வருமான வரியில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

கேள்வி :

வருமான வரியை குறைத்து செலுத்த எல்.ஐ.சி, முட்சுவல் பன்ட் போன்றவை போடலாமா? அல்லது வேற வழி இருக்கிறதா?. நான் ஹலாலான முறைப்படி வாழ விரும்புகின்றேன். பதில் தரவும்?

ஹிதாயதுல்லாஹ்

பதில் :

நம்முடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு நாட்டுக்கு வரி செலுத்த வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது இஸ்லாம் விதித்த விதிமுறையல்ல.

இந்த வரியைக் கொடுக்க வேண்டும் என்றோ கொடுக்கக் கூடாது என்றோ இஸ்லாம் கூறவில்லை. ஒருவர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைச் செலுத்தாவிட்டால் இதன் காரணத்தால் அவருடைய செல்வம் ஹராமான செல்வமாகி விடாது.

ஆனால் உலக ரீதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவரே பொறுப்பாளியாவார். இதனால் அவருக்கு ஏற்படும் சிக்கல்களை அவரே எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் சம்பாதிக்கும் செல்வங்களுக்கு ஸகாத் என்ற வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இந்த வரியைச் செலுத்தினால் தான் நமது வருமானம் ஆகுமானதாகும்.

ஆனால் வருமான வரியில் இருந்து தப்பிக்க மூச்சுவல் பண்ட் போன்ற வகையில் முதலீடு செய்வது தவறாகும். அது வட்டியை அடிப்படையாகக் கொண்ட முதலீடாகும். மார்க்கம் தடுக்காத வழிகளைப் பயன்படுத்தி நீங்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து சட்டப்பூர்வமாக தப்பிக்க பல வழிகள் உள்ளன. நல்ல கணக்காளரிடம் ஆலோசனை கேட்டால் அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.