நகப்பாலிஷ் கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா?

கேள்வி :

நகப்பாலிஷ் கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா?

சலாஹுத்தீன்

பதில் :

நகப்பாலிஷுக்கும், ஹேர் டைக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் மாறுபட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன.

தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் உடல் நனைய வேண்டும்.

நைல் பாலிஸ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே உள்ளது. அதாவது காய்ந்து போன பெயிண்ட் போல் ஆவதால் நகத்தில் தண்ணீர் படாது.

எனவே நைல் பாலிஸ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிவிட வேண்டும்.

தண்ணீர் ஊடுருவுவதைத் தடுக்காத முறையில் (மருதாணி சாயம் போல்) நைல் பாலிஸ் கண்டுபிடிக்கப்படுமானால் எல்லா நேரங்களிலும் அதை இடலாம்.

நைல் பாலிஸ் என்பது பொதுவாகவே தடுக்கப்பட்ட ஒன்று அல்ல. இன்றைய சந்தையில் கிடைக்கும் தன்மையைப் பொருத்தே இந்த நிபந்தனைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டை அடிப்பதைப் பொறுத்தவரை அது நைல் பாலிஸைப் போன்ற திரவமல்ல. இது முடிக்கு நிறம் கொடுக்குமே தவிர தண்ணீர் ஊடுறுவதைத் தடுக்காது. எனவே இதைப் பூசுவதால் உளூவிற்கும் கடமையான குளிப்புக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.

ஒரு கைக்குட்டையில் சிறிது நகப்பாலிஷை ஊற்றி அது காய்ந்த பின் தண்ணீரை வடிகட்டினால் தண்ணீரை வெளியேற்றாது. ஆனால் முடிகளுக்கான சாயத்தை ஒரு கைக்குட்டையில் ஊற்றி அது காய்ந்த பின் தண்ணீரை வடிகட்டினால் தண்ணீர் தடையில்லாமல் வெளியேறும்.