கேள்வி :
முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே?
சாஜிதா ஹுஸைன், சென்னை.
பதில்:
விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம்.
விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லா விட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான்.
இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியை விட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியைக் கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்துச் செத்ததாக உலகை நம்ப வைக்கிறான்.
விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.
இன்னும் சில கணவன்மார்கள் மனைவியைக் கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர். இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்து கொண்டு காலமெல்லாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்படுகிறது. அவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைப்படுகிறது. எளிதாக விவாகரத்துச் செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது.
வேறு சில கயவர்கள் விவாகரத்துப் பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களைச் சுமக்க வேண்டும்? என்று நினைத்து பெயரளவிற்கு அவளை மனைவியாக வைத்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதைப் படுத்துகின்றனர்.
இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்தக் கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கணவனைக் கொலை செய்கிறாள். உணவில் விஷம் கலந்தோ, அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனைத் தீர்த்துக் கட்டுகிறாள்.
அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறுவாழ்க்கை கிடைக்காமல் செய்து விடுகிறாள். அல்லது கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே.
அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
صحيح البخاري
5273 – حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً»
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித்தோழரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ‘தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுத்து விடு’ என்று கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5273, 5275, 5277
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவதற்கு நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார்.
அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.
இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?
திருக்குர்ஆன் 4:21
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.
திருக்குர்ஆன் 2:228
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாகின்றன.
இனி முத்தலாக் விஷயத்துக்கு வருவோம்.
ஆண்களுக்கு தலாக் கூறும் மூன்று வாய்ப்புகள் உள்ளன.
ஒரு முறை விவாகரத்து செய்து விட்டு பின்னர் சேர்ந்து வாழலாம். பின்னர் மீண்டும் விவாகரத்துச் செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம். மூன்றாம் முறை விவாகரத்து செய்தால் தான் மீண்டும் சேர முடியாது.
மூன்றாம் முறை விவாகரத்து செய்த பின் இன்னொருவனுக்கு அவள் வாழ்க்கைப்பட்டு அவனும் விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவன் அவளை மணக்க முடியும்.
அவசரப்பட்டு விவாகரத்து செய்தவர்கள் பின்னர் திருந்தி சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரே சமயத்தில் மூன்று தலாக் எனக் கூறினால் ஒரு தலாக் ஆகவே அது கருதப்படும் என்பது தான் சரியான கருத்தாகும்.
صحيح مسلم
3746 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ – وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ الطَّلاَقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَبِى بَكْرٍ وَسَنَتَيْنِ مِنْ خِلاَفَةِ عُمَرَ طَلاَقُ الثَّلاَثِ وَاحِدَةً فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ النَّاسَ قَدِ اسْتَعْجَلُوا فِى أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ أَنَاةٌ فَلَوْ أَمْضَيْنَاهُ عَلَيْهِمْ. فَأَمْضَاهُ عَلَيْهِمْ.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும், அபூபக்ர் (ரலி) ஆட்சிக்காலத்திலும், உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் முதலிரண்டு ஆண்டுகளிலும் மூன்று தலாக் என்பது ஒரு தலாக் ஆகவே கருதப்பட்டது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம்
எனவே, ஒரே சமயத்தில் முத்தலாக் கூறுவது என்பது இஸ்லாத்தில் இல்லை. முஸ்லிம்களில் சிலரது அறியாமை காரணமாக இது போன்ற கேள்விகளை நாம் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.