என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா?

என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா?

கேள்வி :

நான் பெண் வீட்டில் வரதட்சணை வாங்கவில்லை. ஆனால் பெண்ணின் தாயார்,என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்று கூறுகின்றார்கள். இதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா?

கீழத்தெரு ஹபீப் ரஹ்மான், துபை

பதில் :

ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர் அன்பளிப்பாக எதையும் வழங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை ஏற்றுக் கொள்வதா? மறுப்பதா? என்பது குறித்து அந்தப் பெண் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர அவளது கணவனுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை.

பெண்ணின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம்.

கணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி, தனது சொத்திலிருந்து கணவனுக்குச் செலவு செய்வது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கின்றார்கள் என்ற செய்தி புகாரியில் 1466வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்குப் பெண்களுக்கு உரிமை வழங்கியுள்ளது இஸ்லாமிய மார்க்கம்.

எனவே பெண்களுக்கு அவர்களது பெற்றோர் அளிக்கும் அன்பளிப்பை மறுப்பதற்கோ அல்லது இவ்வளவு நகை போட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை.

ஆனால் அதே சமயம் அந்த நகைகளையோ, அல்லது அவளது பொருளாதாரத்தையோ எதிர்பார்த்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் நான்கு நோக்கங்களுக்காக மண முடிக்கப்படுகிறாள்.  1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்ப பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே,மார்க்க நெறியுடையவளை (மணம் முடித்து) வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன் இரு கைகளும் மண்ணாகட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5090

திருமணத்தின் போது மட்டுல்லாமல் எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் தனது மகளுக்காக அன்பளிப்புகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் அதில் அவர்கள் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:

என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.  என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள்.  என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள்.  இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல்,
நூல்: புகாரி 2587

மற்றொரு அறிவிப்பில், “நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற் போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர்.  குறிப்பாக, பெண் மக்களுக்குத் திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்ப ளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.

மேலும் திருமணத்தின் போது நகை போடுவதைக் காரணம் காட்டி பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்கும் நிலையும் உள்ளது. இது போன்ற பாரபட்சங்கள் நடைபெறாமல் ஒரு பெண்ணுக்கு அவர்களது பெற்றோர் அன்பளிப்புச் செய்தால் தவறில்லை.

கேள்வி – பதில் – ஏகத்துவம், மார்ச் 2005