கேள்வி:
இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தனி மனிதனிடம் ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவதில்லை. ஒரு மதம் ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்களை அது அவனின் முன் ஜென்ம வினை (ஊழ்வினை) என்று ஒதுங்கிக் கொள்கிறது. மற்றொரு மதமோ என்ன தவறு செய்துவிட்டாலும் பாவ மன்னிப்பு பெற்றுவிட்டால் போதும் என்கிறது. எனவே, இம்மதங்கள் தோற்றுப்போகவோ, அழியவோ வழியில்லை.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம் தனிமனிதனுக்கு ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைப்பிடிக்க கடுமையாக வலியுறுத்துகிறது. ஆனால் அதை அட்சரம் பிசகாமல் கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் மிக மிகச் சொற்பமாக இருக்கலாம். மற்றவர்கள் முஸ்லிம் வேடதாரிகளே. முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் முஸ்லிம் பெயர் தாங்கிகளே. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் அடிப்படையில் தோற்று விட்டது எனக் கருதலாமா?
எம்.எஸ். இஸ்மாயீல் ஹுஸைன், கருங்கல்பாளையம்.
பதில்:
எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை வைத்து ஒரு சித்தாந்தத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடாது. அது அறிவுடைமையும் அல்ல.
மாறாக, அது ஏற்படுத்தும் விளைவுகளின் அடிப்படையில் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க வேண்டும்.
பலவித நோய்களையும் நீக்கக்கூடிய அருமருந்து ஒன்று உள்ளது என வைத்துக் கொள்வோம்.
இம்மருந்தை பலரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை;
வேறு சிலர் இம்மருந்தை வாங்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தாமல் உள்ளனர்;
இன்னும் சிலர் அதைப் பயன்படுத்தினாலும் அரைகுறையாக ஏனோ தானோ என்று பயன்படுத்துகிறார்கள்;
மிகச் சிலர் மட்டும் அம்மருந்தைப் பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்துகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தாலும் இம்மருந்தைப் பயன்படுத்தியதால் மற்றவர்களை விட ஆரோக்கியமாக இவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மருந்து தோற்று விட்டது என்று நாம் கூற மாட்டோம். மாறாக அதன் மகத்துவத்தை உணராத மனிதர்கள் தோற்று விட்டார்கள் என்றே கூறுவோம்.
இதுபோல் தான் இஸ்லாம் என்னும் மருந்தை முழுமையாகவும், சரியாகவும் பயன்படுத்துகின்றவர்களிடம் நேர்மை, நாணயம், ஒழுக்கம், சிறந்த பண்பாடுகள், வீரம், துணிவு, பொது நலநோக்கு என்று பல சிறப்புத் தகுதிகள் காணப்படுகின்றன.
அரைகுறையாகப் பயன்படுத்தக் கூடியவர்களிடம் கூட மற்றவர்களிடம் காணப்படுகின்ற அளவுக்கு மூடநம்பிக்கைகள் இல்லை.
மற்ற சமுதாயத்தின் பண்டிதர்கள் கூட தீண்டாமையை ஊக்குவிக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் உள்ள பாமரனும் கூட அதைத் தவறு என்று உணர முடிகின்றது.
இப்படி ஆயிரமாயிரம் நன்மைகளை இம்மார்க்கம் மக்களிடம் உருவாக்கியுள்ளது. அந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தை எடை போட வேண்டும். எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்ற அடிப்படையில் எடை போடக் கூடாது.
இந்த அளவுகோல் இஸ்லாத்திற்கு மட்டுமில்லை. எந்தக் கொள்கைக்கும் இதைத் தான் அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் ஒரு கோணத்தில் கேள்வி கேட்கிறீர்கள். இப்படிக் காரண காரியத்துடன் கேள்வி கேட்பவர்கள் உலகில் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் உங்கள் கேள்வியோ அல்லது நீங்களோ தோற்று விட்டீர்கள் என்று கூற முடியாது.
எனவே சரியான அளவுகோலில் எடை போட்டால் இஸ்லாம் மாபெரும் வெற்றி பெற்று விட்டது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.