முஸ்லிம்கள் தீ மிதிக்க முடியுமா?

கேள்வி:

இஸ்லாம் உருவ வழிபாடு கூடாது என்று போதிக்கின்றது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், நாங்கள் மாரியம்மனின் அருளினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாமியை நினைத்து தீ மிதிக்கிறோம். அவ்வாறு உங்களுடைய இறைவனின் அருளினால் அந்த இறைவனை நினைத்துக் கொண்டே எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீங்கள் தீ மிதித்து வர முடியுமா? என்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியைப் பார்த்து வரும் ஒரு இந்து நண்பர் கேட்கின்றார்.

– ஜே. கோரி முஹம்மது, ஆடுதுறை.

பதில்: தீ மிதிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மனிதர்களின் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் மற்ற பகுதிகளை விட வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது.

விளக்கில் தீ எரியும் போது அதில் விரலை நீட்டித் தொட்டு தொட்டு வெளியே எடுக்கலாம். ஒன்றும் செய்யாது. வைத்துக் கொண்டே இருந்தால் தான் விரலைப் பொசுக்கும்.

ஒரு அடுப்பில் உள்ள தீக்கங்கை ஒரு கையால் எடுத்து மறு அடுப்பில் கிராமத்துப் பெண்கள் சர்வ சாதாரணமாகப் போடுவார்கள்.

உள்ளங்கைகளையும், உள்ளங்கால்களையும் நெருப்பில் தொடர்ந்து வைத்துக் கொண்டு இருந்தால் தான் பொசுக்குமே தவிர நெருப்பில் வைத்து வைத்து எடுத்தால் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும்.

இதன் காரணமாகத் தான் கடவுள் இல்லை எனக் கூறுவோரும் தீ மிதித்துக் காட்டுகின்றனர். முஸ்லிம்களில் அறிவீனர் சிலர் முஹர்ரம் பத்தாம் நாள் அன்று இது போன்ற தீ மிதித்தலை சில பகுதிகளில் செய்கின்றனர்.

எவராலும் செய்ய முடிகின்ற சாதாரணமான ஒரு காரியம் அறியாமை காரணமாக அசாதாரணமான காரியமாகக் கருதப்படுகின்றது.

மாரியம்மன் அருளால் தான் தீ மிதிக்கிறோம் என்று கூறுவதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தீயில் நடக்காமல் ஒரு நிமிடம் நின்று காட்டச் சொல்லுங்கள்!

அல்லது உள்ளங்காலை வைக்காமல் இருப்பிடத்தை தீக்கங்கில் வைத்து பத்து விநாடி உட்காரச் சொல்லுங்கள்! மாரியம்மன் அருள் தான் காரணம் என்றால் அதையும் செய்து காட்டத் தான் வேண்டும். இதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். நெருப்பில் வைத்து விட்டு உடனே எடுத்து விடும் நிகழ்ச்சி தான் தீமிதிப்பதில் உள்ள சூட்சுமம்.

நீங்கள் தீ மிதிக்கத் தயாரா? என்று அவர் அறை கூவல் விடுத்தால் அதையும் செய்து காட்ட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதன் பின்னர் அவர் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவரிடம் கேட்டு எழுதுங்கள்!

அல்லது நாம் கூறியவாறு தீயில் ஒரு நிமிடம் உட்கார்ந்து விட்டு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எழுந்து காட்டட்டும். நாம் நமது கருத்தை மாற்றிக் கொள்வோம். சரி தானே!