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனம் அமைந்துள்ளது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி யடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)
‘தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர’ என்ற சொற்றொடர் இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளது.
‘வெளியே தெரிபவை தவிர’ என்ற சொற்றொடர் முகம், முன் கைகள் ஆகிய இரண்டையும் தான் குறிக்கிறது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் இவ்வாறு விளக்கமளித்திருப்பதை இதற்குச் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.
முகம், முன் கைகளை பெண்கள் வெளிப்படுத்தலாம் என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் அந்த வாதத்திற்கு மேற்கண்ட வசனத்தை ஆதாரமாகக் கொள்வதை நாம் நிராகரிக்கிறோம்.
பெண்களின் உடலில் எந்தப் பகுதிகளை வெளிப்படுத்தலாம்? எந்தப் பகுதிகளை மறைக்க வேண்டும் என்பதற்கும் மேற்கண்ட வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இவ்வசனத்தில், ‘தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்’ என்ற வாக்கியமும், ‘……ஆகியோர் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்’ என்ற வாக்கியமும் உள்ளன.
அலங்காரம் என்று நாம் மொழி பெயர்த்த இடங்களில் ஸீனத் என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு அழகு என்று பலர் விளக்கம் கூறினாலும் இச்சொல்லுக்கு அலங்காரம் என்பதே சரியான பொருளாகும்.
அழகு என்பது ஒருவரது உடலில் இயற்கையாக அமைந்துள்ள கவர்ச்சியைக் குறிக்கும். அதாவது ஒருவரது நிறம், முக அமைப்பு, கட்டான உடல், உயரம், பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் அமைந்த பற்கள், கண்கள் போன்றவற்றை அழகு என்ற சொல் குறிக்கும்.
உடலின் ஒரு பகுதியாக இல்லாத ஆபரணங்கள், ஆடைகள், மேக்கப் செய்தல், லிப்ஸ்டிக் போன்றவற்றை அலங்காரம் என்ற சொல் குறிக்கும்.
அழகை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்கும். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்காது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனில் ஸீனத் என்ற சொல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களைக் கவனமாக ஆராய்ந்தால் ஸீனத் என்பது அலங்காரத்தைத் தான் குறிக்கும் என்பதைச் சந்தேகமற அறியலாம்.
வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம்.
திருக்குர்ஆன் 15:16
முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.
திருக்குர்ஆன் 37:6
இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத் தவனின் ஏற்பாடாகும்.
திருக்குர்ஆன் 41:12
அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை.
திருக்குர்ஆன் 50:6
முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத் தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
திருக்குர்ஆன் 67:5
மேற்கண்ட வசனங்களில் நட்சத்திரங்கள் வானத்துக்கு அலங்காரமாக அமைந்துள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான்.
நட்சத்திரங்கள் வானத்தின் ஓர் அங்கம் அல்ல. வானத்தில் ஓர் அங்கமாக இல்லாமல் வானத்துக்குக் கவர்ச்சியை நட்சத்திரங்கள் அளிக்கின்றன. இதைக் குறிப்பிட இறைவன் ஸீனத் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.
அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 18:7
பூமியின் மேலுள்ள புற்பூண்டுகளை பூமிக்கு ஸீனத் (அலங்காரம்) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
திருக்குர்ஆன் 7:31
தொழுமிடத்தில் அலங்காரம் செய்து கொள்ளுங்கள் என்பது உடல் அழகைக் குறிக்காது. அவ்வாறு குறித்தால் உடல் அழகு இல்லாதவர்கள் பள்ளிக்கு வருவது குற்றமாகி விடும். அணிகின்ற ஆடை நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது.
24:31 வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸீனத் என்ற சொல்லின் பொருளை விளக்குவதற்காகவே மேற்கண்ட வசனங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம்.
அலங்காரம் என்பதில் உடல் உறுப்புக்கள் அடங்காது என்றால் முகம், கைகள் தவிர’ என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.
