கூட்டு துஆ கூடுமா?

கேள்வி :

கூட்டு துஆ கூடுமா?

பதில் :

கடமையான தொழுகைகளுக்குப் பிறகும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் உள்ளது. இது கூட்டு துஆ என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த வழிமுறைக்கு திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் எந்த ஆதாரமும் இல்லை.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 7:55

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்.

திருக்குர்ஆன் 7:205

இவ்வசனங்கள் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழிமுறையைக் கற்றுத் தருகின்றன.

ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால், அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கும் இங்கே கூறப்படுகிறது. முதலில், பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவது, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும் நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் ராத்திபு என்ற பெயரிலும், ஹல்கா’ என்ற பெயரிலும் பெரும் கூச்சலுடனும், ஆட்டம் பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக் கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர்.

கூட்டு துஆ கூடாது என்பது குறித்து கூடுதலாக அறிய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 192, 180 ஆகிய குறிப்புக்களைப் பார்க்கவும்.