கேள்வி :
பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா?
மசூது, கடையநல்லூர்
பதில் :
பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது மட்டுமே பாலியல் வன்முறையைக் குறைக்க உதவாது.
கடும் தண்டனைகள் இருந்தாலும், மனிதனுக்கு காம வெறியை ஏற்படுத்தி, அறிவுக் கண்ணை மறைக்கும் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டால் மட்டுமே இந்தச் சட்டங்கள் பயன் தரும்.
1.ஆபாசமான சினிமாக்கள், ஆபாசமான நாடகங்கள், சுவரொட்டிகள் போன்ற அனைத்தும் ஒரு சமுதாயத்தில் பரவலாக இருந்தால் நல்ல மனிதன் கூட தடுமாறி மிருகமாக மாறிவிடுவான். பெண்களைப் போகப் பொருளாகக் காட்டும் அனைத்து வாசல்களும் அடைக்கப்படாமல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வதால், குற்றங்கள் குறையாது.
2.பெண்கள் அணியும் மானம்கெட்ட ஆடைகள் ஆண்களைப் பாலுணர்வுக்கு அழைப்பு விடுக்கும்போது, ஆண்கள் இதனால் பாதிக்கப்பட்டு பாலியல் வன்முறையில் இறங்குகிறார்கள். இதற்கும் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
3.பெரும்பாலான பாலியல் வன்முறைகள் போதை மயக்கத்தில் தான் நடக்கின்றன. மது மற்றும் எல்லா போதைப் பொருட்களும் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். பாலியல் வன்முறைக்கு ஆண்களைத் தூண்டும் எல்லா வாசல்களையும் திறந்து போட்டுவிட்டு, பாலியல் வன்முறைக்கு அரசே காரணமாக இருந்துவிட்டு ஆண்மை நீக்கம் செய்வது ஏற்க முடியாதது.
மேலும் தண்டனை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதற்கு முன் அதன் பயன் கிடைக்க இன்னும் சில ஏற்பாடுகள் அவசியமாகும்.
ஒரு குற்றம் நடந்தால், அதை விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை அளிக்க அதிகபட்சம் இரண்டு மாதங்களே போதுமானது. குற்றம் நடந்த சில நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படாவிட்டால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைந்துவிடும்.
குற்றம் நடக்கும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதை நேரில் கண்ட சாட்சிகளுக்கும் இயல்பாகவே கோபம் ஏற்படும். இந்தக் கோபம் அவர்களை சாட்சி சொல்லத் தூண்டும். அவர்கள் சரியாக சாட்சி சொன்னால் தான் குற்றவாளி தண்டிக்கப்படுவான்.
நமது நாட்டில் பத்து முதல் ஐம்பது ஆண்டுகள் கூட ஒரு வழக்குக்கு தேவைப்படுகிறது.
குற்றம் நடந்து இரண்டு வருடம் கழித்து விசாரணையை ஆரம்பித்தால் சாட்சிகளே பல விஷயங்களை மறந்து விடுவார்கள். தீமைக்கு எதிரான அவர்களின் கோபமும் போய்விடும். இன்னும் எத்தனை வருடம் நம்மை இழுத்தடிப்பார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டால் நான் அந்தக் குற்றச் செயல் நடக்கும் போது பார்க்கவில்லை என்று சாட்சிகள் கூறும் நிலை ஏற்படும். இதனால் குற்றவாளி தப்பித்துக் கொள்வான்.
வழக்கு தொடுத்த காவல்துறை அதிகாரிகள் பத்து ஆண்டுகளுக்குள் பல ஊர்களுக்கும் மாற்றப்படுவார்கள். இப்படி அடுத்தடுத்து வேறு வேறு அதிகாரிகள் மூலம் அந்த வழக்கு ஃபாலோ பண்ணப்படும்.
அரசு வழக்கறிஞர்களும் மாறிக் கொண்டே இருப்பார்கள். இதனால் இந்த வழக்கு பற்றிய முழு விபரம் இல்லாமல்தான் அரசாங்கத்தின் சார்பில் வழக்கு நடத்தப்படும். இதன் காரணமாகவும் குற்றம் சாட்டப்பட்டவன் தப்பித்துக் கொள்வான்.
பத்து அல்லது இருபது ஆண்டுகளில் அந்த வழக்கு குறைந்தது ஐந்து நீதிபதிகளுக்கு மாறிவிடும். இதனால் நீதிபதிகளுக்கே வழக்கின் தன்மை முழுமையாக பிடிபடாது. குற்றவாளி தப்பிக்க இதுவும் காரணமாகி விடுகிறது.
சுப்ரீம் கோர்ட் வரை மேலும் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும் போது குற்றவாளியே செத்துப் போய் விடுவான். அல்லது பாதிக்கப்பட்டவன் செத்து விடுவான்.
சுப்ரீம் கோர்ட் தண்டனையை உறுதி செய்து விட்டாலும், நாட்டு மக்களையும், சட்டத்தையும் காலில் போட்டு மிதிக்கும் வகையில் ஜனாதிபதி மன்னித்து விடுவார்.
இத்தகைய கோளாறுகள் உள்ள நாட்டில் எவ்வளவு கடுமையான தண்டனைகள் வந்தாலும் அந்தத் தண்டனைகள் குற்றவாளிக்குக் கிடைக்கப் போவதில்லை.
நீதி மன்றங்களை அதிகரித்தல், நீதிபதிகளை அதிகரித்தல் மற்றும் அர்த்தமற்ற வாய்தாக்களை ஒழித்தல் ஆகிவற்றின் மூலம் தாமதமற்ற நீதி கிடைக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சதவிகிதம் பன்மடங்கு அதிகரிக்கும்.
இவற்றையெல்லாம் செய்துவிட்டு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அதை வரவேற்கலாம். (ஆனால் இஸ்லாம் கூறும் சட்டம் மரண தண்டனை தான்.)
இருவரும் உடன்பட்டு விபச்சாரம் செய்தால் ஆணை மட்டும் தண்டிக்காமல் இருவருக்கும் தண்டனை அளிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.