நபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா?

கேள்வி :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன? இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே? இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே?

நிஸாருத்தீன்

பதில் :

திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து தங்கள் ஒரிஜினாலிட்டியை தாங்களே அழித்து விட்டனர்.

ஆனால் 1400 ஆண்டுகளாக உருவப்படம் இல்லாமல், சிலை இல்லாமல், நாடகம் சினிமா இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகள் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்து கொண்டு தான் உள்ளது.

சமரசம் செய்து கொள்ளாத தனது கொள்கை மூலம் இம்மார்க்கம் அதன் தூய வடிவில் சென்று கொண்டு தான் இருக்கிறது.

திரைப்படங்கள் இல்லாமல் தான் இந்த மார்க்கம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது.

மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றவுடன் சிவாஜி கனேசனின் தோற்றம் நினைவுக்கு வருவது போல் நபிகள் நாயகத்தின் நிலை ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது.

முகம் காட்டாமல் த மெஸஞ்சர் என்ற படம் எடுக்கப்பட்டது. அதில் முக்கால் வாசி பொய்யும் கால்வாசி உண்மையும் இருந்தாலும் அதற்கு எதிராக யாரும் வாய் திறக்காமல் அதையும் பார்த்து ரசித்தனர். நபிகள் நாயகத்தின் மீது இட்டுக் கட்டுகிறார்களே என்ற கோபம் யாருக்கும் வரவில்லை.

மேலும் நபிகள் நாயகத்துக்கு மட்டும் உருவத்தைக் காட்டாவிட்டாலும் ஹம்ஸா என்பவரை அதில் கதாநாயகனாகக் காட்டினார்கள். அத்தனையும் பொய் என்பது தனி விஷயம். இதனால் ஏற்பட்ட விளைவு என்ன? ஹம்ஸா என்றவுடன் அதில் நடித்த நடிகன் தான் இன்றும் மனதில் நிழலாடுகிறான். ஹம்ஸாவின் ஒரிஜினாலிடி இல்லாமல் போய் விட்டது.

மேலும் சினிமா என்றாலே அது வரலாறாக இருந்தால் கூட ஐந்து விழுக்காடு உண்மையுடன் 95 விழுக்காடு பொய் கலக்க வேண்டும். இல்லாவிட்டால் அது எடுபடாது. உள்ளது உள்ளபடி எடுத்தாலும் சினிமாவுக்காக கூட்டிக் குறைத்து எடுத்திருப்பார்கள் என்று தான் முஸ்லிமல்லாத மக்கள் நினைப்பார்கள். இதனால் நபிகள் நாயகத்தின் மதிப்புக்குப் பங்கம் தான் ஏற்படும்.

பேச்சாக, எழுத்தாக சொல்வதை மட்டும் மனித உள்ளம் சிந்தித்து உள் வாங்கும். இசையாக, நாடகமாக, கதையாகச் சொல்வதை காதும் கண்ணும் தான் ரசிக்குமே தவிர உள்ளத்தை அது அறவே ஈர்க்காது. இது தான் மனோதத்துவ முடிவாக உள்ளது.

நான் ஒரு குடிகாரன் என்று ஒருவன் ஒப்புதல் வாக்கு மூலம் தந்தால் அவனை நாம் காரித் துப்புகிறோம். ஆனால் கோப்பயிலே என் குடியிருப்பு என்று அதையே அவன் பாடலில் சொன்னால் அதை நாமே முனுமுனுக்கிறோம்.

நாம் மதிக்கும் மனிதன் திருடன் என்று தெரிய வந்தால் அவனை வெறுக்கிறோம். ஆனால் திரையில் திருடனாக கதாநாயகன் வந்தால் அவனுக்கு ரசிகர் மன்றம் வைக்கிறோம்.

குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று சாதாரண நடையில் நாம் சொன்னால் நம்மை அடிக்க வரும் மார்க்க அறிவற்றவர்கள் ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன கலக்கம் என்ற பாடலை முனுமுனுக்கிறார்கள்.

இவை உள்ளங்களில் இறங்குவதில்லை என்பதை இதில் இருந்து அறியலாம். எனவே இது போன்ற வழிமுறைகளில் சொல்லப்படும் எந்தக் கருத்தாக இருந்தாலும் அது கண்ணையும், காதையும் தான் ஈர்க்கும். நிச்சயம் உள்ளத்தை ஈர்க்காது.