கேள்வி :
வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா?
பதில் :
நம்முடைய சேமிப்புக்கு வங்கிகள் தரும் வட்டியை வாங்கக் கூடாது என்பதால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது.
வங்கிகள் தங்களின் இருப்புகளை வட்டிக்குக் கொடுக்கின்றனர். அதற்கு நாம் துணை போகக் கூடாது என்ற காரணத்தால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். நமது பொருளைப் பாதுகாப்பதற்காகத்தான் வங்கியில் சேமிக்கிறோம். அதை அவர்கள் வட்டிக்குக் கொடுத்தால் அந்தக் குற்றம் நம்மைச் சேராது. இப்படி இஸ்லாம் நமக்கு வழிகாட்டவில்லை.
ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக்காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டி கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 3:75
யூதர்கள் வட்டித் தொழில்தான் செய்து வந்தனர் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.
பார்க்க : திருக்குர்ஆன் 4:161
அவர்கள் வட்டித் தொழில் செய்வதால் அவர்களிடம் எந்தப் பொருளையும் நம்பி ஒப்படைக்காதீர்கள்; அவர்கள் அதை வட்டிக்குப் பயன்படுத்துவார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக் அந்த யூதர்களில் நாணயமானவர்களும் உள்ளனர்; நம்பி ஒப்படைக்கப்படும் பொருட்களை நாணயமாகத் திருப்பித் தருவார்கள் என்று கூறுகிறான்.
எனவே வங்கியில் நாம் சேமிக்கும் பணத்தை அவர்கள் வட்டிக்கு விடுவார்கள் என்பதால் வங்கியில் கணக்கு வைப்பது தவறு எனக் கூற முடியாது.
நம்முடைய நாட்டில் உள்ள சட்டப்படி பெரிய தொகைகளைக் கையில் வைத்திருப்பது பொருளாதாரக் குற்றமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக பெரிய தொகைகளை வங்கியில் பாதுகாத்து வைப்பது நிர்பந்தமாகவும் ஆகி விடுகின்றது.
ஒருவர் காசோலையாக, அல்லது வரைவோலையாக நமக்குப் பணம் தந்தால் அந்தப் பணத்தை நம்முடையதாக ஆக்கிக் கொள்ள வங்கியில் கணக்கு வைப்பது அவசியமாகின்றது. இல்லாவிட்டால் நம்முடைய பணம் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இந்தக் காரணத்துக்காகவும் வங்கியில் கணக்கு வைப்பது சிலருக்கு அவசியமாகி விடுகின்றது.
மேலும் வெளியூர்களுக்குச் செல்லும்போது அதிகமான பணத்தைக் கையில் வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல. பணமாக வைத்திருப்பது நம்முடைய உயிருக்குக்கூட கேடாக ஆகிவிடும். வங்கியில் கணக்கு வைத்திருந்தால் நமக்குத் தேவைப்படும் பணத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.
இதுபோல் மார்க்கம் அனுமதித்துள்ள பல காரியங்களை வங்கியில் கணக்கு வைத்திருப்பதன் மூலம் நாம் சாதித்துக் கொள்ள முடியும். எனவே வங்கியில் கணக்கு வைப்பதைத் தடுக்க எந்த முகாந்திரம் இல்லை.
குறிப்பு இன்றைய சூழலில் வங்கியில் நாம் சேமிக்கும் பணத்தைத் தர மறுக்கும் அளவுக்கு ஆட்சியாளர்களின் மனப்போக்கு மாற வாய்ப்பு உள்ளதால் இயன்றவரை வங்கிகளில் நமது பணம் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்பானது.