கேள்வி :
எங்கள் பக்கத்து வீட்டு இந்து நண்பரிடம் எனக்கு நீண்ட நாளாக பழக்கம் உண்டு. அவரிடம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தேன். குர்ஆனையும் அவருக்கு படிக்கக் கொடுத்தேன். அவருக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. அதில் இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும், மனிதனை மனிதன் கொன்று குவிப்பதையும், பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவதையும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதாக சிறப்பித்துக் கூறுவதா? இது இறைவனின் மகா கருணைக்கு இழுக்காக இல்லையா? என்று கேட்கிறார் விளக்கம் தரவும்.
– எம். முஹம்மது மூஸா, மதுரை.
பதில் :
போர் செய்யுமாறு கட்டளையிடும் வசனங்களைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.
அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.
திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு மரண தண்டனை, அல்லது நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போர் குறித்த வசனங்களும் இது போல் அரசின் மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர தனி நபர்கள் மற்றும் குழுக்கள் மீது சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.
4:75 வசனத்தில் பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது? என்று கூறப்படுகிறது. பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொணாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு தப்பித்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.
ஆயினும் அவர்களை அழைத்துப் போர் செய்யுமாறு கட்டளையிடாமல், அவர்களுக்காக நீங்கள் ஏன் போர் செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்கு திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் போரிடுமாறு அந்தப் பலவீனர்களுக்குத் தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
8:60 வசனத்தில் பலவிதமான போர்த் தளவாடங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும்.
இஸ்லாமிய அரசு அமைந்து, போர் செய்ய வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து, போர் செய்வதற்கான படை பலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது.
எதிரிகளின் படை பலத்தில் பத்தில் ஒரு பங்குதான் போதுமான படை பலமாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
(பார்க்க :திருக்குர்ஆன் 8:65)
பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படை பலத்தில் பாதி படை பலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச்செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது தான் குர்ஆனின் கட்டளை.
(பார்க்க : திருக்குர்ஆன் 8:66)
படை பலம் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூட போரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?
இதனால் மிகப்பெரிய இழப்புகள் தான் சமுதாயத்துக்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருக்க முடியாது. அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத் தான் கடைபிடித்தனர். மதீனாவுக்குச் சென்று ஆட்சியும் அமைத்து போர் செய்வதற்கான காரணங்கள் ஏற்பட்ட போது தான் போர் செய்தனர்.
இதை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து நடந்து கொண்டால் மக்கள் இஸ்லாத்தை நோக்கி தம் பார்வையைத் திருப்புவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே அரசாங்கத்தின் மீது தான் தேவையேற்படும் போது போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறிகொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள்.
இதன் பிறகும் மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சியிருந்தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதித்தான்.
எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் நாட்டுடன் கடைபிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை மேற்கொண்டது.
கொல்லுங்கள்! வெட்டுங்கள் என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்!
(பார்க்க : திருக்குர்ஆன் 2:190, 9:13)
சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்!
(பார்க்க : திருக்குர்ஆன் 2:191, 22:40)
போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை!
(பார்க்க : திருக்குர்ஆன் 2:192)
அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்!
(திருக்குர்ஆன் 4:75, 22:39-40)
சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை!
(பார்க்க : திருக்குர்ஆன் 8:61)
மதத்தைப் பரப்ப போர் இல்லை!
(பார்க்க : திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6)
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.
சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது.
போரை முதல் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது.
(பார்க்க : திருக்குர்ஆன் 2:190, 9:12,13)