கேள்வி :
இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா?
பதில்
நம் நாட்டில் உள்ள சில இஸ்லாமிய நிறுவனங்களும் அபுதாபி போன்ற சில முஸ்லிம் நாடுகளில் உள்ள வங்கிகளும் ஷரீஅத் பைனான்ஸ் என்ற பெயரில் தந்திரம் செய்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கின்றன.
இஸ்லாமிய வங்கி என்று தங்களைக் கூறிக் கொள்ளும் இந்த நிறுவனத்திடம் ஒருவர் கார் வாங்க பத்து லட்சம் ரூபாய் கடனாகக் கேட்டால் காரை நாங்களே வாங்கித் தருகிறோம் என்று சொல்வார்கள்.
பத்து லட்சம் ரூபாய்க்கு இவர் கேட்ட காரை வாங்கி இவரிடம் 11 லட்சத்துக்குக் கொடுப்பார்கள். இவர் குறிப்பிட்ட காலத்துக்குள் 11 லட்சத்தைக் கட்ட வேண்டும்.
வியாபாரம் என்ற பெயரில் வட்டி வாங்குவதற்காக இவ்வாறு தந்திரம் செய்கின்றனர்.
10 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் காரை 11 லட்சம் கொடுத்து எந்த அறிவாளியும் வாங்க மாட்டார். கடன் கிடைக்கிறது என்பதற்காகவே பத்து லட்சம் மதிப்புள்ள காருக்கு மேற்படி வங்கிக்கு 11 லட்சத்தைச் செலுத்துகிறான்.
கடனுக்காக கூடுதல் தொகையை செலுத்துவது தான் வட்டி ஆகும். இந்த அம்சம் இந்த பைனான்ஸில் உள்ளது.
மேலும் இந்த நிறுவனம் வாகனங்களை விற்கும் தொழிலைச் செய்யவில்லை. தான் கொடுக்கும் கடன் தொகைக்கு கூடுதல் பணத்தை பெறுவதற்காகவே வாகனத்தை வாங்கி தந்திரம் செய்கின்றது.
இதில் வட்டி என்ற அம்சத்தோடு மார்க்கம் தடைசெய்துள்ள இன்னொரு அம்சமும் அடங்கியுள்ளது. இருவருக்கு மத்தியில் வியாபாரம் நடக்கும் போது தேவையில்லாமல் இடையில் குறுக்கிட்டு பொருளின் விலையை உயர்த்திவிடுவது கூடாது.
பத்து லட்சம் ரூபாய்க்கு கார் வாங்க நினைப்பவரிடம் இந்த நிறுவனம் குறுக்கிட்டு பதினோறு லட்சமாக காரின் விலையை உயர்த்தி விடுகின்றது. இந்த அடிப்படையில் இது தவறான முறையாக உள்ளது.
எனவே இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் கொடுத்த பணத்தை விட கூடுதலாக பணம் நம்மிடம் வாங்குவார்களேயானால் அவர்களிடம் நாம் கடன் வாங்கக் கூடாது. இது தெளிவான வட்டியாகும்.