கேள்வி :
மொத்த வருமானத்தில் செலவு போக மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா?
முஹம்மது சைபுல்லா.
பதில் :
முஸ்லிம்கள் தங்கள் செல்வங்களை மார்க்கப்பணி போன்ற நல்வழியில் செலவிட வேண்டும் என இறைவன் ஆர்வமூட்டுகிறான். அதற்கு மறுமையில் மிகப் பெரிய பரிசுகளை அளிப்பதாகவும் வாக்களிக்கின்றான்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2 :261
நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள்1 வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள்.
திருக்குா்ஆன் 2 :254
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
திருக்குா்ஆன் 2: 245
ஆனால் மார்க்கப் பணிக்காக தமது முழு வருமானத்தையோ, அல்லது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கையோ கண்டிப்பாகச் செலவிட வேண்டும் என்று இறைவனோ, இறைத்தூதரோ கட்டளையிடவில்லை. நமது குடும்பத்தாரைப் பிறரிடத்தில் கையேந்தும் படி விட்டு விட்டு நமது சொத்துக்கள் முழுவதையும் தர்ம்ம் செய்வதை நமது மார்க்கம் கண்டிக்கவும் செய்கிறது.
நீங்கள் குறிப்பிடுவது வஸிய்யத் தொடர்பாக உள்ள சட்டமாகும்.
ஒருவர் தன்னுடைய மரணத்திற்குப் பிறகு தனது சொத்தை நல்வழியில் செலவிட விரும்புகிறார் எனில் அவர் அதிகபட்சமாக எவ்வளவு தொகையை அளிக்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு எல்லையைக் குறிப்பிடுகிறார்கள்.
அதிகபட்சமாக தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை நல்வழியில் செலவிடுமாறு வஸிய்யத் செய்யலாம். அதை விட அதிகமாக செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
صحيح البخاري
5668 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي، زَمَنَ حَجَّةِ الوَدَاعِ، فَقُلْتُ: بَلَغَ بِي مَا تَرَى، وَأَنَا ذُو مَالٍ، وَلاَ يَرِثُنِي إِلَّا ابْنَةٌ لِي، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: «لاَ» قُلْتُ: بِالشَّطْرِ؟ قَالَ: «لاَ» قُلْتُ: الثُّلُثُ؟ قَالَ: «الثُّلُثُ كَثِيرٌ، أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَلَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ»
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
விடைபெறும் ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், (இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக மாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்து விடட்டுமா? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று கூறினார்கள். நான் (எனது செல்வத்தில்) பாதியை(யாவது தானம் செய்யட்டுமா) என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான் மூன்றிலொரு பங்கை(யாவது தானம் செய்யட்டுமா) என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிடச் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 5668, 1296, 2742, 2744, 3936, 4409, 5354, 5659, 6373, 6733
ஒருவர் உயிருடன் வாழும்போது தனது சொத்தில் அல்லது தனது வருமானத்தில் அதிகபட்சம் மூன்றில் ஒருபங்கு செலவிடலாம் என்பதை இந்தச் சம்பவம் கூறவில்லை. மரணத்துக்குப் பிறகு ஒருவரது சொத்துக்கள் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது பற்றியே இது பேசுகிறது.
ஒருவரது மரணத்துக்குப் பிறகு அவரது வாரிசுகள் தான் அதிக உரிமை படைத்தவர்கள் என்பதால் அவர்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமாகாமல் வசிய்யத் எனும் மரண சாசனம் செய்யலாம்.
உயிருடன் வாழும் போதே தர்மம் செய்வதற்கு இரண்டரை சதவிகிதம் என்ற அளவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஜகாத் எனப்படுகிறது.
இது அல்லாமல் நாமாக விரும்பி நமக்கோ, நமது குடும்பத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் நல்லறங்களில் செலவிடுவது சதகா எனப்படுகிறது. இதற்கு அளவு நிர்ணயம் ஏதும் இல்லை.