கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா?

கேள்வி :

கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா?

ஹபீபுர்ரஹ்மான்

பதில் :

கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

السنن الكبرى للنسائي– كتاب عمل اليوم والليلة

أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، كتبنا عنه قال : حدثنا محمد بن حمير قال : حدثنا محمد بن زياد ، عن أبي أمامة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

ஆனால் சிலர் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் முஹம்மது பின் ஹிம்யர் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவரைத் தவிர இதில் இடம்பெறும் மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

இவர் விஷயத்தில் மட்டும் இவர் பலவீனமானவர் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அறிஞர்களின் ஒட்டுமொத்த விமர்சனங்களையும் சேர்த்துப் பார்க்கையில் இவர்களின் இந்த முடிவு தவறானது என்பதை அறியலாம்.

முஹம்மது பின் ஹிம்யர் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான், யஹ்யா பின் மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விஷயத்தில் நான் நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை என அஹ்மது பின் ஹம்பல் கூறியுள்ளார். நஸயீ, தாரகுத்னீ ஆகியோர் இவரிடம் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர். இப்னு ஹஜர் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று சான்றளித்துள்ளார்.

இவர் விஷயத்தில் இரண்டு அறிஞர்கள் மட்டுமே குறை கூறியுள்ளனர். அபூஹாதிம் இவரை ஆதாரமாக எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அபூஹாதிமைப் பொறுத்தவரை அறிவிப்பாளர்களைக் குறை கூறுவதில் கடினப் போக்குள்ளவர் ஆவார். இத்துடன் பலவீனத்துக்குரிய காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தவில்லை. எனவே இந்த அறிவிப்பாளர் குறித்து இவர் செய்துள்ள விமர்சனம் பல அறிஞர்களின் கூற்றுக்கு முரணாகவும், தெளிவில்லாமலும் இருப்பதால் இதை ஏற்க இயலாது. இவர் குறை கூறுவதில் நடுநிலை பேணாதவர் என்பதால் இவருடைய கூற்றை விட்டுவிட்டு மேற்கண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பதே சரி.

அடுத்து யஃகூப் பின் சுஃப்யான் என்பவர் முஹம்மது பின் ஹிம்யர் வலிமையானவர் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார். இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இந்த அறிஞரின் கூற்றையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

ஆனால் இந்த அறிஞர் செய்துள்ள விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலவீனமடைய மாட்டார். மேலும் இவர் குறித்து நல்ல விதமாகக் கூறியுள்ள அறிஞர்களின் கருத்துக்கு முரணில்லாத வகையில் யஃகூப் பின் சுஃப்யான் அவர்களின் விமர்சனத்தை நாம் புரிந்து கொள்ள இயலும்.

லைஸ பில் கவீ என்ற அரபுச் சொல்லை இவர் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் மோசமான மனனத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்காது. மாறாக இலேசான மனனத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொண்டது என்று ஹதீஸ் கலை நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஹதீஸ் கலையில் உறுதியான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகள் ஏற்கப்படுவதைப் போன்று இலேசான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகளும் ஏற்கப்படும். முரண்பாடுகள் வரும் போதே இத்தகையவர்களின் அறிவிப்புகள் பின்னுக்குத் தள்ளப்படும்.

உறுதியான மனனத் தன்மை கொண்டவர்களுக்கு அடுத்த அந்தஸ்தை இலேசான மனனத் தன்மை கொண்டவர்கள் பெறுகின்றனர்.

அறிவிப்பாளர் ஹிம்யர் முதல் தரத்தைப் பெற்றவர் அல்ல. இரண்டாம் தரத்தைப் பெற்றவர் என்ற கருத்தில் தான் யஃகூப் பின் சுஃப்யான் விமர்சனம் செய்துள்ளார்.

இவரிடம் பிரச்சனை இல்லை என நஸாயீ மற்றும் தாரகுத்னீ ஆகியோர் செய்த விமர்சனமும் இந்த அடைப்படையில் உள்ளவை தான். எனவே இவருடைய விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலவீனராக மாட்டார்.

அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் இன்னொரு தவறான வாதத்தையும் வைக்கின்றனர். இவர் தனித்து அறிவித்த எந்தச் செய்தியையும் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்யவில்லை என்பதாலும் இவர் பலவீனமானவர் என்று வாதிடுகின்றனர்.

இது மிகத் தவறான வாதமாகும். ஒரு இமாம் ஒரு அறிவிப்பாளரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் அந்த அறிவிப்பாளர் பலவீனராகி விடுவார் என ஹதீஸ் கலையில் எங்கும் சொல்லப்படவில்லை. ஹதீஸைத் தொகுப்பவர் எத்தனையோ காரணங்களுக்காக ஒருவரிடமிருந்து பதிவு செய்யாமல் இருப்பார். பலவீனம் என்பது தான் இதற்குக் காரணம் என இவர்களால் எப்படி அடித்துச் சொல்ல முடியும்?

ஏனென்றால் புகாரி அவர்கள் தனது நூலில் ஒருவரின் செய்தியைப் பதிவு செய்வதற்கு தேவையான நிபந்தனைகளைக் காட்டிலும் கூடுதலாக சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். எத்தனையோ நம்பகமானவர்கள் இந்தக் கூடுதல் நிபந்தனைக்கு உட்படவில்லை என்பதால் அவர்களிடமிருந்து புகாரி அவர்கள் பதிவு செய்யவில்லை. எனவே இவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா?

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அனைத்து அறிஞர்களின் விமர்சனங்களையும் படித்துவிட்டு அவை ஒன்றுக்கொன்று எதிராக அமைந்திருந்தாலும் அவற்றிலிருந்து தனது முடிவை சுருக்கமாக ஒரு வரியில் தெரிவிப்பார். இந்த அறிஞர் அறிவிப்பாளர் ஹிம்யரைப் பற்றி ளயீஃப் (பலவீனமானவர்) என்று குறிப்பிடாமல் நம்பிக்கைக்குரியவர். இலேசான மனனத் தன்மை கொண்டவர் என்று சான்றளித்துள்ளார்.

அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் அதிகமான அறிஞர்கள் நல்லவிதமாக கூறிய கருத்துக்களே ஏற்புடையதாக இருக்கின்றது.

எனவே கடமையான தொழுகைக்குப் பின்னர் ஆயதுல் குர்ஸி ஓதுவது சுன்னத் ஆகும்.