ஒத்திக்கு விடுதல் கூடுமா?

கேள்வி :

ஒத்திக்கு விடுதல் கூடுமா?

பதில் :

சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். வீட்டை ஒப்புக் கொண்டவர் பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் வாடகை ஏதும் கொடுக்காமல் வீட்டில் குடியிருப்பார். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னர் முன்பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒப்படைப்பார்.

இது ஒத்தி எனவும், சில பகுதிகளில் போகியம் எனவும் கூறப்படுகின்றது.

கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொள்வது குற்றமில்லை. ஆனால் அதற்குரிய வாடகையை வீட்டின் உரிமையாளருக்குக் கொடுக்காமல் கொடுத்த பணத்துக்காக ஆதாயம் அடைவது வட்டியாகும் என்பதால் இதை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கடனாக நாம் கொடுக்கும் பணத்துக்கு உத்தரவாதம் தேவை என்றால் வீட்டின் பத்திரத்தை அடைமானமாகப் பெற்று எழுதிக் கொண்டு உரிமையாளரை வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கலாம். அல்லது வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டுக் கொள்ள உரிமையாளரை அனுமதிக்கலாம். ஒரு முஸ்லிம் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். ஒருவனுக்கு ஏற்பட்ட பண நெருக்கடியைப் பயன்படுத்தி வட்டியை வேறு பெயரில் வாங்கக் கூடாது.