கேள்வி
25:64 வசனத்தில் நல்லடியார்களைப் பற்றிக் கூறும் போது, இறைவனை வணங்கியவர்களாக இரவைக் கழிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சில நபிமொழிகளில் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பவர்கள் இந்த நபிமொழிக்கு மாறு படுகின்றார்களே! விளக்கவும்.
அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.
திருக்குர்ஆன் 25:64
பதில்
திருக்குர்ஆனில் ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமையும். இந்த வசனத்தில் இரவைக் கழிப்பார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் இதே கருத்தில் இடம் பெற்றுள்ள வேறு சில வசனங்கள் இரவின் ஒரு பகுதியில் நின்று வணங்குவதைப் பற்றியே குறிப்பிடுகின்றன.
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசு வோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
திருக்குர்ஆன் 3:17
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
திருக்குர்ஆன் 51:18
இந்த வசனங்களும் நல்லடியார்களைப் பற்றியே கூறுவதால் 26:64 வசனத்திற்கு இவை விளக்கமாக அமைந்துள்ளன. இந்த வசனங்களில் இரவு முழுவதும் வணங்குமாறு இறைவன் கூறவில்லை. இரவின் ஒரு பகுதியில், குறிப்பாக இரவின் கடைசிப் பகுதியில் வணங்குவதைத் தான் சிறப்பித்துக் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் மூன்று பகுதிகளில் மூன்றாவது பகுதியில் வணங்குவதைப் பற்றி மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
இதை விளங்கிக் கொண்டால் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து இடம் பெறும் ஹதீஸ்களுக்கும் இந்த வசனங்களுக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்பதை விளங்கலாம்.