பெண்கள் ஆபரணங்கள் அணிந்த நிலையில், லிப்ஸ்டிக் போட்டுக் கொண்ட நிலையில், மேக்கப் செய்து கொண்ட நிலையில் அன்னிய ஆண்களுக்கு முன்னால் காட்சி தரலாகாது. மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்கள் முன்னிலையில் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் அலங்காரம் செய்யாமல் இயற்கையான தோற்றத்தில் தான் இருக்க வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இவ்வசனத்தில் முகம், கைகளை மறைக்க வேண்டும் என்றும் கூறப்படவில்லை. மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்படவில்லை. உடல் அங்கங்கள் பற்றி இவ்வசனம் பேசவில்லை.
அலங்காரத்தில் வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்பதில் வெளியே தெரிபவை என்பது எதைக் குறிக்கின்றது?
நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி அலங்காரம் என்பது நகைகள், முகப் பவுடர், லிப்ஸ்டிக் ஆகியவற்றுடன் ஆடையையும் குறிக்கும். உடலை மறைப்பதற்காக அணியும் ஆடைகள் கூட ஒருவருக்கு அலங்காரம் தான். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று பொதுப்படையாகக் கூறினால் ஆடை அணியாமல் இருக்க வேண்டும் என்ற கருத்து வந்து விடும்.
மற்ற அலங்காரத்தை மறைக்கலாம், அல்லது தவிர்க்கலாம். ஆனால் ஆடை எனும் அலங்காரத்தை மறைக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. மறைப்பதற்காக ஆடையின் மேல் மற்றோர் ஆடையைப் போர்த்தினால் போர்த்தப்பட்ட ஆடையும் அலங்காரத்தில் அடங்கி விடும்.
என்ன செய்தாலும் வெளியே தெரிந்தே தீர வேண்டியதாக ஆடை எனும் அலங்காரம் அமைந்துள்ளது. எனவே வெளியே தெரிந்தே தீர வேண்டிய ஆடை என்ற அலங்காரம் தவிர மற்ற எந்த அலங்காரத்தையும் அன்னியர் முன் காட்ட வேண்டாம் என்று தெளிவுபடுத்தவே, ‘வெளியே தெரிபவை தவிர’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தை நபித்தோழர்களில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர். மற்றவர்கள் ஸீனத் என்பதற்கு அலங்காரம் என்ற பொருளை ஏற்றுக் கொண்டாலும் சுற்றி வளைத்து வியாக்கியானம் கொடுத்து முகம், கைகளை மறைக்கத் தேவையில்லை என்ற கருத்தை இவ்வசனம் கூறுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
ஸீனத் என்ற சொல்லின் நேரடி அர்த்தத்தின் படியும், திருக்குர்ஆனில் பிற இடங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள படியும் நாம் கூறிய விளக்கம் தான் சரியானதாகும்.
பெண்கள் முகத்தையும், முன் கைகளையும் மறைப்பது அவசியமா? இல்லையா? என்றால் அதற்கு வேறு ஆதாரங்களைத் தான் எடுத்துக் காட்ட வேண்டும். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டக் கூடாது.
பெண்கள் தமது முகத்தையும், முன் கைகளையும் அன்னிய ஆண்கள் முன் மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார். அப்போது ஹஸ்அம் என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கலானார். அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள். அப்போது அந்தப் பெண், ‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார். அவரால் வாகனத்தில் அமர முடியாது. இந்த நிலையில் அல்லாஹ் அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர் மீது கடமையாகி விட்டது. எனவே அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1513, 1855
இதே நிகழ்ச்சி புகாரியில் 6228வது ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில்,
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَضْلَ بْنَ عَبَّاسٍ يَوْمَ النَّحْرِ خَلْفَهُ عَلَى عَجُزِ رَاحِلَتِهِ وَكَانَ الْفَضْلُ رَجُلًا وَضِيئًا فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنَّاسِ يُفْتِيهِمْ وَأَقْبَلَتْ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ وَضِيئَةٌ تَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَفِقَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَأَعْجَبَهُ حُسْنُهَا فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا فَأَخْلَفَ بِيَدِهِ فَأَخَذَ بِذَقَنِ الْفَضْلِ فَعَدَلَ وَجْهَهُ عَنْ النَّظَرِ إِلَيْهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ نَعَمْ
‘அப்பெண் அழகு நிறைந்தவராக இருந்தார்’ என்றும், ‘அவரது அழகு ஃபழ்ல் அவர்களைக் கவர்ந்தது’ என்றும் கூறப்பட்டுள்ளது.
