கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா?

கேள்வி :

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா? விடுபட்ட நோன்பை அவர்கள் எப்போது வைப்பது?

பதில்:

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை உண்டு.

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.

سنن النسائي

2315 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَجُلٌ مِنْهُمْ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ يَتَغَدَّى، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ»، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ لِلْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ، وَعَنِ الْحُبْلَى وَالْمُرْضِعِ»

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: நஸாயீ

இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.

மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.

صحيح البخاري

1950 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ: «كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ»، قَالَ يَحْيَى: الشُّغْلُ مِنَ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1950

ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் குடும்பத்தில் இது நடந்துள்ளதால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்புகளை அந்தந்த வருடத்திற்குள்ளேயே வைத்து முடித்துவிட வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் அளிக்கப்பட்ட விதிவிலக்கைச் சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெற்று பிறகு இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதலையும், கணக்கிட்டால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவர்கள் ரமலானில் நோன்பு நோற்பதிலிருந்து சலுகை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

அந்த ஆண்டுக்குள்ளாகவே விடுபட்ட நோன்புகளை வைத்து முடித்துவிட வேண்டுமென்றால் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து சலுகை வழங்கியது அர்த்தமற்றதாக ஆகிவிடும். எனவே அந்தந்த வருடத்திற்குள்ளேயே அந்தந்த ஆண்டு விடுபட்ட நோன்புகளை வைத்து முடித்துவிட வேண்டும் என்ற கருத்து நோயாளிகள் மற்றும் பயணிகளுக்குத்தான் பொருந்தும்; இவர்களுக்குப் பொருந்தாது.

இருந்த போதிலும் இத்தனை வருடங்கள் தொடர்ந்து நோன்பை விட்டுவிட்டு அவற்றை மொத்தமாக வைப்பது அவர்களுக்கு மேற்கொண்டு சிரமத்தை ஏற்படுத்தி விடும் என்பதையும் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் அந்த வருடத்தில் விடுபட்ட நோன்புகளில் இரண்டு மூன்று நோன்புகளை வைத்து வந்தால் நோன்புகளை களாச் செய்வது எளிதாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் மரணத்தை எதிர்நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

கர்ப்பிணிகளும், பாலூட்டும் அன்னையரும் விட்ட நோன்புகளை நோற்கத் தேவையில்லை என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.