காபாவுக்கு தங்கத் திரை ஏன்?

கேள்வி :

கஅபாவில் தொங்கும் திரை ஏன்? அதில் தங்க வேலைப்பாடுகள் ஏன்? கஅபாவை ஏன் சுற்றி வர வேண்டும்? கஅபா தான் உலகின் முதல் பள்ளியா? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர். இதற்கு எவ்வாறு பதில் கொடுப்பது?

ஹாஜா முஹ்யித்தீன்

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே கஅபா ஆலயம் இருந்து வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது பாழடைந்திருந்த கஅபாவை அவர்களின் காலத்து மக்கள் மறு நிர்மாணம் செய்தனர். அவ்வாறு மறு நிர்மானம் செய்யும் போது கஅபாவுக்கு திரை போடப்பட்டதால் அதுவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் நீடித்தது.

கஅபாவில் சில மாற்றங்களைச் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பிய போதும் அன்றைய மக்கள் அதைச் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதால் அந்த மாறுதலைச் செய்யவில்லை.

பின்வரும் செய்தியில் இருந்து இதை நாம் அறியலாம்.

صحيح البخاري

1584 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الجَدْرِ أَمِنَ البَيْتِ هُوَ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي البَيْتِ؟ قَالَ: «إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ» قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا؟ قَالَ: «فَعَلَ ذَلِكَ قَوْمُكِ، لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ، فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ، أَنْ أُدْخِلَ الجَدْرَ فِي البَيْتِ، وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, இது கஅபாவில் சேர்ந்ததா? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். பிறகு நான் எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை? எனக் கேட்டேன். அதற்கவர்கள் உனது சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான் என்று பதிலளித்தார்கள். நான் கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற் போலாக்கியிருப்பேன் என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 1584

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதற்காக அவர்கள் வாசலைக் கூட உயரமாக ஆக்கி இருந்தனர். அந்தத் தீண்டாமையைத் தாட்சண்யமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறவே ஒழித்து விட்டனர். ஆனால் கட்டட அமைப்பை மாற்றுவதைப் பிறகு செய்யலாம் என்று கருதினார்கள். ஆனால் செய்யாமலே அவர்கள் மரணித்து விட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த விருப்பத்தை பின்னால் வந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனாலும் நான்கு கலீபாக்கள் ஆட்சியில் அவர்களின் வேலைப் பளு காரண்மாக அதை நிறைவேற்றவில்லை.

இப்னுஸ் ஸுபைர் அவர்களின் ஆட்சியில் கஅபா இடிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. இதை வரவேற்க வேண்டிய அடுத்த ஆட்சியாளர்கள் அரசியல் காரணத்துக்காக மீண்டும் இடித்து பழைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர்.

صحيح البخاري

1586 – حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: «يَا عَائِشَةُ، لَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ لَأَمَرْتُ بِالْبَيْتِ، فَهُدِمَ، فَأَدْخَلْتُ فِيهِ مَا أُخْرِجَ مِنْهُ، وَأَلْزَقْتُهُ بِالأَرْضِ، وَجَعَلْتُ لَهُ بَابَيْنِ، بَابًا شَرْقِيًّا، وَبَابًا غَرْبِيًّا، فَبَلَغْتُ بِهِ أَسَاسَ إِبْرَاهِيمَ»، فَذَلِكَ الَّذِي حَمَلَ ابْنَ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى هَدْمِهِ، قَالَ يَزِيدُ: وَشَهِدْتُ ابْنَ الزُّبَيْرِ حِينَ هَدَمَهُ، وَبَنَاهُ، وَأَدْخَلَ فِيهِ مِنَ الحِجْرِ، وَقَدْ رَأَيْتُ أَسَاسَ إِبْرَاهِيمَ حِجَارَةً، كَأَسْنِمَةِ الإِبِلِ، قَالَ جَرِيرٌ: فَقُلْتُ لَهُ: أَيْنَ مَوْضِعُهُ؟ قَالَ: أُرِيكَهُ الآنَ، فَدَخَلْتُ مَعَهُ الحِجْرَ، فَأَشَارَ إِلَى مَكَانٍ، فَقَالَ: هَا هُنَا، قَالَ جَرِيرٌ: فَحَزَرْتُ مِنَ الحِجْرِ سِتَّةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா! உனது கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லையென்றால் கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்; வெளியே விடப்பட்ட பகுதியையும் அதனுள் சேர்த்து இருப்பேன்; உயர்ந்திருக்கும் தளத்தைத் தரையோடு தரையாக்கியிருப்பேன்; மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக இரு வாசல்களை அமைத்திருப்பேன்; இதன் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் (கஅபாவை) எழுப்பியவனாய் ஆகியிருப்பேன்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்களை கஅபாவை இடிக்கத் தூண்டியது இந்தச் செய்திதான். இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் அதை இடித்துக் கட்டியதையும் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதியை அதில் சேர்த்ததையும் நான் பார்த்தேன்; மேலும் (இடிக்கும் போது) ஒட்டகத்தின் திமில்கள் போன்ற கற்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில இருப்பதைக் கண்டேன் என யஸீத் பின் ரூமான் (ரஹ்) கூறுகிறார்கள்.

நூல் : புகாரி 1586

தங்க வேலைப்பாடுகள் செய்வதும், அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடுவதும் மன்னர்கள் பெருமை அடிப்பதற்காக உண்டாக்கப்பட்டதாகும்.

இஸ்லாத்தின் சரியான கொள்கையை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் போது இந்த வேண்டாத வழிமுறையால் பாதிப்பு ஏற்படும் என்பதை மன்னர்கள் உணர்வதாக இல்லை.

உலகில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் இறைவனை வழிபடுவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் என்பதால் மற்ற இடங்களில் இருந்து வேறுபட்ட முறையில் ஒரு வழிபாடு நடக்க வேண்டும் என்று இறைவன் கஅபாவைச் சுற்றி வரும் வணக்கத்தை ஏற்படுத்தியுள்ளான்.

வணக்க வழிபாடுகளுக்குக் காரணம் கூற முடியாது. இறைவன் எவ்வாறு வணங்கச் சொல்கிறானோ அவ்வாறு வணங்க வேண்டும் என்று தான் பதில் கூற முடியும். தொழுகையில் ஏன் நிற்க வேண்டும்? ஏன் குணிய வேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது.

ஒரு மனிதன் ஒன்றை விரும்புகிறான் என்றால் அதற்குரிய காரணத்தை நாம் கண்டு பிடிக்க முடியாது. ஒரு தலைவன் மஞ்சள் துண்டை விரும்பினால் எல்லோரும் அவருக்கு மஞ்சள் துண்டைத் தான் போடுவார்கள். அவர் ஏன் அதை விரும்புகிறார் என்று கேட்க முடியாது. மனிதனிடமே கேட்க முடியாது என்றால் தன்னை எவ்வாறு வணங்கினால் இறைவனுக்குப் பிடிக்குமோ அவ்வாறு வனங்கி விட்டுப் போக வேண்டும். அவ்வளவு தான்.