திர்மிதீ 811வது ஹதீஸில்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ عَنْ زَيْدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ فَقَالَ هَذِهِ عَرَفَةُ وَهَذَا هُوَ الْمَوْقِفُ وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ ثُمَّ أَفَاضَ حِينَ غَرَبَتْ الشَّمْسُ وَأَرْدَفَ أُسَامَةَ بْنَ زَيْدٍ وَجَعَلَ يُشِيرُ بِيَدِهِ عَلَى هِينَتِهِ وَالنَّاسُ يَضْرِبُونَ يَمِينًا وَشِمَالًا يَلْتَفِتُ إِلَيْهِمْ وَيَقُولُ يَا أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ السَّكِينَةَ ثُمَّ أَتَى جَمْعًا فَصَلَّى بِهِمْ الصَّلَاتَيْنِ جَمِيعًا فَلَمَّا أَصْبَحَ أَتَى قُزَحَ فَوَقَفَ عَلَيْهِ وَقَالَ هَذَا قُزَحُ وَهُوَ الْمَوْقِفُ وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ ثُمَّ أَفَاضَ حَتَّى انْتَهَى إِلَى وَادِي مُحَسِّرٍ فَقَرَعَ نَاقَتَهُ فَخَبَّتْ حَتَّى جَاوَزَ الْوَادِيَ فَوَقَفَ وَأَرْدَفَ الْفَضْلَ ثُمَّ أَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا ثُمَّ أَتَى الْمَنْحَرَ فَقَالَ هَذَا الْمَنْحَرُ وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ وَاسْتَفْتَتْهُ جَارِيَةٌ شَابَّةٌ مِنْ خَثْعَمٍ فَقَالَتْ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ قَدْ أَدْرَكَتْهُ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ أَفَيُجْزِئُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ حُجِّي عَنْ أَبِيكِ قَالَ وَلَوَى عُنُقَ الْفَضْلِ فَقَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ لِمَ لَوَيْتَ عُنُقَ ابْنِ عَمِّكَ قَالَ رَأَيْتُ شَابًّا وَشَابَّةً فَلَمْ آمَنْ الشَّيْطَانَ عَلَيْهِمَا ثُمَّ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَفَضْتُ قَبْلَ أَنْ أَحْلِقَ قَالَ احْلِقْ أَوْ قَصِّرْ وَلَا حَرَجَ قَالَ وَجَاءَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا حَرَجَ قَالَ ثُمَّ أَتَى الْبَيْتَ فَطَافَ بِهِ ثُمَّ أَتَى زَمْزَمَ فَقَالَ يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ لَوْلَا أَنْ يَغْلِبَكُمْ النَّاسُ عَنْهُ لَنَزَعْتُ قَالَ وَفِي الْبَاب عَنْ جَابِرٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَلِيٍّ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشٍ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ الثَّوْرِيِّ مِثْلَ هَذَا وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ رَأَوْا أَنْ يُجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ بِعَرَفَةَ فِي وَقْتِ الظُّهْرِ و قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا صَلَّى الرَّجُلُ فِي رَحْلِهِ وَلَمْ يَشْهَدْ الصَّلَاةَ مَعَ الْإِمَامِ إِنْ شَاءَ جَمَعَ هُوَ بَيْنَ الصَّلَاتَيْنِ مِثْلَ مَا صَنَعَ الْإِمَامُ قَالَ وَزَيْدُ بْنُ عَلِيٍّ هُوَ ابْنُ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلَام
‘அப்பெண் இளம் பருவத்துப் பெண்ணாக இருந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.
