கேள்வி :
குழந்தை பிறந்து ஏழாம் நாள் தலை முடியை மழிக்க வேண்டும். ஆனால் குழந்தை தலை மிருதுவாக இருப்பதால் மழிக்க அச்சமாக உள்ளது. கத்தியால் மழிக்காமல், கத்தரிக் கோலா, அல்லது டிரிம்மர் மெசினால் குழந்தையின் தலை முடியை டிரிம் செய்யலாமா?
கொடிநகர் ஹனிஃப்- சவூதி
பதில் :
குழந்தை பிறந்த ஏழாவது நாளில் குழந்தையின் தலை முடி மழிக்கப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
2455حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ غُلَامٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى رواه أبو داود
ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்பட வேண்டும். அதன் முடி மழிக்கப்பட்டு அதற்குப் பெயர் சூட்டப்பட வேண்டும்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)
நூல் : அபூதாவூத்
குழந்தையின் தலைமுடியை வெட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை மழிக்க வேண்டும் என்றே கூறியிருக்கிறார்கள். மழிப்பதை விட்டுவிட்டு முடியை நீங்கள் குறைத்தால் இந்த நபிவழியை உங்களால் செயல்படுத்த முடியாது. முடியை மழிப்பது தான் நபி வழியாகும்.
அதே நேரத்தில் குழந்தையின் மண்டை ஓடு மிக மெல்லியதாக இருக்கும் பட்சத்தில் முடியை மழித்தால் அது குழந்தைக்குக் கேடு விளைவிக்கும் என்று இருக்குமேயானால் அதை விட்டுவிடுவது தான் சரியான செயலாகும். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான்.
உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.
திருக்குர்ஆன் 2:195
உங்களை நீங்களே சாகடித்துக் கொள்ளாதீர்கள்.
திருக்குர்ஆன் 4:29
حدثنا سَعِيدُ بنُ مَنْصُورٍ قال أخبرنا أبُو شِهَابٍ عَبْدُ رَبِّهِ بنُ نَافِعٍ عنْ الْحَسَنِ بنِ عَمْرٍو الْفُقَيْمِيِّ عنْ الْحَكَمِ بنِ عُتَيْبَةَ عنْ شَهْرِ بنِ حَوْشَبٍ عن أُمِّ سَلَمَةَ ، قالَتْ: نَهَى رَسُولُ الله صلى الله عليه وسلّم عن كُلِّ مَسْكِرٍ وَمُفْتِرٍ اسم الكتاب: سنن أبي داوود
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதை தரக்கூடிய ஒவ்வொன்றையும் விட்டும், கேடு தரக்கூடிய ஒவ்வொன்றையும் விட்டும் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல்: அபூதாவூத்
மிக மெல்லியதாக உள்ள மண்டை ஓட்டில் உள்ள முடியை மழிப்பதால் குழந்தைக்குக் கேடு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுவார்களேயானால் அவர்களது ஆலோசனைப்படி அதை விட்டு விடுவது தான் சிறந்ததாகும்.