கேள்வி :
திருமணத்தின் போது கழுத்துப்பட்டி, Dress Code அணியும் வழக்கம் இலங்கை முஸ்லிம்களிடம் உள்ளது. இதற்காக பத்தாயிரம் முதல் பதினந்தாயிரம் வரை செலவு செய்கிறார்கள். சிலர் இந்த உடையை அதன் பின்னர் ஒரு தடவை கூட அணிவதில்லை. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?
பதில் :
பொதுவாக உடைகளில் பல வகைகள் உள்ளன. அன்றாடம் பயன்படுத்தும் உடைகள் உள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தும் உடைகள் உள்ளன. பிரமுகர்களைச் சந்திக்கும் போது மட்டும் பயன்படுத்தும் உடைகளும் உள்ளன. குறைவாகப் பயன்படுத்துவதன் காரணமாக அதை வீணானது என்று கூற முடியாது.
صحيح البخاري
948 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: أَخَذَ عُمَرُ جُبَّةً مِنْ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ، فَأَخَذَهَا، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ تَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالوُفُودِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَلَبِثَ عُمَرُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَلْبَثَ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: إِنَّكَ قُلْتَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ» وَأَرْسَلْتَ إِلَيَّ بِهَذِهِ الجُبَّةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَبِيعُهَا أَوْ تُصِيبُ بِهَا حَاجَتَكَ»
948 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த, பட்டு நீளங்கி ஒன்றை விலை பேசினார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெருநாளிலும், தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அலங்கரித்துக் கொள்ளலாமே! என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் ஆடையாகும் என்று கூறினார்கள். (பிறகு என் தந்தை) உமர் (ரலி) அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பியுள்ளீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதை நீங்கள் விற்றுவிடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்) என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 948
பெருநாளின் போதும், பிரமுகர்களைச் சந்திக்கும் போதும் அரிதாக அணியும் ஆடையை அது பட்டாடை என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்தார்கள். பட்டாடையாக இல்லாமல் இருந்தால் அது அனுமதிக்கப்பட்டது தான் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே அரிதாகப் பயன்படுத்தும் ஆடைக்காக செலவிடுவது வீணானதல்ல.
ஆனால் திருமணத்தைச் சிக்கனமாக நடத்த வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது. திருமணத்தின் போது இது போன்ற உடை அவசியம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டால் வசதி இல்லாதவர்களும் இதற்காகப் பணம் செலவு செய்யும் அவசியம் ஏற்பட்டு விடும். திருமணத்தின் செலவு இதனால் அதிகரிக்கும். திருமணத்துக்கு இந்த உடை அவசியம் என்ற சமுதாய நிர்பந்தம் ஏற்படுவது தான் இதில் உள்ள குற்றமாகும்.
எனவே இது போன்ற ஆடைகளைப் பொதுவாக ஒருவர் அணியலாம் என்றாலும் திருமணத்தின் சரத்துகளில் ஒன்றாக ஆக்கி மக்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பதால் இதைத் தவிர்ப்பது தான் நல்ல முஸ்லிமுக்கு அழகாகும்.
திருமணத்தில் இதுபோன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து குறைந்த செலவில் நடத்தினால் தான் இறைவனுடைய அருள் கிடைக்கும்.
مسند أحمد بن حنبل
24573 – حدثنا عبد الله حدثني أبي ثنا عفان قال ثنا حماد بن سلمة قال أخبرني بن الطفيل بن سخبرة عن القاسم بن محمد عن عائشة أن رسول الله صلى الله عليه و سلم قال : إن أعظم النكاح بركة أيسره مؤنة
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388