இந்துக்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறதா?

கேள்வி :

இந்துக்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறதா?

பதில் :

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காஃபிர்கள் என்றும், முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.

அதாவது இந்துக்களைக் காஃபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காஃபிர்கள் தாம் என்பது உண்மையே.

ஆனால் காஃபிர்கள் என்றால் அது ஏசும் சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை.

காஃபிர் என்பதற்கு கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும். அப்படியெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை.

காஃபிர் என்ற அரபுச் சொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர், ஏற்காதவர் என்பது தான். இஸ்லாத்தை ஏற்றவர்களை முஸ்லிம்கள் (ஏற்றவர்கள்) என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்காதவர்களை ஏற்காதவர்கள் (காஃபிர்கள்) எனக் கூறுகிறது. ஏற்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூற முடியாது. ஏற்காதவர்கள் என்று தான் கூற முடியும். இதில் ஏசுவது ஒன்றுமே இல்லை.

இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும் போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏச்சாக யாரும் கருத மாட்டார்கள். இது போன்ற வார்த்தைப் பிரயோகமே காஃபிர் என்பது.

சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும் போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறது. முஷ்ரிக் என்றால் பல கடவுள்களை நம்புபவர்கள் என்பது பொருள். பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைத் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. பல கடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று தானே கூற முடியும்! இது எப்படி ஏச்சாக ஆகும்!

இந்துக்களையோ, இன்ன பிற மக்களையோ வசைச் சொற்களால் குர்ஆன் ஏசவில்லை என்பது தான் உண்மை.