செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா?

கேள்வி :

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா?

ஹிதாயதுல்லாஹ்

பதில் :

சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

ரிங்டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர். இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்றும் கூறுகின்றனர்.

குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் இவர்களின் வாதத்தை ஏற்கலாம். தொழுகையை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடை உள்ளது போல் குர்ஆன் ஓதுவதை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடையேதும் இல்லாத போது இவர்கள் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல.

நாம் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கதவைத் தட்டுகிறார் என்றால் குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு கதவைத் திறக்கலாமா என்றால் திறக்கலாம் என்று தான் இவர்களே கூறுவார்கள். இதனால் குர்ஆனை அவமதித்து விட்டார் என்று ஆகாது. ஒருவர் ஒரு தேவைக்காக நம்மைத் தொடர்பு கொள்ளும் போது அதற்குப் பதிலளிப்பது என்பது குர்ஆன் கற்றுத் தரும் பண்பாட்டுக்கு ஏற்றது தான்.

நாம் குர்ஆன் ஓதும்போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் ஓதுவதை நிறுத்தி விட்டு பதில் சொல்ல வேண்டும். இது குர்ஆனை அவமதித்ததாக ஆகாது.

ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதற்காக குர்ஆனை இடையில் நிறுத்துவது எந்த வகையிலும் குர்ஆனை அவமதித்ததாக ஆகாது. குர்ஆன் வழிகாட்டுதலை மதித்தததாகத் தான் ஆகும். இடையில் நிறுத்தக் கூடாது என்று கட்டளை இருந்தால் மட்டுமே அது குர்ஆனை அவமதித்ததாக ஆகும்.

தொலை பேசியில் வரும் ரிங்டோனும் ஒரு அழைப்பு தான். அந்த அழைப்புக்குப் பதில் சொல்வதற்காக நாம் ரிங்டோனை நிறுத்துகிறோமே தவிர குர்ஆனை அவமதிப்பதற்காக அல்ல.

இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் போது அதைத் தவிர்க்க வேண்டுமே என்ற இறையச்சத்தின் காரணமாகவே அதிகமானோர் குர்ஆனை ரிங்டோனாக வைத்துக் கொள்கின்றர். இந்த ஃப்தவாவினால் மீண்டும் பாடல்களை ரிங் டோனாக மாற்றும் நிலைக்குத் தள்ளுகின்றனர்.

செல்போனை கழிவறைக்குள் கொண்டு செல்லும் நிலை ஏற்படும். அப்போது குர்ஆன் ரிங்டோன் ஒலிக்குமே இது சரியா என்றும் சிலர் கேட்கின்றனர்.

இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல்போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட், குர்ஆன் அரபி மூலம், மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன. மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுவதில்லை.

கழிவறை செல்லும் போது குர்ஆன் ஒலிக்கும் என்பதால் குர்ஆனை ரிங்டோனாக வைக்கக் கூடாது என்றால் குர்ஆன் சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போனையும் பயன்படுத்தக் கூடாது என்று கூற வேண்டும். ஆனால் குர்ஆனை ரிங்டோனாக வைக்கக் கூடாது எனக் கூறுவோர் குர்ஆன் சாப்ட்வேர் விஷயத்தில் இப்படி கூறுவதில்லை.

கழிவறை செல்லும் அவசியம் உள்ளதால் குர்ஆன் சாப்ட்வேர் உள்ள போனை பயன்படுத்தக் கூடாது என்று இவர்கள் கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேணுதலாக நடக்க வேண்டும் என்று விரும்புவோர் கழிவறைக்குள் நவீன செல்போன்களைக் கொண்டு செல்லாமல் தவிர்த்துக் கொள்ளலாமே தவிர குர்ஆனை ரிங்டோனாக வைக்கலாகாது என்று கூறுவதை ஏற்க முடியாது.