குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?

கேள்வி:

நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைஷி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத் தகுதி? மற்றவர்களால் ஆட்சி செய்ய முடியாதா? என்று பிற மத சகோதரர் கேட்கிறார்.

– ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை.

பதில்:

குரைஷி என்னும் குலத்துக்குத் தான் சிறப்புத் தகுதி என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறவில்லை. இது குறித்து வருகின்ற எல்லா ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது முன் அறிவிப்பாகவே இதைக் கூறிச் சென்றார்கள் என்பதை அறியலாம்.

தஜ்ஜால் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதால் அவன் சிறந்தவன் என்று கூற மாட்டோம்.

பன்னிரண்டு ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அனைவரும் குரைஷிகளாக இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : புகாரி: 7223)

தமக்குப் பின் பன்னிரெண்டு பேர் தொடர்ந்து குரைஷிக் குலத்தவராகவே ஆட்சியில் இருப்பார்கள் என்பது நடக்கவுள்ள நிகழ்ச்சியை அறிவிப்பதற்காகக் கூறப்பட்டதே தவிர சிறப்புச் சேர்ப்பதற்கு அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) கூறியவாறு உமர்பின் அப்துல் அஸீஸ் வரை 12 குரைஷியர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தனர்.

அவர்களில் கெட்டவர்களும், அநியாயக்காரர்களும் இருப்பார்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(நூல் புகாரி: 3605, 7057)

ஆட்சிக்கு வரும் குரைஷியர்களால் சமுதாயத்திற்கு அழிவும் ஏற்படும் என்பதையும் சேர்த்தே நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கிறார்கள்.

எனவே மனித குலத்தில் குரைஷிக் குலத்துக்கோ, வேறு குலத்துக்கோ எந்தத் தனிச் சிறப்பும் இல்லை .