மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன?

கேள்வி :

தப்லீக் இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். தப்லீகைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் கேட்காமல் மக்கள் தாமாக முன்வந்து தருவதை வைத்து தவ்ஹீத் பணி செய்யக்கூடாதா?

தமீம் அன்சாரி

பதில்:

தப்லீக் ஜமாஅத்தினர் மார்க்கப் பணிக்காக பிறரிடம் உதவிகளைக் கேட்பதில்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இது தவறான கருத்தாகும்.

ஐந்து ரூபாய், பத்து ரூபாய் அளவுக்கு உதவ முடிந்த மக்களிடம் தபலீக் இயக்கத்தினர் கேட்க மாட்டார்கள். ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுப்பவர்கள் தப்லீக் அபிமானிகளாக உள்ளதால் அவர்களைத் தேடிச் சென்று பண உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

இது தவிர எத்தனையோ தப்லீக் மத்ரஸாக்கள் உள்ளன. பலருக்குச் சம்பளம் கொடுத்து மத்ரஸாவிற்காக நிதி திரட்டுபவரை எல்லா ஊர்களுக்கும் அனுப்பி வைக்கின்றார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் ஒரு வீடு விடாமல் ஏறிச் சென்று ஏழைகளுக்குச் சேர வேண்டிய குர்பானித் தோல்களை மத்ரஸா பணிக்காக இவர்கள் வாங்கிச் சென்று விடுகிறார்கள்.

எனவே தப்லீக் ஜமாஅத்தினர் மார்க்கப் பணிக்காக பிறரிடம் உதவி கேட்டுச் செல்வதில்லை என்பது தவறான கருத்தாகும்.

மேலும் இவர்கள் எடுத்துக் கொண்ட திட்டங்கள் மிகக் குறைவானவை.

ஆறு திட்டங்கள் தவிர வேறு எதையும் இவர்கள் பேச மாட்டார்கள். அதையும் பள்ளிவாசலில் மட்டும் தான் செய்வார்கள். இதற்குப் பணம் தேவைப்படாது.

பள்ளிவாசலுக்கு வராத மக்களைத் தேடிச்சென்று கப்ரு வணக்கம் தாண்டவாமாடும் பகுதிகளுக்குப் போய் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். அப்படி செய்யும் போது தான் செலவு ஏற்படும்.

வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடினாலும் அதை இவர்கள் பேசுவதில்லை. ஆறு திட்டங்களில் இவை வராது. தப்பித்தவறி ஓரிருவர் பேசினாலும் அவர் பள்ளிவாசல்களில் மட்டும் தான் பேசுவார். பள்ளிவாசல் தொடர்பு இல்லாத மக்களுக்கும், பெண்களுக்கும் இதைப் பிரச்சாரம் செய்வதாக இருந்தால் பொதுக் கூட்டம் நட்த்த வேண்டும். அது குறித்த விளம்பரம்,  ஒலி ஒளி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதற்குப் பணம் செலவாகும்.

முஸ்லிமல்லாதவர்களைத் தேடிச் சென்று இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் பிரசுரங்கள், புத்தகங்கள், குறுந்தகடுகள், திருக்குர்ஆன் தமிழாக்கம் ஆகியவற்றை இவர்கள் கொடுப்பதில்லை. அவர்களைத் தேடிச் சென்று சந்திப்பதில்லை. இஸ்லாத்தை ஏற்பவருக்கு சுன்னத், மார்க்க போதனை போன்றவற்றைச் செய்ய எந்த ஏற்பாடும் அவர்களிடம் இல்லை.

சிறுவர்கள், அனாதைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டு நிற்கிறார்களே அவர்களின் துயர் துடைக்க வேண்டுமே என்ற கவலை கடுகளவும் தப்லீக்கில் இல்லை.

வெள்ளம் புயல் சுனாமி எது தாக்கினாலும் அதற்காக ஓடோடிச் சென்று உதவ மாட்டார்கள்.

ஆறு தலைப்பை மட்டும் பள்ளிவாசலில் மட்டும் பேசுவோருக்கு எந்தச் செலவும் இல்லை.

