குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா?

கேள்வி :

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா?

காதர்

பதில் :

கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. உடலுறவில் ஆண் உச்சநிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கர்ப்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறை அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

صحيح البخاري

5207 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ: «كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 5209

صحيح مسلم

3634 – وَحَدَّثَنِى أَبُو غَسَّانَ الْمِسْمَعِىُّ حَدَّثَنَا مُعَاذٌ – يَعْنِى ابْنَ هِشَامٍ – حَدَّثَنِى أَبِى عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَبَلَغَ ذَلِكَ نَبِىَّ اللَّهِ -صلى الله عليه وسلم- فَلَمْ يَنْهَنَا.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2610

இதே பிரச்சனைக்கு நவீன காலத்தில் ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதை நாம் பயன்படுத்துவது தவறல்ல.