உயிருள்ள பொருட்களை வரையக்கூடாது எனும் பொழுது மரத்தை வரையலாமா?

கேள்வி :

உயிருள்ள உருவங்களை வரையக் கூடாது என்றும், உயிரற்ற பொருட்களை வரையலாம் என்றும் கூறுகிறீர்கள். மரம் வரையலாம் எனும் போது மரமும் உயிருள்ளது தானே!

அபூநஸீரா, துபை

பதில் :

மரத்திற்கு உயிர் உள்ளது என்றாலும் ஹதீஸ்களில் உருவங்கள் என்று கூறப்படுவது மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களைத் தான் குறிப்பிடுகின்றன.

سنن النسائي

5365 – أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: اسْتَأْذَنَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ادْخُلْ» فَقَالَ: كَيْفَ أَدْخُلُ وَفِي بَيْتِكَ سِتْرٌ فِيهِ تَصَاوِيرُ، فَإِمَّا أَنْ تُقْطَعَ رُءُوسُهَا، أَوْ تُجْعَلَ بِسَاطًا يُوطَأُ فَإِنَّا مَعْشَرَ الْمَلَائِكَةِ لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் வந்து அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே வருமாறு கூறினார்கள். உங்களது வீட்டில் உருவங்கள் பொறிக்கப்பட்ட திரைச் சீலை இருக்கும் போது நான் எப்படி உள்ளே வர முடியும்? என்று ஜிப்ரீல் கேட்டார்கள். அதன் தலை துண்டிக்கப்பட வேண்டும்; அல்லது மிதிபடக் கூடிய விரிப்பாக ஆக்கப்பட வேண்டும். ஏனென்றால் உருவங்கள் உள்ள வீட்டில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று ஜிப்ரீல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : நஸாயீ

இந்த ஹதீஸில் உருவத்தின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுவதிலிருந்து உருவம் என்பது மனிதர்கள், பறவைகள், விலங்குகளைத் தான் குறிக்கும் என்பதை அறியலாம். இதே கருத்தில் திர்மிதீயில் 2730வது ஹதீசும் இடம் பெற்றுள்ளது. அதில் உருவத்தின் தலை துண்டிக்கப்பட்டு அது மரத்தின் தோற்றத்தில் ஆக்கப்பட வேண்டும் என்று ஜிப்ரீல் கூறியதாக இடம் பெற்றுள்ளது. எனவே மரம் போன்றவை உயிருள்ளவையாக இருந்தாலும் அவற்றை வரைவதற்குத் தடையில்லை என்பதை அறியலாம்.