கேள்வி :
பெரும்பாலான வெளிநாடுகளில் ஃபிரீ கால் (FREE CALL) என்றொரு சாப்ட்வேரைப் பயன்படுத்தி போன் செய்கின்றார்களே இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? உள்ளதென்றால் அந்த நாடு அதைத் தடை செய்தாலும் பயன்படுத்தலாமா?
கடையநல்லூர் மசூது
பதில்:
ஃப்ரீ கால் என்பது இணையதளத்தைப் பயன்படுத்தி ஒருவர் இன்னொருவரிடம் இலவசமாகப் பேசிக் கொள்வதாகும். இவ்வாறு பேசுவதால் நாம் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. யாருடைய பொருளையும் முறைகேடாகப் பயன்படுத்தவுமில்லை.
இவ்வாறு பேசும் போது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருமானம் குறையும் என்பதால் அரசாங்கம் இதைத் தடை செய்கின்றது. இந்த நிறுவனங்கள் நன்கு சம்பாதிப்பதற்காக மக்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவது அநியாயமாகும்.
நவீன கண்டுபிடிப்புகளாலும், விஞ்ஞான வளர்ச்சியினாலும் எத்தனையோ குடிசைத் தொழில்கள் நலிவடைந்து விட்டன. இந்த குடிசைத் தொழிலாளர்களுக்காக நவீன கண்டுபிடிப்புகளை எந்த நாடும் தடை செய்வதில்லை. இது போன்று மக்களுக்கு நன்மை தருகின்ற எந்த ஒரு அம்சத்தையும் தடை செய்வது கூடாது.
மக்களைப் பாதிக்கும் அநியாயமான சட்டங்களை ஒரு நாடு இயற்றுமானால் அதற்கு அடிபணிவது மார்க்கக் கடமை அல்ல. ஆனால் இது போன்ற தடைகளை மீறும் போது அரசாங்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை நாம் தாங்கிக் கொள்ள இயலுமா என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.