தவ்ஹீத் ஜமாஅத் நிலை இதுவல்ல.

மேலும் இஜ்திமா என்ற பெயரில் இவர்கள் நடத்தும் மாநாடுகளுக்குப் பெருமளவு பொருட்செலவு செய்கிறார்கள். இதற்கான பணம் வானத்தில் இருந்து கொட்டுவதில்லை. தனவந்தர்களிடம் வாங்கித்தான் இப்பணியைச் செய்கிறார்கள்.

இவர்கள் மார்க்கப் பணியை வீரியமாகவும், விவேகமாகவும் செய்ய மாட்டார்கள். எந்த வழியில் சென்றால் பிரச்சனையும், சிரமமும் இருக்காதோ அந்த வழியில் மட்டுமே அவர்கள் அறிந்து வைத்துள்ள மார்க்கத்தைப் போதிப்பார்கள்.

ஒரு பொதுக் கூட்டம் நடத்த ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும் என்றால் அதை தொலைக் காட்சியில் ஒளிபரப்பினால் இரண்டு லட்சம் ஆகலாம். ஆனால் பொதுக் கூட்டத்தில் எத்தனை மக்களுக்குப் பிரச்சாரம் சென்றடைந்ததோ அது போல் பல்லாயிரம் மக்களைச் சென்றடைவதைக் கணக்கிடும் போது இந்தச் செலவு அவசியமான செலவாகி விடுகிறது. இதற்கு மக்களிடம் வாங்கித்தான் செய்ய வேண்டும்.

சத்தியக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருப்பார்கள். ஓரிரு செல்வந்தர்களும் இவர்களுடன் இருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை இது போன்றதாகும்.

இந்த ஜமாஅத்துக்குச் சில செல்வந்தர்கள் உதவி செய்தாலும் அவர்களின் உதவி மட்டும் ஜமாஅத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. நடுத்தரமான அல்லது ஏழை மக்கள் ஒவ்வொருவரும் இந்த ஜமாஅத்தை நம்பி தம்மால் இயன்ற உதவியை அளிக்கின்றார்கள். இவர்களின் உதவியும் ஜமாஅத்திற்குத் தேவைப்படுகின்றது.

இந்த மார்க்கத்தை உலகெங்கும் பரப்புவதற்கு இலகுவான வழி ஏதாவது இருந்தால் அதற்காகப் பணம் செலவழித்தாலும் பரவாயில்லை. அநேக மக்களுக்கு சத்தியம் சென்றடைய வேண்டும் என்று மட்டுமே ஜமாஅத் நினைக்கின்றது. இதற்காக பொதுமக்களிடம் சிறு சிறு தொகையாக பணம் திரட்டும் கடினமான முயற்சியில் ஜமாஅத் இறங்குகின்றது.

ஒருவர் தவ்ஹீது ஜமாஅத் செய்யும் பணிகளையும், தப்லீக் ஜமாஅத் செய்யும் பணிகளையும் எடைபோட்டுப் பார்த்தால் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வார்.

இதை அல்லஹ்வும் அனுமதிக்கிறான்.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2) المائدة : 25

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 5 : 2

மக்களிடம் மார்க்கப் பணிக்காகத் தாருங்கள் என்று கூறி பணம் வசூலித்து அந்த வகைக்காகச் செலவழிக்காமல் சுருட்டிக்கொள்வது தான் பாவம். மக்களிடம் உதவி பெற்று மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் செலவிடுவது நன்மையான செயலாகும்.

மருத்துவ உதவி, ஜகாத் உதவி, புயல் நிவாரண உதவி என்று தப்லீக் ஜமாஅத்தை யாரும் அணுக முடியுமா? அணுகினால் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் எனப் பொருத்தமற்ற இடத்தில் அல்லாஹ்வின் பெயரை துஷ்பிரயோகம் செய்து விடுவார்கள்.

இதைப் புரிந்து கொண்டால் உங்கள் கேள்வி தவறானது என்பதை நீங்களே விளங்கிக் கொள்வீர்கள்.