கடன் கொடுத்த பின் பணமதிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி :

கடன் கொடுத்த பின் பணமதிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பதில் :

கரன்ஸி நோட்டுகள் நடைமுறைக்கு வந்த பின் பணமதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இன்று ஒரு லட்சம் ரூபாய் நாம் கடனாகக் கொடுக்கிறோம். இந்தக் கடன் நமக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பக் கிடைத்தால் எண்ணிக்கையில்தான் அது ஒரு லட்சமாக இருக்கும். அதன் மதிப்பு நாம் கொடுத்த ரூபாயின் மதிப்பைவிட குறைவாகத்தான் இருக்கும். இதனால் கடன் கொடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதைக் கவனத்தில் கொண்டு இன்றைய மதிப்பில் கடனைத் திருப்பிக் கேட்கலாமா என்றால் அது கூடாது. ஏனெனில் கடன் கொடுக்கும்போது பணமதிப்பைப் பற்றி சிந்திக்காமல் ஒரு லட்சம் ரூபாய் என்ற எண்ணிக்கையைத்தான் இருவருமே கருத்தில் கொண்டார்கள்.

ஒரு பவுன் நகை 24 ஆயிரம் ரூபாயாக இருக்கும்போது நாம் ஐந்து பவுன் நகை வாங்குவதற்காக ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறோம். அவசரத்துக்காக ஒருவர் கடன் கேட்கும்போது ஒரு லட்சத்து இருபதாயிரத்தைக் கொடுக்கிறோம்.

அவர் ஆறு மாதம் கழித்து அந்தப் பணத்தைத் திருப்பித் தரும்போது ஒரு பவுன் விலை 30 ஆயிரமாகி விடுகிறது. இப்போது ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயில் ஐந்து பவுன் வாங்க முடியாது. நான்கு பவுன்தான் வாங்க முடியும். கடன் கொடுக்காமல் அப்போதே நகையாக வாங்கி இருந்தால் நாம் ஐந்து பவுன் வாங்கி இருக்க முடியும். கடன் கொடுத்ததால் நமக்கு ஏற்பட்ட நட்டம் ஒரு பவுன் அதாவது 15 ஆயிரம் ரூபாய்.

இதன் காரணமாகத்தான் கடன் கொடுப்பதற்கு பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

நாம் கடன் கொடுக்கும்போது நமக்கு நட்டம் வராத வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஐந்து பவுன் தங்கத்தின் மதிப்புக்கு உரிய தொகையை உனக்குக் கடனாகத் தருகிறேன். நீ திருப்பித் தரும்போது ஐந்து பவுன் தங்கத்துக்கு உரிய தொகை என்னவோ அதைத்தான் தர வேண்டும் என்று பேசி கடன் கொடுத்தால் அதில் தவறு இல்லை.

ரியாலாகக் கடன் கொடுத்து விட்டு இந்திய ரூபாயில் திருப்பித்தருமாறு பேசிக் கொண்டால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் ரியாலாகக் கடன் கொடுக்கும் போது நான் இந்திய ரூபாய் மதிப்பில் தான் கடன் தருகிறேன். எனவே திருப்பித் தரும் போது இந்திய ரூபாய் மதிப்பில் தான் திருப்பித் தர வேண்டும் என்று பேசிக் கொண்டால் அதன்படி திரும்பப்பெறுவது குற்றமில்லை.

உதாரணமாக ஒரு ரியால் பதினைந்து ரூபாய் என்று இருக்கும் போது நாம் 4000 ரியால்கள் ஒருவருக்குக் கடன் கொடுக்கிறோம். இந்திய ரூபாய் மதிப்பில் நாம் அறுபதாயிரம் ரூபாய்க்குச் சமமான தொகையைக் கொடுக்கிறோம். எனக்கு திருப்பித் தரும்போது அறுபதாயிரம் இந்திய ரூபாய்களுக்குச் சமமான மதிப்பில் ரியால்களைத் தர வேண்டும் என்று நாம் கருதினால் அப்படி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இப்படி ஒப்பந்தம் செய்தபின் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாகலாம். அல்லது குறையலாம்.

ஒரு ரியால் இருபது ரூபாய் என்ற அளவுக்கு ஏறி விட்டால் நாலாயிரம் ரியாலுக்கு பதிலாக மூவாயிரம் ரூபாய்களைக் கொடுக்க வேண்டும். மூவாயிரம் ரியால் கொடுத்தாலே அறுபதாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைத்து விடும்.

ஒரு ரியால் பத்து ரூபாய் என்ற அளவுக்கு இறங்கி விட்டால் நாலாயிரம் ரியாலுக்கு பதிலாக ஆறாயிரம் ரூபாய்களைக் கொடுக்க வேண்டும். ஆறாயிரம் ரியால் கொடுத்தால் தான் அறுபதாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைக்கும்.

இப்படி தெளிவுபடுத்தி பேசாமல் கடன் கொடுத்தால் கொடுத்த இந்திய ரூபாயைத் தான் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் இந்திய ரூபாயின் மதிப்பில் தான் கடன் கொடுத்தோம்.

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!

திருக்குர்ஆன் 5:1

ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான வசனங்கள், ஹதீஸ்கள் உள்ளன.

எனவே கடன் கொடுக்கும்போது எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோமோ அதே கரன்ஸியின் மதிப்பின் அடிப்படையில் வாங்க வேண்டும்.