கேள்வி :
ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன் கொண்டாடக் கூடாது? என்று பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.
எஸ். செய்யது அலி ஜின்னா, மும்பை – 72
பதில் :
முஸ்லிம்கள் செய்யும் ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்த உதவாது. இஸ்லாத்தில் மீலாது விழா என்பது கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறந்த நாள் கொண்டாடவில்லை. நான்கு கலீஃபாக்களும் கொண்டாடவில்லை. நான்கு இமாம்கள் உள்ளிட்ட ஏராளமான இமாம்களும் மீலாது விழா கொண்டாடவில்லை.
அப்துல்லாஹ்வின் மகனாகப் பிறந்த முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்டதைத் தான் முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டு இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த இரவு லைலத்துல் கத்ர் எனப்படுகிறது. அந்த இரவு தான் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று இஸ்லாம் கூறுகிறது.
முஹம்மது நபி அவர்கள் பிறந்து இறைத்தூதராக நியமிக்கப்படாவிட்டால் அவர்களுக்கு இந்த வரலாறு இருந்திருக்காது.
ஈஸா நபியின் பிறந்த நாள் கொண்டாடுவதும், நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கொண்டாடுவதும், மற்ற எவருடைய பிறந்த நாள் கொண்டாடுவதும் இஸ்லாத்திற்குச் சம்பந்தமில்லாதது.
பிறந்த நாளுக்கு ஏதாவது மதிப்பு இஸ்லாத்தில் இருந்திருந்தால் இஸ்லாமிய வரலாறு நபிகள் நாயகத்தின் பிறப்பிலிருந்து ஆரம்பித்திருக்கும். ஆனால் இஸ்லாமிய ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53-ஆம் வயதிலிருந்து உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் ஆரம்பமாகிறது.
அதாவது அவர்கள் பிறந்த ஊரைத் துறந்து மதீனாவுக்குப் புறப்பட்டது தான் ஹிஜ்ரி ஆண்டின் ஆரம்பம். இதிலிருந்தே பிறந்த நாளுக்கு இஸ்லாம் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை என்பதை அறியலாம்.