பெண்கள் ஆடை குறித்து நாம் சான்றுகளை எடுத்துக் காட்டும் போது, ஹிஜாப் குறித்த சட்டங்கள் அருளப்படுவதற்கு முன் இது நடந்திருக்கலாம்’ என்று எதிர்க் கருத்துடையவர்கள் கூறுவது வழக்கம். இந்தச் சம்பவத்தில் அந்த வாதம் எடுபடாது. ஏனெனில் ஹிஜாப் பற்றிய கட்டளை நடைமுறைக்கு வந்த பின், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசிக் காலத்தில் இது நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ‘அழகிய தோற்றம் உடைய இளம் பெண் நபிகள் நாயகத்தின் முன்னே வந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது. ஒருவரைப் பற்றி அழகிய பெண் என்றும், இளம் பெண் என்றும் கூறுவதாக இருந்தால் முகம் தெரிந்தால் தான் கூற முடியும்.
மேலும் ‘ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்த்தார். அப்பெண்ணின் அழகில் அவர் ஈர்க்கப்பட்டார்’ என்றும் கூறப்பட்டுள்ளது. முகத்தை அப்பெண் மறைத்திருந்தால் ஃபழ்ல் திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். அப்பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது என்றும் கூற முடியாது.
மேலும் அப்பெண் முஸ்லிம் பெண் என்பதும் இதில் தெரிகின்றது.
பெண்கள் தமது முகத்தை மறைப்பது அவசியம் என்றால் இப்பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருப்பார்கள். ‘நீ எப்படி முகத்தைக் காட்டலாம்?’ என்று கேட்டிருப்பார்கள்.
மேற்கண்ட ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் எவரும், பெண்கள் தமது முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வரும் படி தெளிவாக அமைந்துள்ளன.
புகாரி 6228 ஹதீஸின் விரிவுரையில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், ‘பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கு இது ஆதாரமாகும்’ எனக் கூறுகின்றார்கள். இதை வலுவூட்டுவதற்காக, ‘தொழுகையின் போதே முகத்தை மறைப்பது அவசியம் இல்லை எனும் போது மற்ற நேரங்களில் மறைக்கத் தேவையில்லை’ என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள்.
و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ ثُمَّ قَامَ مُتَوَكِّئًا عَلَى بِلَالٍ فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ سِطَةِ النِّسَاءِ سَفْعَاءُ الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ بِلَالٍ مِنْ أَقْرِطَتِهِنَّ وَخَوَاتِمِهِنَّ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அதைத் தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். பாங்கும், இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையைத் துவக்கினார்கள். பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றிக் கட்டளையிட்டார்கள். இறை வனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று ஆர்வமூட்டினார்கள். மக்களுக்குத் தேவையான அறிவுரை கூறினார்கள்.
பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூறினார்கள். ‘தர்மம் செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது பெண்கள் பகுதியிலிருந்து, இரண்டு கன்னமும் கறுப்பாக இருந்த ஒரு பெண் எழுந்து, ‘ஏன்?’ என்று கேள்வி கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதிகமாகக் குறை சொல்கிறீர்கள்; கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1467
நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் எழுந்து கேள்வி கேட்டார் என்பதுடன் அப்பெண்ணின் இரு கன்னங்களும் கறுப்பாக இருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜாபிர் என்ற ஆண் நபித்தோழர் அப்பெண்ணின் கன்னம் கறுப்பாக இருந்தது என்று கூறுவதிலிருந்து அப்பெண் முகத்தை மறைக்காமல் இருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம், பிலால், ஜாபிர் பின் அப்துல்லாஹ் ஆகிய ஆண்கள் முன்னிலையில் அப்பெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதை இச்சம்பவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.