கேள்வி :
பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன?
சலீம் கான்
பதில் :
மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன.
அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வணக்கம் தான் நஃபிலாக இருக்க முடியும். நாமாக ஒரு வணக்கத்தை உருவாக்கி அதை நஃபில் என்று சொல்லிக் கொள்ள முடியாது.
மார்க்கத்தில் உள்ள ஒரு வணக்கத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வசதிக்கும், வாய்ப்புக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப செய்வது நஃபிலாகும்.
யாரோ ஒருவர் நிர்ணயம் செய்த நேரத்திலும், அளவிலும் மற்றவர்களும் செய்வது பித்அத் ஆகும்.
ஒருவர் தனக்கு விருப்பமான நாளில் நேரத்தில் குறிப்பிட்ட ரக்அத்கள் தொழுதால் அது நஃபில் ஆகும். அனைவரும் குறிப்பிட்ட நாளில் 20 ரக்அத் அல்லது குறிப்பிட்ட ரக்அத்கள் தொழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அது பித்அத் ஆகிவிடும்.
ஒருவர் தானாக விரும்பிச் செய்யாமல் மற்றவர் தீர்மானித்ததைப் பின்பற்றும் போது அல்லாஹ்வின் தூதருக்கு கொடுத்த இடம் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுவதால் அது பித்அத் ஆகிவிடுகிறது.
அதாவது மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்றை வணக்கம் என்று சொன்னாலும் அது பித்அத் ஆகும். மார்க்கத்தில் சொல்லப்பட்ட வணக்கத்தின் அளவையும், நேரத்தையும் ஒருவர் தீர்மானித்து மற்றவர் மீது தினிப்பதும் பித்அத் ஆகும்.
உதாரணமாக ஒருவர் ஒரு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இரண்டு ரக்அத்களை தானாக விரும்பித் தொழ எண்ணுகிறார். அவ்வாறே தொழுகிறார். இது நஃபிலாகும்.
வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு 4 ரக்அத் தொழுவது நல்லது என்று பிரச்சாரம் செய்யப்பட்டால், அல்லது யாரும் பிரச்சாரம் செய்யாமலே அந்தக் கருத்து மக்களிடம் நிலைபெற்று விட்டால் அது பித்அத் ஆகும்.
ஏனெனில் அனைவரும் ஒன்றைச் செய்வது நல்லது என்று தீர்மானம் செய்வது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் உள்ள அதிகாரமாகும். அதை மற்றவர்களுக்குக் கொடுத்தாலோ ,அல்லது மற்றவர்கள் எடுத்துக் கொண்டாலோ அது பித்அத் ஆகிவிடுகிறது.
உபரியான வணக்கத்துக்கு அனுமதி அளிக்கும் ஹதீஸில் நீயாக விரும்பிச் செய்தால் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பதில் இருந்து இதை அறியலாம்.